காய்ச்சி வைத்திருந்த சாராயத்தை குடித்த சிறுத்தையின் நிலைமை எனப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
காய்ச்சி வைக்கப்பட்டிருந்த சாராயத்தை குடித்துவிட்ட சிறுத்தையின் நிலைமையை பாருங்கள்
மதிப்பீடு
விளக்கம்
சிறுத்தைகளை கண்டால் அதைப் பிடிப்பதற்காக மக்கள் துரத்தும் காட்சிகளும், ஓடி ஒளிந்து கொள்ளும் காட்சிகளையே பார்த்து இருப்போம். ஆனால், அமைதியா நடந்து செல்லும் சிறுத்தையை மக்கள் தொட்டு விளையாடுவதும், செல்பி எடுத்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவுகளில், காய்ச்சி வைத்திருந்த சாராயத்தை குடித்ததால் சிறுத்தை இப்படி நடந்துக் கொண்டதாக பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 ஆகஸ்ட் 30ம் தேதி கெளதம் திரிவேதி என்பவரின் எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் மத்தியப் பிரதேசத்தின் இக்லேரா எனும் பகுதியில் நடந்ததாகவும், சிறுத்தையை வனத்துறையினர் மீட்டதாகவும் இடம்பெற்று இருக்கிறது.
Villagers take selfie with a seemingly dazed and confused leopard in Iklera, MP. This could’ve gone so wrong. Thankfully the leopard was rescued by Forest Department. pic.twitter.com/KISTIasfqD
— Gautam Trivedi (@KaptanHindustan) August 30, 2023
இதையடுத்து, பிடிஐ செய்தியின் எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில், சிறுத்தையை பிடிக்க உஜ்ஜயினியில் இருந்து ஓர் குழு வந்துக் கொண்டிருக்கிறது. உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி சிறுத்தை இடம் மாற்றப்படும் என வனத்துறை காவல் அதிகாரி பேசும் வீடியோ இடம்பெற்று இருக்கிறது.
VIDEO | Rescue operation underway by forest officials in Madhya Pradesh’s Iklera village after a leopard was found by locals in a dazed state. “A team from Ujjain is reaching to capture the leopard and the animal will be shifted based on the directions of the higher officials,”… pic.twitter.com/NHpS0f1Mx6
— Press Trust of India (@PTI_News) August 30, 2023
சிறுத்தையின் நடவடிக்கை குறித்து மேற்கொண்டு தேடுகையில், என்டிடிவி, பைனான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே உள்ளிட்ட செய்திகளில் சிறுத்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருக்கின்றனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ” சிறுத்தை சிகிச்சைக்காக இந்தூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. சிறுத்தை நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர் ” எனக் கூறப்பட்டு இருக்கிறது.
சிறுத்தையின் நடவடிக்கையானது சாராயம் குடித்ததால் நிகழ்ந்ததாக வனத்துறை தரப்பிலோ அல்லது செய்திகளிலோ எங்கும் குறிப்பிடவில்லை. சிறுத்தை நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், காய்ச்சி வைக்கப்பட்டிருந்த சாராயத்தை குடித்துவிட்ட சிறுத்தையின் நிலைமை எனப் பரவும் தகவல் தவறானது. மத்தியப் பிரதேசத்தில் பிடிபட்ட சிறுத்தை நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.