This article is from Apr 30, 2020

கர்னூல் எம்எல்ஏ செவிலியரை முஸ்லீம் மதகுருவின் காலில் விழச் சொன்னதாக வதந்தி !

பரவிய செய்தி

ஆந்திராவின் கர்னூல் மருத்துவ கல்லூரியில், உள்ளூர் எம்எல்ஏ ஹபீஸ் கான் செவிலியரை கட்டாயப்படுத்தி முஸ்லீம் மதக்குருவின் காலில் விழச் செய்துள்ளார். மார்கஸ் நிசாமுதீன் சென்றவர்கள் அவர்களாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்திருந்தால் இந்த சூழ்நிலை உருவாகி இருக்காது என தன்னுடன் பணியாற்றுபவரிடம் கூறியதே இதற்கு காரணம்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஆந்திராவில் உள்ள கர்னூல் தொகுதியின் எம்எல்ஏ அப்துல் ஹபீஸ் கான் செவிலியர் ஒருவரை இமாம் காலில் விழச் செய்ததாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது.

உண்மை என்ன ? 

கர்னூல் தொகுதியின் எம்எல்ஏ அப்துல் ஹபீஸ் கான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஏப்ரல் 23-ம் தேதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தனிமைப்படுத்துதல் காலத்தில் மூத்த குடிமகன் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது , அவருக்கு செவிலியர் முதலுதவி செய்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதேபோன்ற வதந்திகளை தவிர்க்குமாறு சில புகைப்படங்களுடன் கூடிய மீம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

Facebook link | archive link 

கர்னூல் போலீஸ் உடைய முகநூல் பக்கத்தில் அதே மீம் உடன், ” அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி. அவருக்கு பார்வையிலும் பிரச்சனை இருக்கிறது. அவர் தவறுதலாக கேட்டில் காலை இடித்துக் கொண்டதால் அதிக அளவில் இரத்தம் வந்துள்ளது. அவர் நீரழிவு நோயாளி என்பதால் உடனடியாக செவிலியர் காலில் இருந்த இரத்தத்தை துடைத்து பேண்டேஜ் போட்டுள்ளார். எனினும், இரத்தம் நிற்காத காரணத்தினால் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செவிலியர் தன் கடமையை செய்தார் மற்றும் அவருக்கு சிகிச்சை செய்தார் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

Facebook link | archive link 

கர்னூல் பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டதற்கு முதலுதவி செய்த செவிலியரின் புகைப்படத்தை வைத்து மதம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் தவறான செய்தியை பரப்புகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader