கங்கனாவை அறைந்தவருடன் ராகுல் காந்தி புகைப்படம் எனப் பரவும் பொய்த் தகவல்!

மதிப்பீடு

பரவிய செய்தி: 

இவள்தான் குல்விந்தர் கவுர்!!! இவள்தான் கங்கனா ராவத்தை கண்ணத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று!!!

விளக்கம்:

சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் ஒருவர், திரைப்பட நடிகையும் மண்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. விவசாயிகளை கங்கனா ரனாவத் அவமரியாதை செய்ததாலேயே அவ்வாறு தான் அறைந்ததாக அந்த பெண் காவலர் விசாரணையில் கூறியுள்ளதாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் குல்விந்தர் கவுர் புகைப்படம் எடுத்திருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது. மேலும், குல்விந்தர் கவுர் கங்கனா ரனாவத்தை அறைந்ததற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பொருள்படும்படியாக அந்த செய்தி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை என்ன:

பரவும் புகைப்படத்தை தேடி பார்க்கும்போது அந்த புகைப்படத்தில் இருப்பது (சிஐஎஸ்எஃப்) அதிகாரி குல்விந்தர் கவுர் இல்லை என்பதும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் காங்கிரஸ் கட்சியின் திவ்யா மஹிபால் மதேர்னா என்பதும் தெரியவந்தது.

இவர் ராஜஸ்தான் மாநில ஓசியன் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தனது சமுக வலைதளப் பக்கத்தில் பிப்ரவரி 14 அன்று பதிவுசெய்த புகைப்படத்தை தவறாக பரப்பி வருகின்றனர்.


தனது புகைப்படம் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறிந்த திவ்யா மதேர்னா இதுகுறித்த விளக்கப்பதிவு ஒன்றையும் இன்று (14/06/2024) தன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். தன்னை CISF அதிகாரி குல்விந்தர் கவுர் என தவறாக சித்தரித்து, மரியாதைக்குரிய காந்தி குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே இப்படி எதிர்க்கட்சியினர் செய்வதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

முடிவு:

நம் தேடலில், பரவும் இந்த புகைப்படம் பிப்ரவரி 14,2024 அன்று எடுக்கப்பட்டது என்றும் அதில் இருப்பது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திவ்யா மஹிபால் மதேர்னா என்பதும் உறுதியாகிறது. எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் குல்விந்தர் கவுர் இருப்பதாக சொல்லப்பட்ட செய்தி பொய்யானது என்பதை அறியமுடிகிறது.

–  எஸ். விஜய் 

Please complete the required fields.




Back to top button
loader