லாலு பிரசாத் வீட்டில் ரெய்டு தொடர்பான செய்திக்குத் தவறான புகைப்படங்களைப் பதிவிட்ட அர்ஜுன் சம்பத் !

பரவிய செய்தி

லாலு உறவினர் வீடுகளில் ரூபாய் 600 கோடி வருவாய் ஆதாரங்கள்! அமலாக்கத்துறை கண்டுபிடித்தது! மகன் தேஜஸ்வி சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு! கட்டுகட்டாக பணம் நகைகள் ரயில்வே பணிக்கு லஞ்சமாக பெற்ற நில ஆவணங்கள்! கருணாநிதி குடும்பத்தோடு போட்டி போடும் அளவிற்கு லாலு குடும்பம் ஊழல்!

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இரயில்வேயில் வேலை பெற நிலம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தி வருகிறது.

Archive link

இந்நிலையில் லாலு பிரசாத் உறவினர் வீடுகளில் ரூ.600 கோடி வருவாய் ஆதாரங்களும், கட்டுக்கட்டாக பணம் நகைகள் கிடைத்துள்ளது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சில புகைப்படங்களை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

News link | Archive link 

இந்த சோதனை குறித்து விகடன் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள செய்தியிலும் இப்புகைப்படங்கள் உள்ளது.

உண்மை என்ன ? 

அர்ஜுன் சம்பத் பதிவிட்டுள்ள புகைப்படங்களைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். அதில் முதலில் உள்ள புகைப்படம் 2022ம் ஆண்டு கொல்கத்தாவில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது எடுக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 2022ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ‘இ-நக்கெட்ஸ்’ என்ற மொபைல் கேம் செயலி மூலம் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தொழிலதிபர் அமீர் கான் மற்றும் மேலும் சில நபர்கள் மீது பெடரல் வங்கி புகார் அளித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் ரூ.17 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து டெக்கான் ஹெரால்ட், இந்து தமிழ் திசை போன்ற ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்ததாக அவரது பதிவில் உள்ள தங்க நகைகள் உள்ள புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். 2023, மார்ச் 6ம் தேதி அப்புகைப்படங்கள் ஏ.என்.ஐ. டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.

Twitter link | Archive link 

மகாராஷ்டிரா மாநிலத்தில், அதிக வட்டி தருவதாகப் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக பங்கஜ் மெகடியா, லோகேஷ் ஜெயின், கார்திக் ஜெயின், பால்முகுந்த் லால்சந்த், பிரேம் லதா மெகடியாக ஆகிய 5 பேர் மீது நாக்பூர் சீதாபுல்டி காவல் நிலையத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அவர்களுக்குச் சொந்தமான 15 இடங்களில் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.5.51 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.1.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் ரெய்டு : 

அர்ஜுன் சம்பத்தின் பதிவில் நான்காவதாக உள்ள புகைப்படம் மட்டுமே லாலு பிரசாத் மீதான புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது எடுக்கப்பட்டதாகும். 

Archive link 

இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் லாலு பிரசாத்தின் மனைவி ரப்ரி தேவியின் வீட்டில் மார்ச் 6ம் தேதி  சோதனை நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக லாலுவின் மகனும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் மகள் மிசா பாரதியின் வீடு உட்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 11ம் தேதி சோதனை நடத்தியுள்ளது. 

News link | Archive link 

இது குறித்து ஏ.என்.ஐ.யின் டிவிட்டர் பதிவில், கணக்கில் வராத ரூ.1 கோடி பணமும், அமெரிக்க டாலர் 1900 உட்பட வெளிநாட்டுப் பணம், 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தவறான வழிகளில் (Proceeds of Crime) பெறப்பட்ட ரூ.600 கோடி இதுவரை சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. 

அப்பதிவில் அர்ஜுன் சம்பத் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படமும் உள்ளதைக் காண முடிகிறது. அமலாக்கத்துறை தேஜஸ்வி யாதவ் உட்படப் பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால், அது குறித்து அர்ஜுன் சம்பத் மற்றும் விகடன் பயன்படுத்திய புகைப்படங்கள் வெவ்வேறு நிகழ்வுகள் எடுக்கப்பட்டது

மேலும் படிக்க : வடமாநில தொழிலாளர்கள் குறித்த வீடியோவால் கோபி, சுதாகர் மீது வழக்குப் பதிவு எனப் பரவும் போலிச் செய்தி

முன்னதாக வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்டதால் பரிதாபங்கள் யூடியூப் சேனல் கோபி மற்றும் சுதாகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தவறான செய்தியை அர்ஜுன் சம்பத் பரப்பினார். அதன் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், லாலு பிரசாத் மகன் தேஜஸ்வியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது உண்மைதான். ஆனால், அது குறித்து அர்ஜுன் சம்பத் மற்றும் விகடன் இணையதளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வெவ்வேறு அமலாக்கத்துறை சோதனைகளின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.
Back to top button