பொள்ளாச்சி விவகாரத்தை விசாரித்த பெண் ஆய்வாளர் தற்கொலையா ?

பரவிய செய்தி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த பெண் ஆய்வாளர் தூக்கு போட்டு தற்கொலை: என்ன நடந்ததோ துப்புகெட்ட ஆட்சி பொள்ளாச்சியே சாட்சி .
மதிப்பீடு
சுருக்கம்
பெண் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உண்மையாக இருந்தாலும், அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
விளக்கம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை திறம்பட விசாரித்து வந்த பெண் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் புகைப்படங்கள் வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வளைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
பகிரப்படும் படத்தில் இருப்பவர் விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பல காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஆக பணிபுரிந்து இன்ஸ்பெக்டர் ஆக பதவி உயர்வு பெற்ற ஜெய்ஹிந்த் தேவி ஆவார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தை உடன் வசித்து வந்த ஜெய்ஹிந்த் தேவி தூக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என செய்திகளில் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி நெய்வேலி தெர்மோ காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரித்து வருகின்றதாக ஜெய்ஹிந்த் தேவி படத்துடன் தவறான செய்தி பகிரப்படுகிறது.
ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நெய்வேலியில் உள்ள ஜவகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்பொழுது கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஜெய்ஹிந்த் தேவியும் இருந்துள்ளார்.. அதை வைத்துக்கூட வதந்தியை பரப்பி இருப்பர்..