டெல்லியில் கைதான மருத்துவர் கோவிட்-19 கோணத்தில் தவறாக வைரல் !

பரவிய செய்தி
கிட்னிக்காக டெல்லியில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்ற டாக்டர் தேவேந்தர ஷர்மா கைது. உறவினர்கள் பாடியைக் கேட்ட போது கொரானோவால் இறந்தவர்கள் உடலை தரமுடியாது எனக் கூறி விட்டார். பிடிபடுவோம் என பயந்த போது மீதமிருந்த உடல்களை முதலைகளுக்கு போட்ட கொடுமை.
மதிப்பீடு
விளக்கம்
டெல்லியில் கொரோனா வைரசால் இறந்தவர்கள் எனக் கூறி சிறுநீரகத்திற்காக நூற்றுக்கணக்கான பேரை மருத்துவர் ஒருவர் கொலை செய்து அவர்களின் உடல்களை முதலைக்கு உணவாக போட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?
இதற்கு ஆதாரமாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின் லிங்க் சில பதிவில் இடம்பெற்று இருக்கிறது. அதில் சென்று பார்க்கையில் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியான கட்டுரையில் கோவிட்-19 குறித்தோ, கொரோனா நோயாளிகளிடம் இருந்து உறுப்பு திருட்டு நடந்ததாகவோ எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை.
ஏனெனில், கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் கடந்தகாலத்தில் நடந்தவை. சமீபத்தில் நடந்தவையே அல்ல. 2020 ஜனவரி மாதம் பரோலில் வெளியே வந்த தேவேந்தர் சர்மாவுக்கு பிப்ரவரி 16-ம் தேதியோடு பரோல் முடிவடைந்தது. மீண்டும் சரணடையாமல் தலைமறைவாகி இருந்துள்ளார். மார்ச் மாதம் டெல்லியின் மோகன் கார்டன் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்து, பின்னர் பப்ரோலா பகுதியில் வசித்து வந்துள்ளார். டெல்லி போலீஸ் ஜூலை 28-ம் தேதி தேவேந்தர் சர்மாவை மீண்டும் கைது செய்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியிலேயே கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் தேவேந்தர் சர்மா குறித்து செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது. ஆனால், அவற்றை முழுமையாக படிக்காமல் கொரோனா வைரஸ் உடன் உறுப்பு திருட்டு என தவறான கதையை உருவாக்கி உள்ளார்கள்.
யார் இந்த தேவேந்தர் சர்மா ?
ஆயுர்வேத மருத்துவரான சர்மா, 2000-களின் முற்பகுதியில் 50 டாக்சி ஓட்டுனர்களின் கொலைகளுக்கு மூலகாரணமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது. சர்மாவும், அவரது கூட்டாளிகளும் சாட்சிகளை மறைக்க இறந்த உடலைகளை முதலைகள் சூழ்ந்த கால்வாயில் வீசியதாகவும் இடம்பெற்று இருக்கிறது. ஜெய்ப்பூர், பல்ப்கர் மற்றும் குர்கான் முழுவதிலும் சர்மா ஒரு நெட்வொர்க் மூலம் 1994-2004களில் 125 சிறுநீரக மாற்று சிகிச்சையை சட்ட விரோதமாக செய்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
டிசிபி (க்ரைம் பிரிவு) ராகேஷ் பவேரியா கூறுகையில், ” 2002-04ல் பல கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்ட சர்மா 6-7 வழக்குகளில் குற்றவாளி. ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சர்மா ஜெய்ப்பூர் மத்திய சிறையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 20 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார் ” எனத் தெரிவித்து உள்ளார்.
ஜனவரியில் பரோலில் வந்த தேவேந்தர் சர்மா புதிய வாழ்க்கையை வாழ அங்கிருந்து தப்பித்து டெல்லி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். எனினும், ஜூலை மாத இறுதியில் டெல்லி போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட மருத்துவரின் கதையை தற்போது நிகழ்ந்ததாக, கோவிட்-19 உடன் தவறான கதையை உருவாக்கி பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், கிட்னிக்காக டெல்லியில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை கொன்ற டாக்டர் தேவேந்தர ஷர்மா கைது என பரவும் தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், அந்த மருத்துவர் வழக்கிற்கும் கொரோனா கோணத்திற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.