எல்.இ.டி பல்பு வாங்கியதில் 1 கோடி மோசடி.. அதிமுக ஆட்சியில் நடந்ததை திமுக ஆட்சி என வதந்தி !

பரவிய செய்தி

நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ. 47 கோடி. ஒரு LED பல்பின் விலை ரூ.10 ஆயிரமா ? ரூ.1 கோடி மோசடி. திராவிட மாடல் ஆட்சியில்  டக்கன விட 40 வருசம் முன்னேறிட்டோம். தமிழ்நாடு வேற No.1 பணக்கார மாநிலமா மாறிப் போச்சு. அதான் விலையும் ஏறிப்போச்சு.

மதிப்பீடு

விளக்கம்

திமுக ஆட்சியில், ஒரு எல்.இ.டி பல்பின் விலை ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி ரூ.1 கோடி வரை மோசடி செய்த அதிகாரிகள் சிக்குவதாக மீம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Archive link

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் மீம் பதிவில் இடம்பெற்ற எல்.இ.டி பல்பு மோசடி பற்றிய பகுதி செய்தி ஊடகத்தில் வெளியானது போன்று இருந்தது. அதைப் பற்றி தேடுகையில் ஜூன் 16-ம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் க்ரைம் டைம் செய்தியில் தேனி பகுதியில் நிகழ்ந்த எல்.இ.டி பல்பு மோசடியில் அரசு அதிகாரிகள் சிக்குவது தொடர்பாக வெளியிட்டது என அறிய முடிந்தது.

Facebook link 

எல்.இ.டி பல்புகள் மோசடி குறித்த நியூஸ் 18 சேனலின் க்ரைம் டைம் செய்தியில் வெளியான வீடியோவில், ” தேனி மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில்  எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது, சிக்கும் அதிகாரிகள் ” எனக் கூறுவதை கேட்கலாம்.

கடந்த 2019-2020 ஆண்டு தேனி மாவட்ட பேரூராட்சிகளில் வாங்கப்பட்ட எல்.இ.டி பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கி அரசு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பேரூராட்சிகளின் முன்னாள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, 10 முன்னாள் செயல்அலுவலர்கள், காண்ட்ராக்டர்கள் என 13 பேர் மீது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

” ஒரு எல்.இ.டி பல்பின் விலை ரூ.1200 முதல் ரூ.2500 விலை மட்டுமே, ஆனால் ஒரு எல்.இ.டி பல்பின் விலையை ரூ.9987 மதிப்பீடு செய்து போலியான ஆவணங்களை தயாரித்து, அரசிற்கு சேர வேண்டிய ரூ.97 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்து உள்ளதாக தேனியை சேர்ந்த சரவணன் என்பவர் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது ”  என மாலைமலர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் எல்.இ.டி பல்புகள் வாங்குவதில் நடைபெற்ற மோசடியை திமுக ஆட்சியில் நடந்ததாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, அதே மீம் பதிவில், ” நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ. 47 கோடி” என அதிமுக ஆட்சியில் நிகழ்ந்ததையும் திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக இணைத்துள்ளனர். இதைப் பற்றி முன்பே நாம் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : காபி, மிக்சருக்கு ரூ.47 கோடி, அதிமுக ஆட்சியில் வந்த செய்தியை திமுக எனப் பரப்பி வருகிறார்கள் !

முடிவு : 

நம் தேடலில், நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ. 47 கோடி மற்றும் ஒரு LED பல்பின் விலை ரூ.10 ஆயிரமா ? ரூ.1 கோடி மோசடி, சிக்கும் அதிகாரிகள் எனப் பரப்பப்படும் மீம் பதிவில் உள்ள சம்பவங்கள் இரண்டுமே அதிமுக ஆட்சியில் நிகழ்ந்தவை, அவற்றை திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக வதந்தி பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader