“கேல் ரத்னா விருது” என தவறான புகைப்படத்தை பகிர்ந்த தமிழக பாஜக, செய்தி நிறுவனங்கள் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
விளையாட்டுத்துறைக்கு வழங்கப்பட்டு வந்த ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை ஹாக்கி ஜாம்பவான் ” மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா ” என பெயர் மாற்றம் செய்வதாக பாஜக அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநில பாஜக மற்றும் சில செய்தி நிறுவனங்கள் உள்பட வெளியிட்ட செய்திகள் மற்றும் பதிவுகளில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது என தவறான புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
உண்மையில், செய்திகள் மற்றும் பதிவுகளில் காண்பிக்கப்பட்டுள்ள பதக்கம் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அல்ல, பரம்வீர் சக்ரா விருதின் பதக்கம். இந்திய விமானப்படை உடைய இணையதளத்தில் ” பரம்வீர் சக்கரா ” என இப்புகைப்படம் இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.
5 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பரம்வீர் சக்கரா பதக்கத்தின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
getty image இணையதளத்தில், ” விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பதக்கத்தின் புகைப்படங்கள் பல இடம்பெற்று இருக்கின்றன. ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதில் அசோக சக்கரம் பெரிதாய் இடம்பெற்று இருக்கும்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு பாஜக மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட பதிவுகளில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது என பகிரப்பட்ட புகைப்படம் பரம்வீர் சக்ரா பதக்கத்தின் புகைப்படம் என அறிய முடிகிறது.