அமெரிக்கப்புகழ் ‘கிறிஸ்டா ராட்ரிக்ஸ்’ கேன்சரால் இறக்கும் போது கடைசியாக எழுதியவை எனப் பரவும் நடிகை சொனாலியின் புகைப்படம் !

பரவிய செய்தி
உலகப்புகழ்பெற்ற டிசைனர் (Crisda Rodriguez) சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.. மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.! இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்….
மதிப்பீடு
விளக்கம்
கிறிஸ்டா ராட்ரிக்ஸ் (Krysta Rodriguez) – அமெரிக்காவின் பிரபல பாடகி மற்றும் நடிகை ஆவார். இவர் சமீபத்தில் கேன்சரால் இறந்ததாகவும், இறக்கும் போது அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள் என்றும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அப்பதிவுகளில் சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்களும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தன.
உலகப்புகழ்பெற்ற டிசைனர்.( Crisda Rodriguez) சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்..
மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !
இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து… pic.twitter.com/t3KaUVx4Dt— கைப்புள்ள (@kaippulla123) May 10, 2023
மேலும் அப்பதிவுகளில் “மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.! இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.! இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்….” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
பகிரப்படும் பதிவுகளில் உள்ள புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்க்கையில், அப்புகைப்படத்தில் உள்ளவர் அமெரிக்கப்புகழ் நடிகை கிறிஸ்டா ராட்ரிக்ஸ் (Krysta Rodriguez) இல்லை என்பதையும், இது நடிகை சோனாலி பிந்த்ரே-ன் புகைப்படம் என்பதையும் அறிய முடிந்தது. மேலும் பகிரப்படும் பதிவுகளில் நடிகை Krysta Rodriguez-ன் பெயர் தவறாக Crisda Rodriguez என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
மேலும் ஆய்வு செய்து பார்க்கையில் பரவி வரும் புகைப்படத்தினை 2021 ஜூன் 6 அன்று சோனாலி பிந்த்ரே தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “காலம் எப்படிப் பறக்கிறது… இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது வலிமையைக் காண்கிறேன், பலவீனத்தைக் காண்கிறேன், ஆனால் மிக முக்கியமாக, அதற்குப் பிறகு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை C வார்த்தை வரையறுத்து விடக்கூடாது என்று விருப்புகிறேன்….” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் Cancer என்பதை தான் ‘C வார்த்தை’ என்று குறிப்பிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
மேலும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2018 ஜூலை 4 அன்று பதிவிட்ட பதிவில் “…தனக்கு உயர்ந்த வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அது Metastatic breast cancer என்னும் வகையை சேர்ந்தது…” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டே புற்றுநோயால் அவதி பட்டுள்ளார் என்பதையும், பின்னர் நியூயார்க் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தன்னுடைய Level 4 – Metastatic breast cancer புற்றுநோயிலிருந்து 2021-இல் முழுவதுமாக மீண்டு, தற்போது ஆரோக்கியமாக உள்ளதையும் The Hindustan Times மற்றும் NDTV வெளியிட்டுள்ள செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.
எனவே சமூக வலைதளங்களில் நடிகை இறந்ததாகக் கூறி பரவி வரும் புகைப்படம் தவறானது. உண்மையில் அவர் 2021-இல் புற்றுநோயிலிருந்து தான் மீண்டு விட்டதாகக் கூறி பதிவிட்ட புகைப்படம் அது என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் நடிகை கிறிஸ்டா ராட்ரிக்ஸ் குறித்தும் தேடியதில், Media Mass என்னும் வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அவர் இறந்ததாக தற்போது முகநூலில் பலரும் இறப்பு அஞ்சலி பதிவுகள் எழுதி வருகின்றனர். அவ்வாறு பரவும் செய்தி தவறானது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தேடுகையில், பேஷன் ப்ளோக்கரான(Fashion blogger) கிர்சாய்டா ரோட்ரிஸ் (Kyrzayda Rodriguez) என்பவர் புற்றுநோயால் இறப்பதற்கு முன்பு பரவி வரும் பதிவுகளில் உள்ளது போன்ற(similar Statement) ஒத்தக் கருத்தைப் பேசியுள்ள வீடியோவை காண முடிந்தது.
மேலும் கிர்சாய்டா ரோட்ரிஸ் (Kyrzayda Rodriguez) இறந்ததை அமெரிக்காவின் பிரபல பாடகி மற்றும் நடிகையான கிறிஸ்டா ராட்ரிக்ஸ் (Krysta Rodriguez) எனத் தவறாகப் பரப்பியுள்ளனர். அதேபோன்று இந்தியாவில் கிர்சாய்டா ரோட்ரிஸ் கூறிய வார்த்தைகளையே நடிகை சோனாலியின் புகைப்படங்களுடன் அவர் இறந்ததாகக் கூறி தவறாகப் பகிர்ந்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில், சமூக வலைதளங்களில் கேன்சரால் இறந்ததாகப் பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர் அமெரிக்கப்புகழ் கிறிஸ்டா ராட்ரிக்ஸ் (Krysta Rodriguez) இல்லை என்பதையும், இது நடிகை சோனாலி பிந்த்ரே-ன் புகைப்படம். மேலும் இவர்கள் இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்து, தற்போது ஆரோக்கியமாக உள்ளார்கள்.
பேஷன் ப்ளோக்கரான கிர்சாய்டா ரோட்ரிஸ் புற்றுநோயால் இறப்பதற்கு முன்பு பேசியதில் சில கருத்துக்களை இணைத்து சோனாலி பிந்த்ரேவின் புகைப்படத்துடன் பரப்பி உள்ளனர். மேலும், கிறிஸ்டா ராட்ரிக்ஸ் என நடிகையின் பெயரையும் தவறாக இணைத்து உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
பேஷன் ப்ளோக்கரான கிர்சாய்டா ரோட்ரிஸ் புற்றுநோயால் இறப்பதற்கு முன்பு பரவி வரும் பதிவுகளில் இருப்பதை ஒத்தக் கருத்தைப் பேசியுள்ள வீடியோவை கண்டறிந்தோம். எனவே கிடைத்த விவரங்களை கட்டுரையில் இணைத்து உள்ளோம்.