This article is from Jul 02, 2020

கும்பகோணம் கோபால் ஐயர் கொலையில் பாஜக பிரமுகர் கைது| மார்க்சிஸ்ட், இஸ்லாமியர் என வதந்தி !

பரவிய செய்தி

கும்பகோணம் நாச்சியார்கோவில் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் வாசுதேவன்ஜி தந்தை கோபால் ஐயர் 30.6.2020 அன்று இரவு 8 மணிக்கு கும்பகோணம் பெருமாள் கோவில் நுழைவாயிலில் பயங்கரவாதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையை செய்தது மார்க்சிஸ்ட் எனக் கூறப்படுகிறது.

மதிப்பீடு

விளக்கம்

கும்பகோணத்தில் இருந்து 10கி.மீ தொலைவில் உள்ள நாச்சியார்கோவில் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் வாசுதேவனின் தந்தை பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என அவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோரும் கொலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். சில ஆங்கில மீம் பதிவுகளில் மார்க்சிஸ்ட் ஆட்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது எனக் குறிப்பிட்டு வருகிறார்கள்.

Twitter link | archive link 

Facebook archive link 

யோக நரசிம்மன் எனும் முகநூல் பக்கத்தில், படுகொலை இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்ந்தாக பதிவிட்டு பின்னர் அந்த வார்த்தையை மாற்றப்பட்டுள்ளது. இப்படி பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

Facebook link | archive link 

உண்மை என்ன ? 

நாச்சியார்கோவிலில் கோபாலன் என்பவரை கொலை செய்தது பயங்கரவாதிகள், மர்ம நபர்கள் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தருணத்தில் கொலையாளி பாஜக பிரமுகர் என்கிற செய்திகள் வெளியாகி உள்ளன.

” ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் மண்டலப் பொறுப்பாளர் வாசுதேவன் அவர்களின் தந்தையான கோபாலன் (68) ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார். நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள அபினவ் தீர்த்தசுவாமி மடத்தின் பொறுப்பாளராக கோபாலன் இருந்து வந்தார். மடத்துக்கு சொந்தமாக உள்ள 13 கடைகளில் பலர் வாடகை செலுத்தாத காரணத்தினால் மடத்தின் நிர்வாகம் கடைகளை காலி செய்யக் கூறியது. இதனால் பலரும் கடைகளை காலி செய்துள்ளனர்.

ஆனால், மடத்தின் கடையில் டெய்லர் கடை நடத்தி வந்த பாஜகவின் நாச்சியார்கோவில் நகரத் தலைவர் சரவணன் (48) கடையை காலி செய்ய மறுத்துள்ளார். இதனால் கோபாலன் நீதிமன்றம் சென்று கடையை காலி செய்ய வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தன் வீட்டிற்கு வெளியே இருந்த கோபாலனை கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பியுள்ளார். இதனால் கோபாலன் உயிரிழந்தார். இதையடுத்து, நாச்சியார்கோவில் போலீஸ் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்துள்ளதாக ” ஹிந்து தமிழ் மற்றும் தினமலர் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

சிலர் இந்த செய்தியை ஏற்காமல் பாஜக நிர்வாகி என ஒருவர் தானாக வந்து சரணடைந்ததாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், இதற்கு பின்னால் பலர் இருப்பதாகவும், முழுமையான விசாரணை வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.

கொலை செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியது கட்டாயம். ஆனால், தவறான தகவல்களை பரப்புவதோ அல்லது அரசியல் செய்வதோ சரியல்ல.

முடிவு : 

நம்முடைய தேடலில், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளரின் தந்தை கொலை செய்யப்பட்டது பாஜக பிரமுகரால் என்பதையும், அதை வைத்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader