லலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா ?| ஃபேஸ்புக் கதை.

பரவிய செய்தி
இன்று செய்தித்தாளில் படித்த செய்தி. நாம் எல்லோரும் லலிதா ஜூவல்லரி ஓனரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் கலாய்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார். ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி மறுக்கப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
திருச்சியில் உள்ள லலிதா நகைக்கடையில் கொள்ளையர்கள் கும்பல் கோடிக்கணக்கில் தங்கம், வைரல் உள்ளிட்ட ஆபரணங்களை கொள்ளையடித்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும், கொள்ளையர்களின் கும்பலில் ஒருவர் பின் ஒருவராக போலீசாரிடம் சிக்கத் துவங்கினர்.
இதில், குறிப்பாக கொள்ளையர்களின் தலைவனான முருகன் என்பவர் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து , பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து செய்திகளில் வெளியாகி வருவதை பார்த்து இருப்போம்.
இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு போலீஸ் விசாரணையில் இருக்கும் குற்றவாளியை லலிதா நகைக்கடை உரிமையாளர் கிரண் குமார் சந்தித்து பேசிய போது கேட்ட கேள்விகள், பதில்கள் என ஓர் கதை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் யூடர்னிடம் கேட்கப்பட்டு வருகிறது.
லலிதா நகைக்கடை உரிமையலர் கிரண்குமார் கொள்ளை குற்றவாளியை சந்தித்து பேசியதாக கூறப்படும் தகவல் அக்டோபர் 19-ம் தேதி முதல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவாகி இருக்கிறது.
இதற்கு அடுத்ததாக, ஒன் இந்தியா தமிழ் என்ற செய்தி இணையதளத்தின் யூட்யூப் சேனலில் அக்டோபர் 20-ம் தேதி ஃபேஸ்புக் பதிவு முழுவதையும் பேசி வீடியோவாக வெளியிட்டு இருந்தனர்.
பின்னர் அக்டோபர் 21-ம் தேதி ” அப்பாடா.. ரொம்ப நன்றிப்பா.. கொள்ளையன் முருகனுக்கு நன்றி சொன்ன லலிதா ஜுவல்லரி ஓனர்! ” என்ற தலைப்பில் செய்தியாகவே வெளியிட்டு இருந்தனர்.
ஃபேஸ்புக் பதிவுகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிடிபட்ட குற்றவாளி எனக் கூறி இருக்கிறார்கள் , ஒன் இந்தியா தமிழ் செய்தியில் கொள்ளையர்களின் தலைவன் முருகனை சந்தித்து பேசியதாக வெளியிட்டு இருக்கின்றனர்.
உண்மை என்ன ?
லலிதா நகைக்கடை உரிமையாளர் கிரண் குமார் குற்றவாளியை நேரில் சந்தித்து பேசியதாக முதன்மை செய்தி ஊடகங்களில் ஒரு சிறு செய்தி கூட வெளியாகவில்லை. மூன்று நாட்களாக ஃபேஸ்புக் பதிவு பரவிய பிறகே ஒன் இந்தியா உள்ளிட்ட ஒரு சில இணையதளங்களில் அப்படியே கதை மாறாமல் பதிவாகி இருக்கிறது. மற்றபடி , முதன்மை ஊடகங்களிலோ , செய்தித்தாள்களிலோ வெளியாகவில்லை.
இந்த கதையின் ஃபேஸ்புக் பதிவுகளில் பலர் நம்பி பகிர்ந்து இருந்தாலும், ஒரு சிலர் எந்த செய்தித்தாளில் வெளியாகியது உள்ளிட்ட கேள்விகளையும், பொய்யான கதை என்றும் கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.
ஆக, ஃபேஸ்புக்கில் யாரோ ஒருவர் எழுதிய கதையை உண்மை என நினைத்து பகிரச் செய்து யூட்யூப் சேனல்கள், இணைய செய்திகள் வரை வர காரணமாகி உள்ளனர். இணைய செய்திகளும் உண்மையான தகவல்களை விடுத்து, ஃபேஸ்புக் கதைகளை செய்தியாக வெளியிட்டு வருகிறார்கள்.
முழு கதையையும் படிக்க !
“ இன்று செய்தித்தாளில் படித்த செய்தி.
நாம் எல்லோரும் லலிதா ஜூவல்லரி ஓனரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் கலாய்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார். ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி மறுக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு தரப்பட்டது..
பேசியது பதிவு செய்யப்பட்டது. அதில் அந்த குற்றவாளியிடம் கேட்டது ;
எனது கிளைகள் நிறைய இருக்கிறது. குறிப்பாக திருச்சியில் மட்டும் வந்து திருட என்ன காரணம், அதே நேரத்தில் எந்த சுவற்றில் ஓட்டை போட்டால் நகை உள்ள இடத்திற்கு வர முடியும் என்பது எப்படி தெரியும், என்று கேட்டார். குற்றவாளி சொன்ன பதில் நானும் எனது மனைவியும் பத்து முறைக்கு மேல் இங்கு நகை வாங்க வந்துள்ளோம் நகையை அவள் பார்த்து கொண்டு இருக்கும் போது நான் கடையை கவனித்து எப்படி வர முடியும் என்று பார்த்து பின் பிளான் போட்டு உள்ளே வந்தோம் என்றான்..
சரி குழப்பம் தீர்ந்தது நன்றி என்றார்..குற்றவாளி ஏன் சார் எனக்கு நன்றி சொல்றீங்க என்று கேட்ட போது? அவர் சொன்ன பதில் உண்மையிலே நெகிழ வைத்தது.. இல்லை எனக்கு திருடு போன நகையை பற்றி கவலை இல்லை. இன்சூரன்ஸ் செய்துள்ளேன். அதைவிட அதிகமாக சம்பாதிக்க என்னிடம் தைரியம் உள்ளது.. எனது கவலை எல்லாம் இவ்வளவு பெரிய கடையில் காவலாளிகள் இருக்கும் இடத்தில் ஓட்டை போட்டு உள்ளே வர உனக்கு தைரியம் எப்படி வந்தது நிச்சயமாக கடையில் இருக்கும் யாராவது உதவி இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை குழப்பியது. அதை விட எனது கவலை எல்லாம் எனது கடையில் வேலை பார்ப்பவன் திருடும் அளவிற்கு செல்கிறான் என்றால் என் மீது என்ன குறை இருக்கிறது அதை நான் உடனே சரி செய்ய வேண்டும். அந்த ஊழியனின் பணத் தேவை எனக்கு ஏன் தெரியவில்லை. அவர்களை நான் சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். அதை உடனே சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கவலையாக இருந்தேன் அதனால் தான் அதை தெளிவு படுத்த பல முயற்சிகள் செய்து உன்னை சந்தித்தேன் என்றார்.
இதை ஒரு காவல் அதிகாரி “ராயல் சல்யூட் சார்” என்று கூறி பகிர்ந்துள்ளார். எப்படி இவர்கள் மட்டும் இப்படி கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்றால் இதுவும் ஒரு முக்கிய காரணம்..தன்னுடைய தொழிலாளி மன நிறைவு தான் முக்கியம் அவனுக்கு அதை நான் சரியாக செய்தால் தான் நான் முதலாளி என்ற தகுதியை பெறுவேன் என்ற உயர்ந்த சிந்தனைகள் தான் இவர்களை போன்றவர்களை முதலாளிகலாக உயர்த்தி அழகு பார்க்கிறது இவர்களின் வாழ்க்கை “
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.