“தி கேரளா ஸ்டோரி” எனும் திரைப்படத்தின் டீசரை உண்மைப் போல் பரப்பும் வலதுசாரிகள்

பரவிய செய்தி

நாடு முழுவதும் உள்ள ஹிந்துப் பெண்களுக்கு எச்சரிக்கை .!! கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னி கிருஷ்ணன் பகிர்ந்தது! 32,000 இளம் பெண்கள் இஸ்லாமுக்கு லவ் ஜிகாத்தால் மதம் மாறி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உடற்பசிக்கு இரையான பரிதாபம்! தயவுசெய்து பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!!

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றில், ஹிஜாப் அணிந்த இளம் பெண் ஒருவர் கண்ணீருடன் பேசுகிறார். அந்த பெண் தனது பெயரை ஷாலினி உன்னி கிருஷ்ணன் என்றும், மனித நேயத்துடன் நர்ஸ் பணி செய்ய வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் கூறுகிறார். ஆனால், இன்று பாத்திமா பா-வாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதியாக ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

மேலும், தன்னை போல 32,000 பெண் பிள்ளைகள் மதம் மாற்றப்பட்டு சிரியா, ஏமன் பாலைவனத்தில் புதைக்கப்பட்டுள்ளனர். இதுபோல கேரளாவில் சாதாரண பெண் குழந்தைகளை பயங்கரவாதிகளாக மாற்றும் கொடிய விளையாட்டு மிக வெளிப்படையாக நிகழ்ந்து கொண்டுள்ளது. இதனை யாரவது தடுத்து நிறுத்துங்கள். இதுதான் எனது கதை. என்னை போன்ற 32,000 பேரின் கதை என சொல்லி முடிக்கிறார். இறுதியில் “தி கேரளா ஸ்டோரி” என வருகிறது.

இந்த வீடியோவினை வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் தயவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் எனக் குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

ஆப்கானிஸ்தான் சிறையிலுள்ள ஒரு பெண் கைதி வீடியோ எடுத்து பகிர்ந்ததாக கூறப்படும் வீடியோ குறித்து சந்தேகத்தை எழுந்தது. எனவே வீடியோவின் கடைசியில் தி கேரளா ஸ்டோரி என்றிருந்ததினை கூகுளில் தேடினோம்.

2022, நவம்பர் 3ம் தேதி Sunshine Pictures எனும் யூடியூப் பக்கத்தில்,  The Kerala Story Teaser என்ற தலைப்பில் 1 நிமிடம் 19 வினாடிகள் கொண்ட அவ்வீடியோ பதிவாகி உள்ளது. இதில் இருந்து அந்து ஒரு படத்தின் டீசர் என்பதை அறிய முடிகிறது.

மேலும், அதில் ஷாலினி உன்னி கிருஷ்ணனாக நடித்துள்ள Adah Sharma தனது டிவிட்டர் பக்கத்தில் நவம்பர் 3ம் தேதி இந்த டீசரினை பதிவிட்டுள்ளார். அதிலும் Upcoming Movie என்ற ஹஸ் டாக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Twitter link 

இந்த படத்தினைக் குஜராத்தைச் சார்ந்த விபுல் அம்ருத்லால் ஷா (Vipul Amrutlal Shah) என்பவர் தயாரிக்க, சுதிப்தோ சென் (Sudipto Sen) என்பவர் இயக்கியுள்ளார்.

அக்டோபர் 22ம் தேதி சினிமா எக்ஸ்பிரஸ் தளத்திற்கு இயக்குனர் சுதிப்தோ சென் அளித்த பேட்டியில், ” விசாரணையின்படி 2009ல் இருந்து கேரளாவில் மொத்தம் 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் மதமாற்றப்பட்டு உள்ளனர். அதில் பெரும்பாலானோர் சிரியா, ஆப்கானிஸ்தான், பிற ஐஎஸ்ஐஎஸ் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ்-ன் செல்வாக்கு பெற்றக் குழுக்களால் நடத்தப்படும் இத்தகைய மிகப்பெரிய சர்வதேச சதிகளுக்கு எதிராக எந்த உறுதியான செயல் திட்டத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை. கேரளா மற்றும் மங்களூரில் இருந்து கிட்டத்தட்ட 32,000 இளம்பெண்கள் காணாமல் போனாலும், என்ஐஏ 99 வழக்குகளை மட்டுமே விசாரித்து வருகிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனால், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் குறிப்பிடுவது போல கேரளாவில் இருந்து 32,000 பெண்கள் காணாமல் போயும், மதம் மாற்றப்பட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு சிரியா, ஏமன் போன்ற நாடுகளுக்கு சென்றதாக எந்தொரு ஆதாரப்பூர்வமான தரவுகளும் இல்லை. இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 32,000 பெண்கள் மதமாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு சென்றதாக இந்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையோ அல்லது செய்தியோ இல்லை.

முடிவு :

நம் தேடலில், கேரளாவில் இருந்து 32,000 இளம் பெண்கள் மதம் மாற்றப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் பதிவிட்டுள்ள வீடியோ தி கேரளா ஸ்டோரி என்னும் திரைப்படத்தின் டீசர் என்பதை அறிய முடிகிறது. இதனை வலதுசாரிகள் உண்மை சம்பவத்தின் வீடியோ எனப் பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader