கோவையில் குண்டு வைக்க திட்டம் தீட்டியது திமுக என அழகிரி கூறியதாக வதந்தி!

பரவிய செய்தி
கோவையில் குண்டு வைக்க வெடிப்புக்கு திட்டம் தீட்டி கொடுத்ததே அப்போதைய ஆளுங்கட்சியான திமுக தான். ஸ்டாலினை இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் – மு.க.அழகிரி.
மதிப்பீடு
விளக்கம்
கோவையில் நடந்த குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டி கொடுத்ததே அப்பொழுது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகம் தான் என முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி ஊடகத்திற்கு பேட்டி அளித்ததாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. மு.க. அழகிரி கோவை குண்டு வெடிப்பு குறித்து திமுகவை சாடி கருத்து தெரிவித்ததாக செய்திகளில் வெளியாகவில்லை. மேலும், இப்படியொரு செய்தி வெளியாகி இருந்தால் சர்ச்சையாகி இருந்து இருக்கும்.
இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் நியூஸ் கார்டில் பரவும் செய்தி போலியானது என தந்தி டிவி வெளியிட்டு உள்ளது. தந்தி டிவி செய்தியின் நியூஸ் கார்டு லோகோ உடன் பகிரப்படும் நியூஸ் கார்டில் செய்தியை போட்டோஷாப் செய்து உள்ளார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளில் போலியான செய்தியை போட்டோஷாப் மூலம் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் எதிர் கருத்து மட்டுமின்றி மக்களுக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் பரப்பப்படும் தவறான போட்டோஷாப் செய்திகளில் இருந்து மக்கள் கவனமாக இருக்க கேட்டுக் கொள்கிறோம்.