கொங்கு நாடு உருவாகுது, தமிழ்நாடு இரண்டாக பிரிகிறது என தினமலர் வெளியிட்ட தவறான செய்தி !

பரவிய செய்தி
தமிழகம் 2 ஆக பிரிகிறது. உருவாகுது கொங்கு நாடு !
மதிப்பீடு
விளக்கம்
தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் “கொங்கு நாடு” எனும் தனி யூனியன் பிரதேசமாக ஆகிறது எனும் செய்தியை வெளியிட்டு இருக்கிறது. தினமலரின் இந்த செய்தி சமூக வலைதளங்களில் எதிர்ப்பையும், கண்டனத்தையும், ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது.
தினமலர் செய்தியில், ” மத்திய அரசை ” ஒன்றிய அரசு ” என திமுகவினர் கூறி வருவதால் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை ” கொங்கு நாடு ” என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.
தமிழக சட்டசபையில், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை களங்கப்படுத்தி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது மத்திய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 90 சட்டசபை தொகுதிகளுடன் கொங்கு நாடு என்ற பிரிவை பிரித்து அதை புதுச்சேரி போல தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கொங்கு நாடு யூனியன் பிரதேசத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளன. ஒன்றிய அரசு என வெறுப்பேற்றி வருவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தமிழகத்தில் தங்கள் கட்சி எதிர்காலத்தில் வலுவான கட்சியாக காலூன்றவும், இந்த யூனியன் பிரதேச அஸ்திரத்தை பாஜ கையில் எடுத்து உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ” என புதுடில்லி நிருபர் கூறியதாக தினமலர் வெளியிட்டு இருக்கிறது.
செய்தியை முழுமையாக படித்து பார்த்த பிறகு, இது அனைத்தும் அரசியல் வட்டாரச் செய்தி என அறிய முடிகிறது. ஒரு அரசியல் வட்டார செய்திக்கும், ஒரு கட்சியின் திட்டமிடலுக்கும் போய் தமிழ்நாட்டை பிரித்து விட்டது போன்ற தலைப்பை வைத்து குழப்பத்தையும், சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் அதிமுக கட்சியே பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, கொரோனா இரண்டாம் அலையின் போது, திமுக மேற்கு மண்டல பகுதியில் வெற்றிகளை பெறாததால் கோவை மக்களை வஞ்சிப்பதாக தமிழக பாஜகவினர் ஒரு பிரச்சாரத்தை துவங்கினர். அடுத்து, தடுப்பூசி செலுத்துவதிலும் அதை கையில் எடுத்தனர்.
பாஜகவினர் மேற்கு மண்டலத்தை தனியாக பிரிப்பது போன்ற எண்ணத்தில் இருந்தால், மாரிதாஸ் உள்ளிட்டோர் தென் மாவட்டங்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், தென் மாவட்டங்களை தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்கிற பிரச்சாரத்தை துவங்கி இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் சமயத்தில் கூட பாமக நிறுவனர் ராமதாஸ் கூட நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாட்டை 3 ஆக பிரிக்கலாம் என கூறி இருந்தார். இப்படி தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை குறிப்பிட்ட கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களே கையில் எடுக்கிறார்கள்.
பாஜக அமைச்சரவை மாற்றப்பட்ட போது எல்.முருகன் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் பற்றிய குறிப்பில் ” கொங்கு நாடு ” தமிழ்நாடு என இடம்பெற்று இருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் ” கொங்கு நாடு ” என பிரிக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக தினமலர் வெளியிட்ட செய்தி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ஒன்றிய அரசு கொங்கு நாடு என்று அறிவிக்கவில்லை, அப்படியான அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கவில்லை, ஏன் அப்படியான பரிசீலனை இருப்பதாகவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் வட்டாரத் தகவல் என்கிறது தினமலர்.. வட்டாரத் தகவல் அடிப்படையில் எழுதிய செய்தியை உறுதியாக நடக்கப் போகிறது என்ற அர்த்தத்தில் உருவாகிறது, பிரிகிறது என தலைப்பு வைத்திருப்பது திசை திருப்பல் என அறிய முடிகிறது.