சிறுநீரக கற்களை அகற்றும் ஸ்டோன் கிரஷ் டானிக் பதிவு உண்மையா ?

பரவிய செய்தி
வணக்கம் என் பெயர் முரளி, சென்னை மடிப்பாக்கம். எனது மகன் தினேஷ்க்கு கிட்னியில் 7 mm கல் இருந்தது. எனது மகனுக்கு ஆப்ரேசன் செய்ய 50,000 ஆயிரம் செலவு ஆகும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். 50 ரூபாய் மட்டும் உள்ள கேவாவின் ஸ்டோன் கிரஷ் சிரப்பு சாப்பிட்டதன் மூலம் கல் யூரின் வழியாக வெளியேறி விட்டது.
மதிப்பீடு
விளக்கம்
யாருக்காவது உதவட்டும்.. படித்துவிட்டு ஷேர் செய்யவும் எனக் கூறி சிறுநீரக கற்களை வெளியேற்றும் மருந்து என ஒருவர் எழுதிய கடிதத்துடன் ” ஸ்டோன் கிரஷ் டானிக் ” புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அதில், கடந்த ஆண்டு நண்பர் அனுப்பிய தகவல் எனக் கூறுவதில் இருந்தே பல ஆண்டுகளாக இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது என்பதை அறிய முடிந்தது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள Keva எனும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று ” Stone Crush Tonic ” குறித்து தேடிப் பார்க்கையில், அது ஆயுர்வேத மருந்து என்பதையும், அதன் விவரங்கள் குறித்த தகவல் கிடைத்தன.
பொறுப்பு துறப்பில், ” இந்த தயாரிப்பு எந்தவொரு நோய்களுக்கும் சிகிச்சையளிக்கவோ, தடுக்கவோ, குணப்படுத்தவோ அல்லது கண்டறியவோ இல்லை. தயவுசெய்து உங்கள் சுகாதார மருத்துவரை அணுகவும் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நோயை குணப்படுத்தும் என எண்ணி மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல் டானிக்கை பயன்படுத்த வேண்டாம் என அந்நிறுவனமே இருமுறை கூறியுள்ளது.
சிறுநீரகத்தில் 9 முதல் 22 மில்லி மீட்டர் அளவிற்கும் கூட கற்கள் உருவாவது உண்டு. 22 மில்லி மீட்டர் அளவிலான கற்களை தமிழக அரசு மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை செய்து நீக்கிய செய்திகளும் வெளியாகி இருக்கிறது.
ஆனால், 7 மில்லி மீட்டர் வரையிலான கற்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைப்பதில்லை என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறைந்த மில்லி மீட்டர் அளவில் இருக்கும் கற்களுக்கு மருந்துகளோடு அதிக தண்ணீர் குடிக்க பரிந்துரை செய்கின்றனர். மேலும், வாழைத்தண்டு சாறு போன்ற உணவு முறையிலான மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல மருந்துகள் குறித்த தகவல்கள் சுற்றி வருகின்றன. மருத்துவர்களின் தகுந்த ஆலோசனை இல்லாமல் சமூக வலைதளங்களில் பரவும் மருந்துகளை எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
முடிவு :
நம் தேடலில், சிறுநீரக கற்களை நீக்க உதவும் மருந்து என விற்பனை செய்யும் சம்பந்தப்பட்ட நிறுவனமே ஸ்டோன் கிரஷ் டானிக்கை நோய்க்கான முழுமையான மருந்தில்லை, மருத்துவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டு உள்ளனர். 7 மி.மீ அல்லது அதற்கு குறைவான அளவில் இருக்கும் சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்துகளின் மூலம் அகற்றலாம் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது என அறிய முடிகிறது.