This article is from Sep 08, 2020

வாகா எல்லையில் பறக்கும் மிகப்பெரிய தேசியக் கொடி என பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

வாகா எல்லையில் புதிய இந்திய தேசிய கொடி 360 அடி உயரத்தில் : செலவு ரூ 3.5 கோடி. 55டன் எஃகு கொண்டு உறுதியான கொடிக்கம்பம். கிரேன் நிறுவ 60 லட்சம் வாடகை. கொடியின் அகலம் 120 அடி. கொடியின் உயரம் 80 அடி. கொடி கம்பம் 360 அடி உயரம். 110 அடி தடிமனோடு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது 12 கொடிகள் தயாராக உள்ளன. இது உலக சாதனை. எப்போதும் போல் பாகிஸ்தான் ஆட்சேபனை செய்தது. ஆனால் இது இந்தியா – பாக் எல்லையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இந்திய நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசு கூறிவிட்டது. இதற்கு அமைச்சர் திரு அனில் ஜோஷி முன்முயற்சி எடுத்துள்ளார் திரு சுமர்சிங் பி.எஸ்.எஃப் ஐ.ஜி அதில் பங்கேற்றார். நமது தேசியக் கொடி பட்டொளி வீசி எல்லையில் உயரமாக பறக்கிறது.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய மூவர்ணக்கொடி உலக சாதனை படைத்துள்ளதாக 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்தும், இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கொடி குறித்தும் அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டமாக இருக்கும் மிகப்பெரிய இந்திய மூவர்ணக் கொடியின் வீடியோ குறித்து தேடுகையில், ” 2017 ஜனவரி 26-ம் தேதி Jokes ka jamana எனும் முகநூல் பக்கத்தில் ஹைதராபாத்தில் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி மிகப்பெரிய கம்பத்தில் ஏற்றப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் பின்னணியில் பாடல் இணைக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது.

Facebook link | archive link 

2016-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சஞ்சீவய்யா பூங்காவில் தொடங்கிய வைத்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. தெலங்கானா தோற்றுவிக்கப்பட்ட 2ம் ஆண்டில் ஹைதராபாத் பகுதியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கொடியையே வாகா எல்லையில் உருவாக்கப்பட்ட கொடி என தவறாக பகிர்ந்து வருகிறார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கொடிகள் : 

2016-ல் ஹைதராபாத் பகுதியில் அமைக்கப்பட்ட 108 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட இந்திய தேசியக் கொடி 291 அடி உயரம் கொண்ட கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதை மிஞ்சும் விதத்தில், 2017-ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தின் வாகா எல்லைக்கு அருகே உள்ள அட்டாரி எனும் பகுதியில் 120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய தேசியக் கொடி 360 அடி உயரம் கொண்ட கம்பத்தில் ஏற்றப்பட்டது.

3.50 கோடி செலவில் 50 டன் எடை கொண்ட தேசியக் கொடி கம்பத்தை பஞ்சாப் அரசு அமைத்தது. அந்த தகவலே தவறான வீடியோ உடன் பரவும் பதிவுகளில் இடம்பெற்று இருக்கிறது. இந்திய-பாகிஸ்தான் எல்லையோர பகுதிக்கு மிக அருகில் இக்கொடி அமைக்கப்பட்ட காரணத்தினால் பாகிஸ்தான் தரப்பிற்கு அச்ச உணர்வு ஏற்பட்டது. இதற்கு போட்டியாக பாகிஸ்தான் 2017 ஆகஸ்ட் 14-ம் தேதி மிகப்பெரிய கொடியை வாகாஎல்லையில் நிறுவியது.

பஞ்சாப் அட்டாரி பகுதியில் நிறுவப்பட்ட தேசியக் கொடியை விட ஒரு அடி (361அடி) உயரமான கொடி கம்பத்தில் இந்திய தேசியக் கொடி 2018-ம் ஆண்டு கர்நாடகாவின் பெலகாவி பகுதியில் அமைக்கப்பட்டதாக செய்தி கிடைத்தது. எனினும், 2019-ம் ஆண்டில் வெளியான செய்தியில் மீரட் பகுதியில் 380 அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்க விட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அமைக்கப்படும் மிகப்பெரிய தேசியக் கொடியின் சாதனையை முறியடிக்கும் வகையில் வெல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய தேசியக் கொடிகள் அமைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. கின்னஸ் சாதனையின்படி, சவூதி அரேபியாவில் உள்ள ஜேட்டா எனும் பகுதியில் உயரமான கொடி கம்பமும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் மிகப்பெரிய கொடியும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

முடிவு : 

நம் தேடலில், வாகா எல்லையில் 360 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட புதிய இந்திய தேசியக் கொடி எனக் கூறி பரப்பப்படும் வீடியோ 2016-ல் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட தேசியக் கொடி. எல்லைப் பகுதியான அட்டாரியில் அமைக்கப்பட்ட 360 அடி உயர தேசியக் கொடியை விட உயரமான தேசியக் கொடி தொடர்ந்து அமைக்கப்பட்டு வருவதையும் அறிய முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader