அண்ணாமலைப் படத்தை புறக்கணித்து வானதி சீனிவாசனுக்கு போஸ்டர் அடித்ததாக திமுகவினர் வதந்தி !

பரவிய செய்தி

பா.ஜ.க.வில் வலுக்கிறது கோஷ்டி மோதல். மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை தவிர்த்து விட்டு போஸ்டர் அடித்த எல்.முருகன், வானதி சீனிவாசன் அணியினர்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிழக பாஜகவில் உருவான கோஷ்டி மோதலால் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்காக மதுரையில் அடிக்கப்பட்ட போஸ்டரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை புறக்கணித்து வானதி சீனிவாசன் மற்றும் எல்.முருகனின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்று உள்ளதாக போஸ்ட்ர் படம் ஒன்று சமூக வலைதளங்களில் திமுகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link 

மேலும், இந்த போஸ்டர் குறித்து “பாஜகவில் வலுக்கிறது கோஷ்டி மோதல்” என நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டு உள்ளதாக நியூஸ் கார்டு ஒன்றையும் திமுகவினர் பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக சார்பில் அக்டோபர் 31ம் தேதி பந்த்-துக்கான அழைப்பை பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அறிவித்தனர்.

ஆனால், இது தொடர்பான வழக்கில் ” பாஜக மாநிலத் தலைவர் தரப்பில் முழு அடைப்பு அழைப்பு விடுவிக்கவில்லை, தேசிய செயற்குழு உறுப்பினர் அறிவிப்பை மாநிலத் தலைமை அங்கீகரிக்கவில்லை ” என அண்ணாமலை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, பாஜகவில் கோஷ்டி மோதல் வலுவடைந்து மதுரையில் வானதி சீனிவாசனிற்காக அடிக்கப்பட்ட போஸ்டரில் அண்ணாமலையின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக இப்போஸ்டர் புகைப்படம் வைரல் செய்யப்படுகிறது.

வைரல் செய்யப்படும் போஸ்டர் படம் குறித்த நியூஸ் கார்டு குறித்து நியூஸ் 7 தமிழ் சேனலின் சமூக வளைத்தள பக்கங்களில் தேடுகையில், நவம்பர் 4ம் தேதி அப்படி எந்த நியூஸ் கார்டும் இடம்பெறவில்லை. நியூஸ் 7 தமிழ் தரப்பில் வெளியாகும் நியூஸ் கார்டில் அந்த நிறுவனத்தின் வாட்டர் மார்க் இடம்பெறும். ஆனால், பரப்பப்படும் நியூஸ் கார்டில் வாட்டர் மார்க் இடம்பெறவில்லை.

இதுகுறித்து, நியூஸ் 7 சேனல் தரப்பை தொடர்பு கொண்டு பேசுகையில், ” இந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிடவில்லை. போலியானது ” எனத் தெரிவித்து இருந்தனர்.

மேலும், வைரல் செய்யப்படும் போஸ்டரில் உன்னிப்பாக கவனித்தால் ” மதுரை மீனாட்சி அருளால் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணித் தலைவராகப் பொறுப்பேற்கும் பாசமிகு அக்கா ” என இடம்பெற்று இருக்கிறது.

பாரதிய ஜனதாவின் தேசிய மகளிரணி தலைவராக 2020ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி  வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Twitter link 

வைரல் செய்யப்படும் போஸ்டர் ஒட்டப்பட்ட போது(2020) தமிழக பாஜகவின் தலைவராக எல்.முருகன் பதவி வகித்து வந்தார். 2021 ஜூன் 8ம் தேதி தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

முடிவு : 

நம் தேடலில், மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை தவிர்த்து விட்டு போஸ்டர் அடித்த எல்.முருகன், வானதி சீனிவாசன் அணியினர் எனப் பரப்பப்படும் போஸ்டர் தவறானது. அது 2020ல் வானதி சீனிவாசனுக்காக அடிக்கப்பட்டது. அப்போது எல்.முருகன் பாஜக மாநிலத் தலைவராக இருந்தார், அண்ணாமலை அல்ல.

அதேபோல், போஸ்டருடன் வைரல் செய்யப்படும் நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டும் போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader