குக்கி பழங்குடியினர் இந்தியர்களே இல்லை என இந்து மக்கள் கட்சி பரப்பும் பொய் !

பரவிய செய்தி
குக்கி பழங்குடியினர் இந்தியர்கள் அல்ல. அவர்களால் எந்த உரிமையையும் கோரவோ அல்லது மற்றவர்களுக்குரிய எந்த உரிமையையும் மறுக்கவோ முடியாது.
மதிப்பீடு
விளக்கம்
மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து மணிப்பூரிலுள்ள குக்கி பழங்குடியினரின் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு நேற்று (ஜூலை 26) பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குக்கி பழங்குடியின மக்கள் இந்தியர்களே அல்ல, அவர்கள் தற்போதைய மியான்மரில் இருந்து தப்பி வந்த அகதிகள் என்று கூறிய 1968-இல் வெளியான கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இந்த கடிதத்தை மெய்தி இனத்தவரின் ட்விட்டர் பக்கமான Meitei Heritage Society உட்பட, இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் காண முடிகிறது.
Old pic, retweeting again. Lets we forget, who the Kukis are and how they came to Manipur. Official Govt documents of 1968 writing for settlement of “Kukis refugees from Burma.” #savemeitei #SaveManipur #KukiTerrorists #kukimilitants #IllegalImmigrants #ManipurUnderAttack… pic.twitter.com/pC0D54DXmw
— Meitei Heritage Society (@meiteiheritage) June 14, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்தபோது, குக்கி பழங்குடியினரின் வரலாறு குறித்து தி இந்து இணையதளத்தில் வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளை காண முடிந்தது. அதில், முதல் கட்டுரை “குக்கி மக்கள் | நிலம் மற்றும் அடையாளத்திற்கான போராட்டம்” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த கட்டுரையில் 1870 ஆம் ஆண்டில் சிட்டகாங் மலைப்பாதையின் துணை ஆணையராக இருந்த கேப்டன் டிஎச் லெவின் குக்கி பழங்குடியினர் குறித்து கூறிய வார்த்தைகள் விளக்கப்பட்டிருந்தன. அவர் தன்னுடைய குறிப்பில் “குக்கிகளை மலைப் பகுதிகளின் எல்லைகளைத் தொடும் ஒரு “சக்திவாய்ந்த மற்றும் சுதந்திரமான” மக்கள் என்றும், அவர்கள் ஒருபுறத்தில் கச்சார் (இப்போதைய அஸ்ஸாம்) பகுதியையும், மறுபுறத்தில் பர்மாவின் (மியான்மர்) எல்லைகளையும் அடையும் வரை எண்ணற்ற கூட்டங்களாக சேர்ந்து வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதி வரை நீண்டிருந்தனர். ” என்றும் எழுதியுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி இந்து வெளியிட்டுள்ள இரண்டாவது கட்டுரை “மணிப்பூரில் குக்கி கிளர்ச்சியின் வரலாறு ‘ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “குக்கிகள் என்பவர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் வாழும் பல்வேறு பழங்குடியினர்களை கொண்ட ஒரு இனக்குழு என்று குறிப்பிடுகிறது; மேலும் அவர்கள் பர்மாவின் பகுதிகள் (தற்போதைய மியான்மர்), சில்ஹெட் மாவட்டம் மற்றும் பங்களாதேஷின் சிட்டகாங் மலைப் பகுதிகளிலும் வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளது.
திரிபுரா மாநில அரசின் பழங்குடி ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், “குக்கி பழங்குடியினர் வெவ்வேறு சமூகங்களில், வெவ்வேறு பெயர்களோடு அழைக்கப்படுவதாக குறிப்பிடுகிறது. சிலர் அவர்களை லுஷாய் என்றும், சிலர் குக்கி, டார்லாங்ஸ், ரோகும்ஸ் என்றும், பர்மாவின் எல்லைகளில் சின்கள் என்றும் அவர்கள் அழைக்கப்படுவதாகக் கூறுகிறது. ஆனால் அவர்கள் தங்களை ஹரேம் என்று தான் அழைத்துக் கொள்கின்றனர். எனவே ‘குக்கி’ என்பது சமூகத்தின் ஒரு பொதுவான பெயராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.” என்று கூறுகிறது.
1950-இல் வெளியிடப்பட்ட அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை, குக்கி பழங்குடியினர் உட்பட்ட பல்வேறு சமூகங்களுக்கு, ST (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. மேலும் மணிப்பூர் 1971 வரை அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது,1972 இல் தான் மாநில அந்தஸ்து பெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



முடிவு :
நம் தேடலில், பர்மாவில் இருந்து வந்த குக்கி அகதிகளுக்கு குடியேற்றத்திற்காக 1968ல் வெளிவந்த கடிதத்தை வைத்து கொண்டு குக்கி இன மக்கள் அனைவரும் இந்தியர்கள் அல்ல எனப் பரவி வரும் தகவல்கள் பொய்யானவை.
மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின்படி குக்கி இன மக்கள் இந்தியாவில் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலும் 1950-லேயே அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக இந்திய அரசால் எஸ்டி அந்தஸ்து வழங்கப்பட்டுவிட்டது என்பதையும் அறிய முடிகிறது.