போன் பேசும் பொழுது மின்னல் தாக்கி ஒருவர் இறந்ததாக வாட்ஸ் அப் ஃபார்வர்டு !

பரவிய செய்தி
நண்பர்களே! நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்று போட்டோக்களும் நேற்று சென்னையில் நடந்த சம்பவம். கேரளாவை சேர்ந்த ஒரு சகோதரர் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருக்கிறார். இவர் துபாயில் ஹைபர் சூப்பர்மார்க்கெட்டில் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். ஊருக்கு வந்தவர் ஜூன் 9-ம் தேதி சென்னையில் காரில் டிரைவிங் செய்யும் பொழுது போன் எடுத்து பேசியுள்ளார். அப்பொழுது போனில் மின்னல் தாக்கி காரோடு சேர்த்து அவரும் முழுவதுமாக கருகி இறந்து உள்ளார். அந்த போட்டோஸ் தான் இங்கே போட்டு இருக்கிறோம். ஆகையால், சகோதரர்களே இதனை விழிப்புணர்வு பதிவாக எடுத்துக் கொண்டு அனைவரும் பகிருங்கள். மின்னல் அடிக்கும் பொழுது போன் எடுப்பதையோ, பேசுவதையோ தயவு செய்து தவிருங்கள் !
மதிப்பீடு
விளக்கம்
செல்போன் பேசும் பொழுது மின்னல் தாக்கியதில் ஒருவர் இறந்துள்ளார் என்ற ஆடியோ உடன் கருகிய நிலையில் இருக்கும் உடல் மற்றும் காரின் புகைப்படங்களும் வாட்ஸ் அப் குரூப்-களில் சமீபத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி உண்மையா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்கும் பொழுது இருவேறு செய்திகளை காண முடிந்தது.
மின்னல் சம்பவம் :
2018 ஜூனில் அரபு நாட்டில் ஹைபர் சூப்பர்மார்க்கெட்டில் மேனேஜராக பணியாற்றி வந்த 45 வயதான ரமேஷ் என்பவர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இங்கு வந்த பிறகு அவரின் நண்பரான கே.பிரபாகரன் என்பருடன் இணைந்து பழம் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி தொழிலை மேற்கொண்டனர். அந்தநேரத்தில் அரக்கோணத்தில் அவர்களின் நண்பரின் மீன் பண்ணையை பார்க்க செல்லும் பொழுது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
” ரமேஷ் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது மின்னல் தாக்கியதில் உடன் இருந்த பிரபாகரன் மற்றும் இரு நண்பர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஆனால். ரமேஷ் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். செல்போனில் பின் பகுதி மின்னல் தாக்கியதில் உருகி இருந்தாக ” ரமேஷின் நண்பர் பிரபாகரன் தெரிவித்து இருந்தார்.
மின்னல் தாக்கியதில் ரமேஷின் மார்பு மற்றும் வயிற்று பகுதி கருகி இருந்தாகவும், உடைகள் முழுவதும் கருகவில்லை எனக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு போலீஸ் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில்தான், சாலையில் இருக்கும் கருகிய உடல், கார் என தவறான புகைப்படங்கள் இந்த செய்தியுடன் இணையத்தில் வைரலாகத் தொடங்கின.
2018 ஜூன் 11-ம் தேதி Gulf news தளத்தில், தமிழ்நாட்டில் ரமேஷ் மின்னல் தாக்கி இருந்த சம்பவத்துடன் தவறான புகைப்படங்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் வாட்ஸ் அப்-களில் பரவி வருவதாக குறிப்பிட்டு உள்ளனர். ரமேஷ் இறந்ததாக கூறப்படும் கார் ஆனது கேரளா சம்பவத்துடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டு இருந்தனர். மேலும், வைரலாகி வரும் கருகிய உடல் ரமேஷ் உடையது அல்ல என்றும் தெரிவித்து இருந்தனர்.
கேரளா சம்பவம் :
ஜூன் 2018-ல் கேரளாவில் அம்பலக்குலங்குறா எனும் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் காரில் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். காரின் உள் பகுதியில் தீ பரவி இருந்ததால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கேரளாவில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியில் அதே கருப்பு நிற கார் இடம்பெற்று இருக்கிறது.
மின்னல் தாக்கியதில் உயிரிழப்புகள் :
2017-ல் சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மழைப் பொய்த்து கொண்டிருந்த சமயத்தில் கிஷோர் மற்றும் லோகேஷ் என்ற இரு ஐடிஐ மாணவர்கள் தங்கள் வீட்டின் மாடியில் பெரிய கருப்பு நிற குடையில் அமர்ந்து கொண்டு போன் பேசிக் கொண்டும், பாடல் கேட்டுக் கொண்டும் இருந்துள்ளனர். அந்நேரத்தில், மின்னல் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
பெரிய நிலப்பரப்பில், திறந்த வெளிகள், நீர்நிலைகள் அருகே, மிகப்பெரிய அளவில் இரும்பு சார்ந்த பகுதி அல்லது மரங்கள் ஆகிய பகுதிகள் அதிக அளவில் மின்னலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.
முடிவு :
ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் ரமேஷ் மின்னல் தாக்கி இறந்த பொழுது, கேரளாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர் காரில் இறந்து உள்ளார். சமகாலத்தில் நிகழ்ந்த சம்பவம் என்பதால் ரமேஷ் சம்பவத்துடன் கேரளாவில் நிகழ்ந்த சம்பவத்தின் புகைப்படங்களை தவறாக பகிர்ந்து உள்ளனர்.
ரமேஷ் செல்போனில் புகைப்படங்கள் எடுக்கும் பொழுது மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அவரின் நண்பர் தகவல் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகியும் தற்பொழுது வாட்ஸ் அப்-களில் பகிரப்பட்டு வருகிறது. மழைத் தருணங்களில் செல்போன் உள்ளிட்டவை பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்தல் நல்லதே.