வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை, மிளகாய் கட்டுவதற்கு அறிவியல் காரணம் இருக்கா ?

பரவிய செய்தி
வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் புதிதாக அல்லது பண்டிகை நாட்களில் லாரி , கார் உள்ளிட்ட வாகனங்களின் முன் பகுதியில் எலுமிச்சை மற்றும் மிளகாய் சேர்த்து கட்டி விடும் வழக்கம் தொடர்கிறது . திருஷ்டிப்படக் கூடாது என்பதற்காக வாகனங்களில் எலுமிச்சை மற்றும் மிளகாய் இணைத்து கட்டப்படுவதாக நாம் நினைத்து வந்தோம், ஆனால் அதற்கு பின்னால் அறிவியல் அர்த்தம் இருப்பதாகவும் , நம் முன்னோர்கள் அப்படி செய்ததாகவும் கூறும் ஓர் பதிவை காண நேரிட்டது.
” எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது.
அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது.
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது. நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்.. இந்த செய்தியை பகிர்ந்து உலகறியச் செய்வோம்.. ” என செய்தித்தாள் , இணையதளங்களில், முகநூல் பதிவுகள் , வலைப்பதிவுகள் , யூட்யூப் உள்ளிட்டவையில் பல ஆண்டுகளாக பரவி வருகிறது.
உண்மை என்ன ?
எலுமிச்சை, மிளகாய் வாகனங்களில் கட்டுவதற்கு இருக்கும் அறிவியல் காரணங்களை கூறுவதை கேட்கும் பொழுது நகைச்சுவையாக இருந்தாலும் , முன்னோர்கள் குறித்து குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே, இதை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்து இருந்தோம்.
முதலில், எலுமிச்சை பழத்தில் உள்ள (Cidronic amilga) என்ற அமிலம் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதை அறிந்து இருப்போம். சிட்ரோனிக் அமில்கா எனும் அமிலம் இருக்கிறதா என பற்றி தேடினோம் . ஆனால், தேடலில் அத்தகைய அமிலங்கள் குறித்து ஏதும் தகவல்கள் இல்லை.
அடுத்ததாக, மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரம் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். ஆனால், அது குறித்த தரவுகளும் தேடலில் கிடைக்கவில்லை. எனினும் , இதே வார்த்தைகளை தனித்தனியாக தேடினால், இவர்கள் பரப்பும் அறிவியல் காரணங்கள் மட்டுமே முன்னதாக வருகிறது.
இதைத்தவிர்த்து, எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகியவற்றை இணைத்து கட்டுவதால் ஏதேனும் பயன்கள் இருப்பதாக தேடினோம். அதில், டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான கட்டுரை ஒன்றில் ” எலுமிச்சை மற்றும் மிளகாயை வீடு மற்றும் கடைகளின் நுழைவாயிலில் கட்டுவதன் மூலம் பூச்சிகள் நுழைவதை தடுக்கும் ” எனக் கூறி இருக்கின்றனர். எனினும் , இதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை.
திருஷ்டிக்காக வாகனங்களில் கட்டப்படும் எலுமிச்சை மற்றும் மிளகாயை வைத்து அறிவியல் காரணங்கள் கூறுவதாக நினைத்து இப்படி ஆதாரம் இல்லாத அமிலங்களின் பெயர்களை கொண்டு புதிய கதையை உருவாக்கி உள்ளனர். வாகனங்களில் முன்பக்கத்தில் இருந்து வாயுவானது ஓட்டுநர் இருக்கும் இடத்திற்கு செல்கிறது என்பதெல்லாம் நம்பக்கூடிய வகையில் இல்லை.
முடிவு :
நம்முடைய ஆய்வில் , வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது என கூறும் காரணங்களுக்கு ஆதாரமில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்ற தலைப்பை வைத்துக் கொண்டு தற்பொழுது இருக்கும் மக்களை முட்டாளாக்க வதந்திகளை பரப்பி வருகின்றனர்.