கேரளாவில் இந்து மூதாட்டி கிறிஸ்தவர்களால் தாக்கப்பட்டாரா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
கேரளாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒரு தலித் மூதாட்டி பரசுராம் ஜெயந்தி முன்னிட்டு பூஜை செய்ததால் கிறிஸ்தவ மிசினெரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
மதிப்பீடு
விளக்கம்
சிலை மற்றும் பூஜை பொருட்கள் சிதறி கிடக்கும் புகைப்படமும், மூதாட்டி ஒருவர் இரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்து கேரளாவில் பரசுராம் ஜெயந்தி கொண்டாடிய மூதாட்டி ஒருவரை கிறிஸ்தவ மிசினரிகள் கொடூரமாக தாக்கியதாக மேற்காணும் மீம் பகிரப்பட்டு வருகிறது. இந்த மீம் பதிவின் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு இருந்தது.
உண்மை என்ன ?
கேரளாவில் மூதாட்டி தாக்கியதாக பரப்பப்படும் மீம் பதிவில் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் அப்புகைப்படங்கள் கடந்த 2018-ம் ஆண்டிலேயே பரப்பப்பட்டது எனும் தகவல் கிடைத்தது.
2018 ஆகஸ்ட் 26-ம் தேதி We Hate RSS and SDPI எனும் முகநூல் பக்கத்தில், சமத்துவம் பேசும் கேரளாவில் முஸ்லீம்களால் இந்து மூதாட்டி தாக்கப்பட்டுள்ளார், சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன என ” Shanknaad ” எனும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியான பதிவை ” பதிவிட்டு இருந்தனர்.
அதே பக்கத்தில், 2017-ல் suptodisha எனும் முகநூல் பக்கத்தில் வெளியான பதிவின் ஸ்க்ரீன்ஷார்ட் பதிவாகி இருந்தது. அதில், தாக்கப்பட்ட மூதாட்டியின் மூன்று புகைப்படங்கள் இருந்தன. suptodisha பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முகநூல் பக்கம். அதேபோல், 2017 அக்டோபர் 8-ம் தேதி chittagong tuber எனும் முகநூல் பக்கத்திலும் அதே மூதாட்டியின் புகைப்படங்கள் மற்றும் பெங்காலி மொழியில் வாக்கியமும் இடம்பெற்று இருந்தன.
அதில், ” இந்த பெண் சிட்டகாங் மாவட்டத்தின் பன்காலி காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஜல்தி கிராமத்தில் வசிக்கும் பஞ்சபால கர்மக்கர் ஆவார். இந்த ஏழை மற்றும் உதவியற்ற பெண் தனது செல்வாக்குமிக்க அண்டை வீட்டுக்காரரான பிரதீப் கோஷ் மற்றும் அவரது மகன் பிஸ்வாஜித் ஆகியோரால் திட்டமிடப்பட்ட தாக்குதலில் மோசமாக தாக்கப்பட்டார். அவருடைய நிலைமை இப்போது ஆபத்தானதாக இருக்கிறது. அவரை கவனித்துக் கொள்ளவோ, சிகிச்சை அளிக்கவோ யாரும் இல்லை. தயவு செய்து இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ” என கூறப்பட்டுள்ளது
சங்க்நாத் எனும் பக்கம் தொடர்ச்சியாக போலிச் செய்திகளை குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பதிவிட்டு வருகிறது. கடந்த 2018-ல் கதுவா சிறுமி சம்பவத்தின் போதும் சங்க்நாத் உடைய சமூக வலைதள பக்கங்களில் பொய்யான தகவலை பரப்பி இருந்தனர். அதை நாம் விரிவாக வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : சிறுமி ஆஷிஃபா வன்புணர்வு கொலை சம்பவத்தில் வதந்திகளும், உண்மைகளும்…
2018-ல் சங்க்நாத் ட்விட்டர் பக்கத்தில், கேரளாவில் உள்ள மூதாட்டி முஸ்லீம்களால் தாக்கப்பட்டதாக தவறான புகைப்படத்துடன் பதிவிட்ட ட்வீட் கம்மெண்ட்களில் பலர் கேரளா போலீசை டக் செய்து பதிவிட்ட காரணத்தினால் அந்த ட்வீட் பதிவு நீக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நமது தேடலில் இருந்து, கேரளாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒரு தலித் மூதாட்டி பரசுராம் ஜெயந்தி முன்னிட்டு பூஜை செய்ததால் கிறிஸ்தவ மிசினெரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார் என பரப்பப்படும் தகவல் போலியானது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.