மத உடையில் அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்குவதாக பாஜகவினர் பரப்பிய வதந்தி.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கேரள பாஜகவின் தலைவர் கே.சுரேந்திரன் ட்விட்டர் பக்கத்தில் , ” இந்த புகைப்படம் (24.05.2022) திருவனந்தபுரத்தில் இருந்து மாவேலிக்கரை செல்லும் கேரளா ஆர்டிசியின் பாஸ்ட் பாசஞ்சர் பேருந்தில் இருந்து எடுக்கப்பட்டது. சீருடை எங்கே ? கேஎஸ்ஆர்டிசி டிரைவர்களின் புதிய சீருடையா ? காவல்துறை, தீயணைப்பு படை அதிகாரிகள் சிலர் இந்த சீருடையில் பணிக்கு வருவார்களா என்று யாருக்குத் தெரியும் ? ” என இப்புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அரசின் சீருடையில் இல்லாமல், தலையில் தொப்பி, கழுத்தில் துண்டு, நீளமான வெள்ளை குர்தா உடை அணிந்து பேருந்தை இயக்குவதாக கடுமையான விமர்சனங்கள் உடன் இப்படம் வைரலாகி வருகிறது. இப்படமானது, கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ட்விட்டர் உள்ளிடவையில் பகிரப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகள் பஸ்ஸை கடத்துவது போல தெரிகிறது 😂@CMOKerala https://t.co/8T47wuxpNr
— கிலி 🦜 (@officialak251) May 26, 2022
உண்மை என்ன ?
பாஜகவினரால் வைரல் செய்யப்படும் புகைப்படத்தை நன்றாக கவனிக்கையில், அவர் நீளமான வெள்ளை குர்தா போன்ற உடையை அணிந்து இருக்கவில்லை, நீல நிறத்திலான சட்டையும், பேண்ட் அணிந்து இருக்கிறார். மடியில் வெள்ளை நிறத்திலான துண்டை விரித்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, புகைப்படத்தில் இருக்கும் நபர் கேரள அரசின் பேருந்து ஓட்டுனருக்கான சீருடையில் தான் இருக்கிறார்.
2015-ல் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு காக்கி நிற சீருடைக்கு பதிலாக நீல நிற (sky blue) சட்டையும், அடர் நீல நிறத்திலான பேண்ட் என சீருடையை மாற்றி அறிவித்து இருந்தது கேரளா அரசு. இதையடுத்து, கடந்த 7 ஆண்டுகளாக நீல நிற சீருடையை தான் பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் அணிந்து பணியாற்றி வருகிறார்கள்.
ஓட்டுநரின் புகைப்படம் வைரலானதை அடுத்து கேஎஸ்ஆர்டிசி நடத்திய விசாரணையில், ஓட்டுநர் பி.எச்.அஷ்ரப் அரசு நிர்ணயித்த சீருடையைதான் அணிந்து இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து மாவேலிக்கரைக்கு ஓட்டுநர் அஷ்ரப் பேருந்தை ஓட்டிச் செல்லும் போது இப்புகைப்படம் எடுத்து தவறாக பரப்பப்பட்டு உள்ளது.
கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஓட்டுநரின் புகைப்படம் பாஜகவினரால் சர்ச்சையாக்கப்பட்ட பிறகு ஓட்டுநர் பி.எச்.அஷ்ரப் சீருடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது..
முடிவு :
நம் தேடலில், கேரளாவில் அரசு பேருந்தை இஸ்லாமிய ஓட்டுநர் இயக்கும் போது நீல நிற சீருடை சட்டை மற்றும் மடியில் வெள்ளை நிற துண்டு உடன் இருந்ததை வெள்ளை நிற குர்தா என்றும் , மத உடையில் பேருந்தை இயக்குவதாக பாஜகவினர் தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.