லலிதா ஜூவல்லரி உரிமையாளர் தமிழகத்திற்கு மட்டும் நிதியளிக்கவில்லையா ?

பரவிய செய்தி
லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ரெட்டி பிறந்து வளர்ந்தது நெல்லூர். பிழைக்க வந்தது சென்னை. சாதாரண நடுத்தர குடும்பம் இன்று தென்னிந்தியாவில் 15 கடைகள் பல ஆயிரம் கோடி சொத்துக்கள். கொரானா நிவாரண நிதியாக தலா ஒருகோடி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு. ஆனால் தமிழகத்திற்கு ஒன்றுமில்லை. இதுதான் தமிழ்நாட்டு நிதர்சனம்.
மதிப்பீடு
விளக்கம்
லலிதா ஜூவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் கிரண்குமார் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தின் முதல்வர்களிடம் தலா 1 கோடி அளித்து உள்ளார். ஆனால், தமிழகத்தில் பல கிளைகளை நிறுவி இருக்கும் கிரண்குமார் தமிழக நிவாரண நிதிக்கு மட்டும் பங்களிக்கவில்லை என்றொரு தகவல் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கொரோனா நிவாரண நிதி அளித்தது தொடர்பாக தேடிய பொழுது, Uniindia, telungu samayam மற்றும் telanganatoday ஆகிய செய்தி இணையதளங்களில் வெளியான செய்தி கிடைத்தது.
தெலங்கானாடுடே செய்தியில் ” பிரபல நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி அளித்துள்ளார். அந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.கிரண் குமார் ஒரு கோடிக்கான காசோலையை பிரகதி பவனில் முதல்வரிடம் ஒப்படைத்தார். மேலும், அவர் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 1 கோடி ரூபாய் அளித்துள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.
Uniindia செய்தி தளத்திற்கு கிரண்குமார் அளித்த தகவலில், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு தலா ஒரு கோடி அளித்து உள்ளதை கூறியதாக இடம்பெற்று இருக்கிறது. அதேபோல், லலிதா ஜுவல்லரி உடைய இணையதளத்தில் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களுக்கு தலா 1 கோடி வீதம் 3 கோடி அளித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லூரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த கிரண்குமார் தன்னுடைய வாழ்க்கையை சென்னையில் தொடங்கினார். தன் கடையின் விளம்பரத்தில் தோன்றிய பிறகு மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். மேலும், கடந்த ஆண்டில் லலிதா ஜுவல்லரியின் திருச்சி கிளையில் கோடிக்கணக்கில் நகை கொள்ளை அடிக்கப்பட்ட போது உரிமையாளர் கிரண்குமார் தொடர்பான வதந்திகளும் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : லலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா ?| ஃபேஸ்புக் கதை.
நமது தேடலில், லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண்குமார் கொரோனா தடுப்பு நிவாரண நிதியை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்திற்கு மட்டும் அளித்துள்ளார், தமிழகத்திற்கு அளிக்கவில்லை என பரவும் தகவல் தவறானது. அவர் தமிழகத்திற்கும் நிவாரண நிதி அளித்துள்ளார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.