கேரளாவில் யோகி ஆதித்யநாத்திற்காக மலர்ந்த தாமரை கூட்டமா ?

பரவிய செய்தி
கேரளாவில் யோகி ஜியின் வருகையால் மக்கள் வெள்ளம் தாமரையாக மலர்ந்த காட்சி..
மதிப்பீடு
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சி கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கள் கட்சியை வலுப்பெற வைக்க அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து அம்மாநிலங்களுக்கு அனுப்பி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைக்கப்படுவதுண்டு.
இந்நிலையில், கேரளாவிற்கு வருகை தந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்காக தாமரை வடிவில் கூடிய கூட்டமென இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கேரளாவின் கசரகோட் பகுதியில் கேரளா பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விஜய யாத்ரா கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
യോഗിയെ ശ്രവികാനായി കാസർഗോട്ട് തടിച്ചുകൂടിയ പ്രവർത്തകർ 💪#KeralaVijayaYatra#KeralaWelcomesYogiJi pic.twitter.com/ksZliKiOEZ
— BJP KERALAM (@BJP4Keralam) February 21, 2021
அதுகுறித்து, கேரளா பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களின் தொகுப்பில், தாமரை வடிவில் தொண்டர்கள் கூடி இருப்பதாக வைரலாகும் புகைப்படம் இடம்பெறவில்லை. வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015-ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
2015-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பாஜகவின் 35-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் குஜராத்தின் தாஹோத் பகுதியில் உள்ள கல்லூரி மைதானத்தில் 25,000 பாஜக தொண்டர்கள் தாமரை வடிவில் ஒன்றுக்கூடி இருக்கிறார்கள். 2015-ல் பிரதமர் நரேந்திர மோடியும் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
An innovative way to mark BJP’s ‘Sthapana Diwas.’ Congrats to the Karyakartas. http://t.co/DlxyrMzbX8 pic.twitter.com/HXmPnE5Eob
— Narendra Modi (@narendramodi) April 6, 2015
முடிவு :
நம் தேடலில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கேரளாவிற்கு வருகை தந்த போது தாமரை வடிவில் கூடிய பாஜக தொண்டர்கள் என பரப்பப்படும் புகைப்படம் 2015-ல் குஜராத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.