கேரளாவில் கோவிலை மசூதியாக மாற்றியதாக வதந்தியைப் பகிர்ந்த காயத்ரி ரகுராம் !

பரவிய செய்தி
கேரளாவின் மல்லப்புரம் பகுதியில் உள்ள சிறப்பான கட்டிடக்கலையுடன் கூடிய அழகான இந்துக் கோவில் தற்போது மசூதியாக மாற்றப்பட்டு உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
கேரளா மாநிலம் மல்லப்புரம் பகுதியில் பழமையான இந்துக் கோவிலை முஸ்லீம்கள் கைப்பற்றி மசூதியாக மாற்றியுள்ளதாக 30 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
@PMOIndia @AmitShah Old Hindu temple taken over by the muslims by force in Kerala and converted it into a Masjid. Kerala’s Communist government is mum on this & Also Modi Sarkar is silent on this pic.twitter.com/n1JvYSZmOd
— Rajiv Shah (@mcphyd) April 12, 2022
இவ்வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த தமிழக பாஜகவின் காயத்ரி ரகுராம், அடுத்து திமுக ஆட்சியின் கீழ் தமிழகத்தில் இப்படி நடக்கும் என பதிவிட்டு இருந்தார். ஆனால், அவர் பகிர்ந்த வீடியோவை அந்த ட்விட்டர் பக்க வாசி சாத்வி நீக்கி இருக்கிறார்.
வீடியோ குறித்து தேடிய போது, ” இது மங்களூரில் உள்ள ஒரு அழகான இந்து கோவில். திப்பு சுல்தானால் மசூதியாக மாற்றப்பட்டது ” என இதே வீடியோ 2021 டிசம்பரில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
2021 டிசம்பர் 20-ம் தேதி ” thousandshadesofindia ” எனும் யூடியூப் சேனலில், ” கர்நாடகாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மூன்றாவது பழமையான ஜீனத் பக்ஷ் மஸ்ஜித் ” எனக் கூறி இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
கர்நாடகா மாநில சுற்றுலாத்துறையின் இணையதளத்தில், ” மங்களூரில் உள்ள பந்தர் பகுதியில் அமைந்துள்ளது ஜீனத பக்ஷ் மஸ்ஜித். இந்த மசூதி முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கிறது. இது கி.பி 644-ல் அரபு முஸ்லீம் வணிகர்களால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இது மற்ற மசூதிகளை காட்டிலும் முற்றிலும் இந்தியக் கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான் 17-ம் நூற்றாண்டில் இந்த மசூதியை புதுப்பித்து தனது மகள் ஜீனத் பக்ஷின் பெயரை சூட்டியுள்ளார் ” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ராமநாதபுரத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் இந்து கோவிலா ?| வரலாறு அறிக.
இதற்கு முன்பாக, ராமநாதபுரத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல்களை இந்து கோவில் என வதந்தி பரப்பியது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம் .
முடிவு :
நம் தேடலில், கேரளாவின் மல்லப்புரம் பகுதியில் உள்ள பழமையான இந்துக் கோவிலை முஸ்லீம்கள் கைப்பற்றி மசூதியாக மாற்றியுள்ளதாக பரவும் தகவல் வதந்தியே. பரப்பப்படும் வீடியோ கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பழமையான ஜீனத் பக்ஷ் மஸ்ஜித் உடையது என அறிய முடிகிறது.