மல்யுத்த வீராங்கனைகள் பற்றி குஷ்பு பேசியதாகப் பரவும் தினமலரின் போலி நியூஸ் கார்டு.. அதையே பகிர்ந்து விமர்சித்த குஷ்பு !

பரவிய செய்தி
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னைப் பற்றி பேசிய வீடியோ வைரலானது போல் ப்ரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு
மதிப்பீடு
விளக்கம்
பிரபல இந்திய மல்யுத்த வீரர்கள் WFI (Wrestling Federation of India) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறியும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியும், அவரை கைது செய்யக் கோரி கடந்த ஏப்ரல் 23-ல் இருந்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னைப் பற்றி பேசிய வீடியோ வைரலானது போல் ப்ரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜகவைச் சேர்ந்த குஷ்பு கூறியதாகக் கூறி தினமலரின் நியூஸ் கார்டு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் இந்த நியூஸ் கார்டை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, அப்பதிவில் “பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். இதை நான் கூறவே இல்ல. தினமலர் போலிச் செய்திகளைப் பரப்புவதில் இவ்வளவு கீழ் நிலையில் செயல்படுவதைப் பார்த்ததும் ஆச்சரியமாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.
Expect press & media to be responsible. Never ever I have said this. Surprised to see @dinamalar daily stooping to this level with fake news. pic.twitter.com/KwmfEzF2Fp
— KhushbuSundar (@khushsundar) June 20, 2023
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து தினமலரின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், ப்ரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த ஆதாரங்கள் குறித்து குஷ்பு கூறியது குறித்து எந்த நியூஸ் கார்டும் தினமலர் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் இது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் “திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? – காங்கிரசுக்கு குஷ்பு சவால்” என்னும் தலைப்பில் நேற்று (ஜூன் 19) தினமலர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது.
எனவே “திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா?” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினமலர், “தினமலர் பெயரில் குஷ்பு சொன்னதாக சமூகவலைத்தளங்களில் பரவும் போலி பதிவு” என்று குறிப்பிட்டு பரவி வரும் நியூஸ் கார்டுக்கு மறுப்பு தெரிவித்து பதிவுசெய்துள்ளனர்.
மேலும் படிக்க: வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை எனப் பரவும் போலிச் செய்தி !
மேலும் படிக்க: நடிகர் விஜய் வாரிசு பட வெற்றியை பட்டாக் கத்தியுடன் கொண்டாடியதாக தினமலர் வெளியிட்ட பொய் செய்தி !
முடிவு:
நம் தேடலில், ப்ரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜகவைச் சேர்ந்த குஷ்பு கூறியதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தினமலரின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.