பெங்களூரில் லிங்காயத்து கத்தோலிக் சர்ச்: உண்மை என்ன ?

பரவிய செய்தி
கர்நாடகாவில் தனி மதமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி வந்த லிங்காயத்துக்கள் பெயரில் புதிதாக கிறிஸ்துவ தேவாலயம் அமைத்துள்ளனர். பெங்களூரில் லிங்காயத்து கத்தோலிக் சர்ச் என்று மத மாற்ற குழு உருவாகி உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
லிங்காயத்து கத்தோலிக் சர்ச் எனப் பரவிய புகைப்படங்கள் அனைத்தும் போட்டோஷாப் செய்யப்பட்டவை. அதை பற்றியும், லிங்காயத்துக்கள் பற்றியும் விரிவாக காண்போம்.
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் லிங்காயத்துக்கள் என்கிற பெயரில் புதிய மதம் ஒன்று உருவாகியது. இவர்கள் தங்களை இந்துக்கள் என்று கூறாமல் புதிய மதமாக அறிவித்துக் கொண்டனர். இதற்கு பின்னணியில் இருப்பது கிறிஸ்துவ மிஷினரி அமைப்புகள் என்ற எண்ணம் ஒன்று தற்போது உருவாகி வருகிறது.
இதற்கு காரணம், பெங்களூரில் புதிதாக கட்டப்பட்ட சர்ச் ஒன்றின் பெயர் பலகையில் ” லிங்காயத்து கத்தோலிக் சர்ச் ” என்று இடம்பெற்றுள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் பார்க்கும் பலரும் இந்துக்களை பிளவுபடுத்தி புதிய மதமாக லிங்காயத்துக்கள் என்று உருவாகியது இதற்கு தானா என்று வெறுப்புடனும், கோபத்துடனும் கேள்விகளை தொடுத்து வருகின்றனர். இந்துக்கள் இல்லை எனக் கூறி பிரிந்த லிங்காயத்துக்களுக்கு பின்னால் கிறிஸ்துவ அமைப்புகள்இருப்பது நிரூபணமாகி உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றனர்.
கேள்விகள் பல இருப்பினும் லிங்காயத்து கத்தோலிக் சர்ச் என்ற ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் உண்மை என எளிதில் நம்பி விடக் கூடாது. இந்த புகைப்படங்கள் உண்மையா என்று கூகுள் மூலம் தேடுகையில் இவை அனைத்தும் வதந்திகள் என தெளிவாகி உள்ளது. இவை மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் dahanu என்ற பகுதியில் அமைந்துள்ள “ our lady of Dolours church “ ஆகும்.
2012-ல் எடுக்கப்பட்ட சர்ச் உடைய புகைப்படங்களை போட்டோஷாப் செய்து காங்கிரஸ் அரசு இந்துக்களை பிளவுபடுத்தி லிங்காயத்துக்களை புதிய மதமாக அறிவித்துள்ளது என்ற தவறான கருத்துக்களை பரப்பி வந்துள்ளனர்.
வெறுப்புணர்வை உருவாக்க பரவிய செய்திகளில் இருக்கும் படத்தில் லிங்காயத்து கத்தோலிக் சர்ச் என்பதற்கு கீழே பெங்களூர், கர்நாடகா என்று மாற்றியுள்ளனர். ஆனால், போட்டோஷாப் செய்யப்படாத படத்தில் மாராத்தி மொழியில் “Dukhi Mata church, Dahanu “ என்றே இடம் பெற்றிருக்கும்.
யார் இந்த லிங்காயத்துகள் ?
வர்ணாசிரம கொள்கை மற்றும் சாதி பிரிவுகளை ஏற்கக் கூடாது என்ற சிந்தனையில் ” பசுவா ” என்பவர்லிங்காயத்திஸம் என்ற பிரிவை உருவாக்கினார். இவர்கள் லிங்க வழிபாட்டை மேற்கொள்கின்றனர். 12-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த பிரிவு 21-ம் நூற்றாண்டில் தான் மிகவும் வலிமை பெற்றது. அதன் பின்னர் பல்வேறு பொதுக்கூட்டம் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்து லிங்காயத்துக்கள் என்ற புதிய மதமாக அறிவிக்க வேண்டும் என்றுக் கூறி வந்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் ஆட்சி செய்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை லிங்காயத்துக்களை புதிய மதமாக அறிவிக்க ஒப்புதல் அளித்தனர். இந்த அறிவிப்பு பலரையும் எரிச்சலடையச் செய்தது. இந்துக்களை பிளவுபடுத்துவதை அவர்கள் விரும்பவில்லை.
லிங்காயத்துகளை கிறிஸ்துவ மதத்தினராக சித்தரிப்பது தவறானது. ஏனெனில், லிங்க வழிபாட்டைக் கடைப்பிடிக்கும் அவர்களின் மீது இந்த குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. ஆக, வீண் வதந்தி மூலம் லிங்காயத்துகள் மீதும், அவர்களின் மதத்திற்கு ஓப்புதல் அளித்த கட்சியின் மீதும் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கவே இவ்வாறு செய்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.