Fact Checkஅரசியல்சமூக ஊடகம்தமிழ்நாடு

கிருஷ்ணகிரி இராணுவ வீரர் பிரபுவின் சாகசங்கள் எனப் பரப்பப்படும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் திறமையை பாருங்கள் .இப்படிப்பட்ட பயிற்சி பெற்ற ராணுவ வீரரை தமிழகத்தில், கவுன்சிலரால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி இரண்டு தரப்பிற்கு இடையே உருவான மோதலில் பிரபு என்ற இராணுவ வீரர் பலத்த காயங்களுடன் ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர் சின்னசாமி உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 6 பேரை கடந்த 9ம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். எனினும், பிப்ரவரி 14-ம் தேதி பிரபு உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி 15ம் தேதி கைது செய்யப்பட்டார்.

Advertisement

இதற்கிடையில், இராணுவ வீரர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பியது மட்டுமின்றி போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், ” இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே உறவினர்கள்தான். இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை ” என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் கொலை செய்யப்பட்ட இராணுவ வீரரின் திறமையை பாருங்கள் எனக் கூறி இராணுவ வீரர் ஒருவர் உடற்பயிற்சி மற்றும் சாகசங்கள் செய்யும் 1 நிமிட வீடியோவை சமூக வலைதளங்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் பலரும் பரப்பி வருகின்றனர்.

Twitter link | Archive link

உண்மை என்ன ? 

சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்ற இராணுவ வீரரின் தோற்றமும், கிருஷ்ணகிரி இராணுவ வீரர் பிரபுவின் தோற்றமும் வெவ்வேறாக இருப்பதை பார்க்க முடிந்தது.

வைரல் செய்யப்படும் வீடியோவில் உள்ள கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2022 ஜனவவரி 4ம் தேதி மேஜர் மதன் குமார் எனும் ட்விட்டர் பக்கத்தில் அதே வீடியோ பதிவாகி இருக்கிறது. ஆனால், வீடியோவில் இருப்பது யார் என்ற விவரங்கள் இடம்பெறவில்லை.

Twitter link 

மேற்கொண்டு தேடுகையில், இதே வீடியோவை திரைப்பட நடிகர் வித்யுத் ஜமால் தனது ட்விட்டர் பக்கத்தில் 2022 ஜனவரி 4ம் தேதி பதிவிட்டு இருக்கிறார். அவரின் பதிவு குறித்து NDTV செய்தியும் வெளியிட்டு இருக்கிறது.

நடிகர் வித்யுத் ஜமால் ட்விட்டர் பதிவின் கமெண்ட் பகுதியில், இவர் யார் என ஒருவர் கேட்கக் கேள்விக்கு ” இவர் அன்மோல் செளத்ரி. இன்ஸ்டாகிராமில் கூட பிரபலமானவர் ” என ஒருவர் பதில் அளித்து இருக்கிறார்.

Archive link 

அன்மோல் செளத்ரி என்பவர் குறித்து தேடுகையில், Anmol Chaudhary எனும் இன்ஸ்டாகிராம் பக்கமும், அந்த பக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான வைரல் வீடியோவின் பதிவும் கிடைத்தது. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இராணுவ வீரர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.

Instagaram link | Archive link

மேலும் படிக்க : “குண்டு வைப்போம்” என தமிழ்நாடு அரசை மிரட்டும் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் !

முடிவு :

நம் தேடலில், கிருஷ்ணகிரியில் கொலை செய்யப்பட்ட இராணுவ வீரர் பிரபுவின் திறமையை பாருங்கள் எனக் கூறி பாஜகவினர் பரப்பும் வீடியோவில் இருப்பது மறைந்த இராணுவ வீரர் பிரபு அல்ல. அந்த வீடியோக்கள் அனைத்தும் அன்மோல் செளத்ரி என்பவரின் இன்ஸ்டாகிராம் வீடியோக்களின் தொகுப்பு என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button