கேரளாவில் இறந்த பபியா முதலை என ஒன்றிய இணை அமைச்சர் பதிவிட்ட தவறான புகைப்படம் !

பரவிய செய்தி

ஸ்ரீ அனந்தபுரம் ஏரி கோவிலில் கடவுளின் சொந்த முதலையான பபியா விஷ்ணு பாதத்தை அடைந்துள்ளது. கோவிலின் ஏரியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த தெய்வீக முதலை ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின் அரிசி மற்றும் வெல்லம் பிரசாதத்தை சாப்பிட்டு கோவிலை காத்து வந்தது.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் அனந்த பத்மநாப சுவாமியின் கோவில் ஏரியில் வாழ்ந்து வந்த பபியா எனும் முதலை உயிரிழந்த செய்தி ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த பிரபலான முதலையின் இறப்பு குறித்து பதிவிடப்பட்டு வரும் புகைப்படங்களில் தவறான படத்தையும் இணைத்து பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ? 

கேரளாவைச் சேர்ந்த பபியா எனும் முதலை 75 ஆண்டுகளாக கோவில் ஏரியில் வாழ்ந்து வருவதாகவும், கோவில் தரப்பில் அளிக்கப்படும் பிரசாதத்தை உண்டு சைவ முதலையாக வாழ்ந்து வருவதாகவும் கோவில் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அது ஆராயப்பட வேண்டியது.

இந்நிலையில், ஒன்றிய பாஜகவின் அமைச்சரவையில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை அமைச்சராக உள்ள ஷோபா கரந்த்லட்ஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பபியா முதலையின் இறப்புக் குறித்து பதிவிட்ட புகைப்படங்களில் இரண்டாவதாக உள்ள புகைப்படம் தவறானது. அது பபியா அல்ல.

ஒருவர் முதலையின் வாய் அருகே தலையை கொண்டு செல்வது போன்ற புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2015ம் ஆண்டு fishki.net எனும் இணையதளத்தில் போச்சோ (Pocho) எனும் முதலை கில்பேர்டோ “சிடோ” ஷிடன் என்பவருடன் நட்பாகப் பழகுவது குறித்து வெளியான கட்டுரையில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

மேற்கொண்டு தேடுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக WILD சேனலால் அமெரிக்காவைச் சேர்ந்த கில்பேர்டோ “சிடோ” ஷிடன் மற்றும் கோஸ்டா ரிக்கன் எனும் போச்சோ முதலை குறித்து எடுக்கப்பட்ட ஆவணப் படத்தின் வீடியோ ஒன்று கிடைத்தது. 44 நிமிடங்கள் கொண்ட வீடியோவில் சிடோ தனது தலையை முதலையின் வாய் அருகே கொண்டு செல்லும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த முதலையானது 2011ல் உயிரிழந்து விட்டது.

பல ஆண்டுகளாக பரவும் படம் : 

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக கேரளாவின் பபியா முதலை குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளில் போச்சோ முதலையானது சிடோ உடன் இருக்கும் புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2017-ல் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட கட்டுரையிலும், 2018-ல் மாலை மலர் வெளியிட்ட செய்தியிலும், 2020ல் behindwoods கட்டுரையிலும் இந்த தவறான புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

தற்போது பபியா முதலை இறந்தது தொடர்பாக என்டிடிவி, Etv பாரத் உள்ளிட்ட பல செய்தி இணையதளங்களில் வெளியிட்ட செய்தியில் தவறான புகைப்படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், கேரளாவின் அனந்தபுரம் கோவிலைச் சேர்ந்த பபியா முதலை இறப்பு தொடர்பாகப் பகிரப்படும் பதிவுகளில் ஒருவர் முதலையுடன் இருக்கும் புகைப்படத்தில் இருப்பது பபியா அல்ல, அது கோஸ்டா ரிக்கன் எனும் போச்சோ முதலை. ஒன்றிய இணை அமைச்சரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தவறானப் படத்தை பதிவிட்டு இருக்கிறார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader