This article is from Apr 01, 2018

க்வாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் தயாரிப்பில் வனஸ்பதி ஆயிலா ?

பரவிய செய்தி

க்வாலிட்டி வால்ஸ் (KwalityWalls) – இது ஐஸ்கிரீமே அல்ல கடந்த ஆண்டு அமுல் நிறுவனம் தொடந்த ஒரு வழக்கின் மூலம் தான் ஒரு உண்மை வெளியே வந்தது. அதாவது உலகளாவிய உணவு விதிகளின் படி பால், சர்க்கரை சேர்த்து செய்த பனிக்கூழ் தான் ஐஸ்கிரீம். ஆனால் யூனிலீவர் , பாமாயிலை ஹைட்ரஜனேற்றம் செய்து ( கிட்டத்தட்ட வனஸ்பதி தயாரிப்பதை போல ) , அதற்கு செயற்கை சுவையூட்டி ஐஸ்கிரீம் தயாரிக்கிறது. அமுல் தொடர்ந்த வழக்கிற்கு பிறகும் யூனிலீவர் தொடர்ந்து ஐஸ்கிரீம் விற்கிறது ஆனால் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை சொல்லாமல்.. ஆம் குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் பேக்கிங்கில் “Icecream” வார்த்தையே இல்லை.KwalityWalls என்ற பெயர் மட்டுமே இருக்கும். அது என்ன பொருள் என்றும் குறிப்பிடப்படவில்லை . ஆனாலும் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது….

மதிப்பீடு

சுருக்கம்

க்வாலிட்டி வால்ஸ் “ Frozen Desserts ” தயாரிப்பில் வனஸ்பதி ஆயில் உள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறு, வெஜிடபிள் ஆயில் மட்டுமே சேர்க்கப்படுவதாக ஹிந்துஸ்தான் யூனிலிவேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளக்கம்

கோடைக் காலம் என்றாலே வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவையே அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களாக இருப்பதை அனைவரும் அறிவோம். இத்தகைய உணவு தயாரிப்பில் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்களாக இருப்பது ஹிந்துஸ்தான் யூனிலிவேர் மற்றும் அமுல் ஆகியவை. வியாபாரத்தில் இருக்கும் போட்டியில் இரு நிறுவனங்களும் இடையேயான போர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதற்கு காரணம், ஹிந்துஸ்தான் யூனிலிவேரின் க்வாலிட்டி வால்ஸ் பற்றி அமுல் நிறுவனம் வெளியிட்ட தவறான விளம்பரமே.!

குவாலிட்டி வால்ஸ் மீதான புகாரும் அமுல் நிறுவனத்தின் விளம்பரமும் :

சில ஆண்டுகளுக்கு முன்னர் அமுல் நிறுவனம் பாலினால் தயாரிக்கப்படுவது தான் ஐஸ்கிரீம், குவாலிட்டி வால்ஸ் வெஜிடபிள் ஆயில் பயன்படுத்துவதால் அது ஐஸ்கிரீம் இல்லை, விளம்பரங்களில் ஐஸ்கிரீம் என்று பயன்படுத்துவதாக புகார் கூறியது. நுகர்வோர் களிடமும் எழுந்த புகார் காரணமாக The Advertising Standards Council of India (ASCI) குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை நீக்குமாறும் மேலும் ப்ரோசன் டிசர்ட் என்று குறிப்பிடவும் கூறியது. பின்னர் அமுல் நிறுவனம் தனது ஐஸ்கிரீம் தயாரிப்பு பற்றி “ real milk, real ice cream ” என்ற விளம்பரத்தில் மறைமுகமாக இந்திய ஐஸ்கிரீம் நிறுவனம் அவர்கள் தயாரிப்பில் மலிவான மற்றும் ஆரோக்கியமற்ற வனஸ்பதி ஆயில் சேர்ப்பதாக குறிப்பிட்டு இருப்பர். இந்த விளம்பரம் மிகப்பெரிய மோதலை ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்குள் உருவாக்கியது. இதையடுத்து ஹிந்துஸ்தான் யூனிலிவேர், வாடிலால் மற்றும் சில ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் அமுல் தயாரிப்பின் தாய் நிறுவனமான “ Gujarat Cooperative Milk Marketing Federation ” மீது வழக்கு தொடர்ந்தனர்.

அமுல் நிறுவனத்தின் குற்றச்சாட்டிற்கு ஹிந்துஸ்தான் யூனிலிவேர் செய்தி தொடர்பாளர் அளித்த விளக்கம், “ விளம்பரத்தில் கூறிய தவறான கூற்றுப்படி க்வாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் மற்றும் உறைந்த இனிப்பு ஆகியவற்றில் வனஸ்பதி ஆயில் சேர்க்கப்படவில்லை.   க்வாலிட்டி வால்ஸின் உறைந்த இனிப்பு தயாரிப்புகளில் ஐஸ்கிரீமில் உள்ளது போன்றே பால் / பால் கட்டிகள் சேர்க்கப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் பால் கொழுப்பிற்கு பதிலாக வெஜிடபிள் ஆயில் சேர்க்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

  • க்வாலிட்டி வால்ஸின் தயாரிப்புகளில் ice cream மற்றும் Frozen Desserts என இரு வேறு குளிர் உணவு பொருட்கள் உள்ளன.
  • Frozen Desserts என்ற உறைந்த இணைப்பு தயாரிப்பில் மட்டுமே வெஜிடபிள் ஆயில் சேர்க்கப்படுகிறது.
  • இணையத்தில் க்வாலிட்டி வால்ஸின் தயாரிப்பில் ஐஸ்கிரீம் என குறிப்பிடவே இல்லை என காண்பிக்கப்பட்ட படங்கள் Frozen Desserts உடையவை.
  • ஹிந்துஸ்தான் யூனிலிவேர் தொடர்ந்த வழக்கில் ஜூன் 16, 2017-ல் மும்பை உயர் நீதிமன்றம் அமுல் நிறுவனத்தின் விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டது.

 

குவாலிட்டி வால்ஸ் நிறுவனம் சில கேள்விகளுக்கு இணையத்தில் விளக்கமளித்துள்ளது:  

ஐஸ்கிரீம் மற்றும் ப்ரோசன் டிசர்ட் வேறுபாடு: இரண்டிலும் பால்/பால் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். ஐஸ்கிரீமில் பால் கொழுப்பும் ப்ரோசன் டிசர்ட்டில் வெஜிடபிள் கொழுப்பும்( அட்டையில் ‘edible vegetable oil/palm oil’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்) சேர்க்கப்படும். குவாலிட்டி வால்ஸ் பொருட்களில் டால்டா சேர்க்கப்பட்டுள்ளதா? டால்டாவிற்கும் வெஜிடபிள் ஆயிலிற்கும் வேறுபாடு: டால்டா(வனஸ்பதி) சேர்க்கப்படுவதில்லை. வனஸ்பதி சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணையை ஹைட்ரஜனேற்றம் செய்வதை குறிக்கிறது. காய்கறி எண்ணெய்யில் குறைந்த கொழுப்பு கொண்டது மற்றும் வனஸ்பதியில் இருக்கும் டிரான்ஸ் கொழுப்பு இல்லை.

நல்லதோ கெட்டதோ மக்களுக்கு தான் சாப்பிடும் பொருள் என்னவென்று தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் சரி தான். வியாபாரத்தில் உருவான போட்டியால் இரு நிறுவனங்களுக்கு இடையேயான போர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. எனினும், சில பொருந்தாத செய்திகள் இதனுடன் இணைத்து இணையத்தில் பரவி வருகிறது.

 

*Disclaimer: This information are based on available source,  we request readers to consult doctor before taking any decision and not based on this or any article in interest.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader