This article is from Jul 19, 2018

மாணவர்கள் வதந்திகளை கண்டறிவது எப்படி ? கேரளாவில் புதிய முயற்சி..!

பரவிய செய்தி

கேரளாவில் உள்ள குழந்தைகளுக்கு வாட்ஸ் ஆஃப் வதந்திகளை கண்டறிவது குறித்து கற்றுக் கொடுக்க உள்ளனர். வதந்திகள் எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு கண்டறிவது என்று அறிந்து கொண்டால் வாட்ஸ் ஆஃப் வதந்திகள் பரவுவதை தடுக்க இயலும்.

மதிப்பீடு

சுருக்கம்

வாட்ஸ் ஆஃப் வதந்திகளால் பல அப்பாவி மக்களின் உயிர் பறிபோய்க் கொண்டிருக்கிறது. எனினும், வதந்திகள் பற்றிய புரிதல் அடித்தட்டு மக்களிடமும் இல்லை, படித்தவரிடமும் இல்லை. ஆகையால், குழந்தைகளிடத்தில் இருந்தே வதந்திகளை கண்டறிவது பற்றி கற்றுத்தர உள்ளனர்.

விளக்கம்

வாட்ஸ் ஆஃப் செயலியின் வாயிலாக வதந்தி என்ற அபாயம் வெகுவாக பரவி வருவதை சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துரைக்கிறது. வட நாட்டில் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் அப்பாவி மக்களை கூட்டமாக சேர்ந்து அடித்து காயப்படுத்துவது, உயிர் போகும் அளவிற்கு தாக்குவது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி செய்தியின் வாயிலாக அறிந்து இருப்போம்.

இதற்கு எல்லாம் காரணம் “ குழந்தைகளை கடத்தும் வடநாட்டு கும்பல் “ என்று வாட்ஸ் ஆஃப்பில் பரவும் வதந்திகளே !. எனினும், நமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமில்லை என்று ஒதுங்கிவிட முடியாது. இது போன்று உங்களுக்கு வரும் வாட்ஸ் ஆஃப் செய்தியை உண்மை எதுவென்று அறியாமல் உடனடியாக பகிர்வதே எங்கோ ஒருவரின் உயிர் போவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

வதந்திகளின் அச்சுறுத்தல் நாடு முழுவதும் பரவத் தொடங்கி விட்டது. படித்தவர், படிக்காதவர் என அனைத்து தரப்பு மக்களும் வதந்தியை எளிதில் நம்பக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. வதந்திகள் குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் மாற்றம் ஏதுமில்லாமல் இருந்து வருகிறது.

அதனை மாற்ற வதந்திகளை ஒடுக்க புதிய பாதைக்கான தளவாடங்களை கேரள மாநிலத்தில் தொடங்கியுள்ளனர். கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்ட நிர்வாகம் “ சத்தியமேவ் ஜெயதே “ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளனர். இதில், மாவட்டத்தில் அரசு நடத்தும் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு சமூக வலைத்தளங்களில் வதந்திகளை எப்படி கண்டறிவது என்று கற்றுக் கொடுக்க உள்ளனர்.

இதன் தொடக்கமாக, இம்மாதத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் உள்ள 150 ஆசிரியர்களை தேர்ந்தேடுத்து அவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க உள்ளனர். அடுத்த கட்டமாக, இந்த ஆசிரியர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வாட்ஸ் ஆஃப் வதந்திகளை எப்படி அடையாளம் காணுவது என்று கற்று தருவர்.

இதில் தொடக்கமாக மாணவர்களுக்கு நம்பத்தகுந்த செய்திகள், வதந்திகள் மற்றும் உண்மையான ஆதாரம் பற்றி அறிவதற்கு உதவி செய்ய வேண்டும். ஒருவர் பகிரும் செய்தி உண்மையாக இருந்தால் அதற்கான சரியான ஆதாரத்தை கேட்க வேண்டும், நம்பத்தகுந்த ஆதாரங்களை தேடித் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். சரிபார்க்கப்படாமல் பகிரும் செய்திகளால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மாணவர்களுக்குக் கூற உள்ளனர்.

மாணவர்களுக்கு வதந்தி பற்றி அறிவுறுத்தப்பட்ட பிறகு இரண்டாம் கட்டமாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எந்தவொரு செய்தியையும் பகிர்வதற்கு முன்பு நம்பத்தகுந்த செய்தியா என்று சிந்தித்தால் பகிரும் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வதந்திகள் பரவுவது தடுக்கப்படும்.

updated : 

கேரளாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வதந்திகளை எவ்வாறு கண்டறியும் முறையை கற்றுத் தர கண்ணூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து இருந்தோம். அதன் தொடக்கமாக ” சத்யமேவே ஜெயதே ” என்ற இந்த நிகழ்ச்சி ஜூன் 13-ம் தேதி தொடங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். நிபா வைரஸ் தொடங்கி குழந்தை கடத்தல் கும்பல் வரை பல்வேறு வதந்திகள் வாட்ஸ் ஆஃப்பை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் கேரளாவிலும் பாதிப்புகள் ஏற்படுவதால் வதந்தி குறித்த விழிப்புணர்வை அம்மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளனர்.

கண்ணூர் மாவட்ட ஆட்சியர் மிர் முகமது அலி பள்ளி மாணவர்களுக்காக ” சத்யமேவே ஜெயதே ”  நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சில பள்ளிகளில் மாணவர்களுக்கு வதந்தி குறித்து எடுத்துரைத்துள்ளார். 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வதந்திகள் குறித்து கண்டறிவது பற்றி கற்றுத் தரப்படும். மாவட்டத்தில் உள்ள 150 அரசு பள்ளிகளிலும் வதந்தி பற்றி கற்றுத் தர வேண்டும் என இலக்கு வைத்துள்ளனர்.

முதற்கட்டமாக 150 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றுத் தர எண்ணி இருந்தனர். இதை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க எண்ணினர். ஆனால், அரசு பள்ளிகள் மட்டுமின்றி மற்ற பள்ளிகளும் வதந்திகள் குறித்து மாணவர்களுக்கு கற்றுத் தர ஆர்வம் காட்டியுள்ளனர். உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மூலமும் இதற்கான பணிகள் நடைபெறுகிறது.

கேரளாவில் மூன்று தலை நாகம் என்ற வதந்தி போன்று வாட்ஸ் ஆஃப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பரவும் வதந்திகள் பற்றி வகுப்புகள் எடுத்து வருகின்றனர். பெற்றோர்களுக்கு இதனால் பயன் ஏதுமில்லை என்றுக் கூறுவது தவறு. குழந்தைகளுக்கு கற்றுத் தருவதால் அவர்கள் மூலம் பெற்றோர்களும் வதந்திகள் பற்றி கற்றுக் கொள்ள முடியும்.  தவறான செய்திகளால் கேரளாவில் குற்றங்கள் நிகழ்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மாவட்ட ஆட்சியர் முகமது அலி  தெரிவித்துள்ளார்.

ஒரு மாவட்ட ஆட்சியரின் சிறப்பான முயற்சியால் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு வதந்திகள் பற்றிய விழிப்புணர்வு உருவாகி உள்ளது. இதே போன்று இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தவறான செய்திகள் பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் கற்றுத் தந்தால் விழிப்புணர்வு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவி வதந்திகள் பற்றிய முழு விழிப்புணர்வும் மக்களிடையே உருவாகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader