This article is from Sep 05, 2020

சிவலிங்கம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கி.மு 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததா ?| கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளின் உண்மைத் தகவல்!

பரவிய செய்தி

தென்னாடுடைய சிவனே போற்றி !

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் உள்ள கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் முதல் பள்ளிப்படை பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளதாகவும், கி.மு 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாகவும் தொல்லியல்துறை தரப்பில் வெளியான தகவல் செய்திகளில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கிண்ணிமங்கலத்தில் கிடைத்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கி.மு 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் குறித்த செய்தியில் இடம்பெற்ற புகைப்படத்தில் சிவலிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளதாக வட்டமிட்டு பகிரப்படும் பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், கிண்ணிமங்கலம் கல்வெட்டு குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ? 

சிவலிங்கம் இடம்பெற்ற கல்வெட்டு புகைப்படத்துடன் ” மதுரையில் கி.மு 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு. தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டில் கோட்டம் என்ற சொல்லாட்சி முதல்முதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது ” என்கிற செய்தி செப்டம்பர் 2-ம் தேதி புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டில் வெளியாகி இருக்கிறது. இந்த நியூஸ் கார்டு குறித்து புதியதலைமுறையின் முகநூல் பக்கத்தில் தேடிப் பார்க்கையில் கிண்ணிமங்கலம் குறித்த செய்தி வெளியிட்ட இந்த நியூஸ் கார்டு இடம்பெறவில்லை. இது நீக்கப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றியது. புதியதலைமுறை செய்தியின் ட்விட்டர் பக்கத்தில் மற்றும் யூடியூப் செய்தியிலும் கிண்ணிமங்கலம் குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது.

Twitter link | archive link 

” மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் தமிழி எண் பட்டைத்தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள விவரங்கள் கி.மு 2 முதல் 1-ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்கு கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு கி.பி 7 மற்றும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எனக் கூறப்படுகிறது. அதில் இடம்பெற்ற பள்ளிப்படை என்கிற சொல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகே கட்டப்பட்ட முதல் பள்ளிப்படை இதுவே என தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 19-ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், கி.பி 1722-ம் ஆண்டைச் சேர்ந்த விசயரங்க சொக்கநாதன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த கல்வெட்டில் பள்ளிப்படை சமாதிகள் என்ற சொல்லாட்சி இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 7 மற்றும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டில் தான் முதன் முதலில் பள்ளிப்படை பற்றிய குறிப்பு காணப்படுவதாகவும், பள்ளிப்படை என்ற சொல் இறந்தவர்களுக்கு எழுப்பப்பட்ட நினைவுத் தூணைக் குறிப்பவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் ” என புதிய தலைமுறை, நியூஸ் ஜெ உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

பழங்காலத் தமிழி மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகளை அவ்வளவு எளிதாக அனைவராலும் படித்து விட முடியாது. ஆனால், சிவலிங்கம் இடம்பெற்ற கல்வெட்டின் புகைப்படத்தை நியூஸ் கார்டில் இருந்து தனியாக எடுத்து பார்க்கையில், கல்வெட்டில் ” குருவே சரணம், அருள்மிகு ஏகநாதர் சுவாமி ” போன்ற இக்கால தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட வார்த்தைகளே இடம்பெற்று இருக்கிறது. மேலும், 1-2-1942 எனும் வருடமும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு தேடுகையில், செப்டம்பர் 3-ம் தேதி நியூஇந்தியன்எக்ஸ்பிரஸில் ” Over 2,000-year-old Tamizhi inscriptions found near Usilampatti ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில் வைரலாகும் கல்வெட்டின் முழுமையான புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

” கோவில் வளாகத்தில் காணப்பட்ட 18-ம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று மன்னர் விசயரங்க சொக்கநாதனால் நியமிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் 43 வரிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டில், அதே (நாயக்) வம்சத்தின் முந்தைய மன்னர்களின் பெயர்கள் மற்றும் மற்றொரு (விஜயநகர) வம்சத்தின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது அவர்களின் ஆட்சிக் காலத்தை ஒரு கால வரிசையில் வரிசைப்படுத்த உதவியது. நான்காவது மற்றும் சமீபத்திய கல்வெட்டு எழுத்துக்கள் 1942-ஐச் சேர்ந்தது ” என தொல்லியல் குழுவில் இடம்பெற்ற கலை வரலாற்றாசிரியர் கே.டி.காந்திராஜன் தெரிவித்து உள்ளதாக நியூஇந்தியன்எக்ஸ்பிரஸில் வெளியாகி இருக்கிறது.

கிண்ணிமங்கலத்தில் கி.மு 2 மற்றும் 1-ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு, வட்டெழுத்துப் பொறிக்கப்பட்ட கல்வெட்டு என வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல கிடைத்தது உண்மையே. ஆனால், சிவலிங்கம் பொறிக்கப்பட்ட 1942-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், மதுரை கிண்ணிமங்கலத்தில் கிடைத்த கி.மு 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் சிவலிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளதாக பரவும் தகவல் தவறானது. சிவலிங்கம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கி.மு 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது அல்ல. செய்தியில் வெளியான நியூஸ் கார்டில் தவறான கல்வெட்டின் புகைப்படம் இடம்பெற்றதே குழப்பத்திற்கு காரணமாகி இருக்கிறது என புரிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader