This article is from Jul 31, 2018

கோவை குடிநீர் விநியோகம் தனியார் வசம்..!

பரவிய செய்தி

சிறுவாணி குடிநீருக்கு புகழ்பெற்ற கோவை இனி பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்தின் வேட்டைக் காடாகிறது. ரூ.3150 கோடிக்கு 26 ஆண்டுகளுக்கு உரிமம் பெற்றுள்ள அந்த நிறுவனம் குடிநீர் கட்டணத்தை நிர்ணயித்து விநியோகிக்கும்.

மதிப்பீடு

சுருக்கம்

கோவையில் குடிநீர் விநியோகிக்கும் உரிமம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது கோவை மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. குடிநீர் கட்டணம் நிர்ணயிப்பது பற்றி நிறுவனம் தெரிவித்தது என்னவென்று பார்க்கலாம்.

விளக்கம்

கோவை மாநகரில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதை தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்த கோவை மாநகராட்சி முடிவெடுத்தது. கோவையில் உள்ள பொது குழாய்களை நீக்கிவிட்டு அனைவரது வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கி தினந்தோறும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கான ரூ.550 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கையில், புதிய குழாய் அமைப்பது, பராமரிப்பது, புதிய குடிநீர் தொட்டிகள் கட்டுவது என்பவைகள் குறிப்பிடத்தக்கவை. இந்த திட்டத்தின் நோக்கம் அனைத்து வீடுகளுக்கும் பிரத்யேகமாக குடிநீர் விநியோகம் செய்வதும், பயன்படுத்தும் குடிநீருக்கும் ஏற்ப கட்டணம் வசூலிப்பதும், குடிநீரை சிக்கனமாக்கவும் என்பதே குறிக்கோள்.

இந்த திட்டத்தை செயல்படுத்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனம் முதல் ஒரு வருடத்தில் திட்டத்திற்கான கள ஆய்வு செய்யவும், பின் 4 நான்கு ஆண்டுகளில் திட்டத்தை செயல்படுத்தவும் உள்ளன.

கோவை திட்டம் குறித்து சூயஸ் நிறுவனம் தன் இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “ இந்தியாவின் கோவையில் 1.6 மில்லியன் குடியிருப்பவர்களுக்கு குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் மற்றும் செயல்படுத்தும் திட்டத்திற்கு சூயஸ் நிறுவனத்தை கோவை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் 26 ஆண்டுகள் கொண்ட 400 மில்லியன் யூரோஸ் மதிப்புடைய மிகப்பெரிய குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை சூயஸ் வென்றுள்ளது.

எங்களின் முதல் பணி 2012-ல் டெல்லியின் மால்வியா மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் மற்றும் விநியோகம் செய்தது ஆகும். இதே போன்று இந்தியாவின் மெட்ரோ நகரங்களான கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் விநியோகம் செய்யும் பணிகளை வெற்றிகரமாக செய்துள்ளோம் ” என்று இடம்பெற்றுள்ளது.

சூயஸ் நிறுவனம் திட்டத்திற்காக நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிநீருக்காக தனியார் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிக்கும், குடிநீருக்கான கட்டணத்தை மாநகராட்சி வசூலிக்காது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். நிறுவனம் நிர்ணயிக்கும் அளவிற்கு கட்டணத்தை செலுத்த மறுத்தால் விநியோகம் நிறுத்தப்படும் என்று மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வீடியோவிற்கு கீழே க்ளிக் செய்யவும்

இது குறித்து பேசிய மாநகராட்சி அதிகாரி, “ குடிநீர் கட்டணம் மாநகராட்சி நிர்ணயிக்காது, தனியார் நிறுவனமே நிர்ணயிக்கும் என்று தவறான தகவல் பரவி வருகிறது   ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சூயஸ் நிறுவனம் தரப்பில், “ குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்த அடிப்படையில் தேர்வாகி உள்ளோம். குடிநீர் கட்டணம் நிர்ணயிப்பது, வசூலிப்பது போன்றவற்றில் நாங்கள் ஈடுபட மாட்டோம். திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமே எங்களுது பணி “ என்று கூறியுள்ளனர்.

இவ்வாறு கூறும் நிறுவனத்தின் மீது 2013 -ல் சி.பி.ஐ கண்காணிப்பு இருந்தது. இருப்பினும், சர்ச்சைக்குரிய பிரச்சனையில் அந்நிறுவனம் மீது தகுந்த ஆதாரமில்லை என்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கோவைக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்ப்பிடிப்பான பில்லர் மற்றும் சிறுவாணி போன்றவை மூலம் தினமும் 200 எம்.எல்.டி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள 1467கி.மீ தொலைவிற்கான குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்கல் மற்றும் விநியோகத்தை மேற்கொள்வது, கண்காணிப்பதே சூயஸ் நிறுவனத்தின் பணியாகும். எனினும், குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருப்பது அரசின் இயலா நிலையை உணர்த்துகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader