தி கேரளா ஸ்டோரி : முதல்வர் ஸ்டாலினை பிரதமர் மோடி பாராட்டியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய பிரதமர் மோடி.. “தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அமைந்துள்ளது” தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு பாதுகாப்பு அளித்த ஸ்டாலினின் செயல் துணிச்சல் மிக்கது – பிரதமர் மோடி
மதிப்பீடு
விளக்கம்
நாடு முழுவதிலும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் வழக்குகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று(மே 5) திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தது.
மேலும், கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைக் குறிப்பிட்டு காங்கிரசை விமர்சித்து இருந்தார். இதையடுத்து திரைப்படம் வெளியான நாளில் தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு பாதுகாப்பு அளித்த ஸ்டாலினின் செயல் துணிச்சல் மிக்கது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூட்டுக் களவாணிகளின் சதிச்செயலில் இருந்து தமிழினம் தப்ப வேண்டும்.
புறக்கணிப்போம் படத்தை மட்டுமல்ல, இந்த இரண்டு நடிகர்களையும் தான்!#BanTheKeralaStory pic.twitter.com/dzkbsNFs2H
— பொன்ராஜ் ராமையா (@rponraj) May 5, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி சேனலின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், மே 5ம் தேதி பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய செய்தியே வெளியாகி இருக்கிறது.
அதில், ” “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அமைந்துள்ளது. தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாத போக்குடன் நிற்கிறது. வாக்கு வங்கிக்காக தீவிரவாதத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாத்துள்ளது – பிரதமர் மோடி ” என்றே இடம்பெற்று இருக்கிறது.
தந்தி டிவி தரப்பில் வெளியான நியூஸ் கார்டில், கேரளா ஸ்டோரி படத்திற்கு பாதுகாப்பு அளித்ததற்காக முதல்வர் ஸ்டாலினை பிரதமர் பாராட்டியதாக போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பிரச்சாரமாக்கிய பிரதமர்.. 32,000 பெண்கள் என்பதை நீக்குகிறோம் என்ற படத்தின் தயாரிப்பாளர் !
மேலும் படிக்க : “தி கேரளா ஸ்டோரி” எனும் திரைப்படத்தின் டீசரை உண்மைப் போல் பரப்பும் வலதுசாரிகள்
முடிவு :
நம் தேடலில், தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பாதுகாப்பு அளித்த ஸ்டாலினின் செயல் துணிச்சல் மிக்கது என பிரதமர் மோடி பாராட்டியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.