பாலத்தில் நடந்து செல்லும் சிங்கம்: சென்னையில் நிகழ்ந்ததா ?

பரவிய செய்தி
இயற்கைக்கு அருகில் செல்லும் சென்னை மாநகரம். காடுகளில் இருக்கும் விலங்குகள் நகருக்குள் ஊடுருவும் நிலை. காலை பொழுதில் சிங்கம் ஒன்று அடையார் பாலத்தில் நடந்து செல்லும் காட்சி.
மதிப்பீடு
சுருக்கம்
மேம்பாலத்தில் சிங்கம் நடந்து செல்லும் காட்சி உண்மையானவையே. ஆனால், வடநாட்டின் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பாலத்தில் சிங்கம் கடந்து செல்வது சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை.
விளக்கம்
இயற்கை சூழல் அழிக்கப்படும் நேரத்தில் வனத்தில் வாழும் உயிரினங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நகருகின்றன. இதனால் மக்களுக்கு அவ்வபோது அச்சுறுத்தல் எழுகிறது. இதற்கிடையில், சென்னை மாநகரம் இயற்கையோடு இணைகின்றது. வனத்தில் இருக்கும் சிங்கம் அடையார் மேம்பாலத்தில் நடந்து செல்கிறது. விடியற்காலையில் யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் இந்த சம்பவம் நிகழந்துள்ளது என்ற செய்தி பரவுகிறது.
சிங்கத்தின் வீடியோ பதிவு சென்னையில் நிகழ்ந்தது என்று பதிவிடப்பட்டது. ஆனால், வட மாநிலங்களில் மும்பையில் உள்ள airoli பாலத்தில் உள்ள நடைபாதையில் நடந்து செல்வதாகக் கூறி பகிரப்பட்டது. இதுமட்டுமின்றி, மறுபுறம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் உள்ள இந்திரா மேம்பாலத்தில் நிகழ்ந்தது என்று பதிவிட்டுள்ளனர்.
இடத்திற்கு ஏற்ப பெயர்களை மாற்றிக் கொண்டு தங்கள் ஊரில் நிகழ்ந்த சம்பவம் என சமூக வலைத்தளங்களில் சிங்கத்தின் நடைபயணம் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், தவறான செய்திகள் அந்த வீடியோ உடன் இணைக்கப்பட்டு வலம் வருகிறது என்பதே உண்மை. இந்த வீடியோ பற்றி youtube-ல் தேடியதில் உண்மை புலப்படுகிறது.
” மேம்பாலத்தில் சிங்கம் நடந்து செல்லும் நிகழ்வு குஜராத்தில் உள்ள pipavav என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் Gir forest அமைந்துள்ளது. இது ஆசிய சிங்கங்களின் வசிப்பிடம் ஆகும். சிங்கத்தின் வீடியோ குறித்த செய்தியை 2017-ல் குஜராத் நியூஸ் சேனல் ஒன்று விளக்கியுள்ளது “.
” இந்த நிகழ்வு போன்று pipavav Gir forest பகுதியில் உள்ள வழித்தடத்தில் செல்லும் வனத் தொழிலாளர்களுக்கு எதிராக வந்த சிங்கம் ஒன்று அமைதியாக கடந்து செல்லும் வீடியோ பதிவு 2015-ல் வெளியிடப்பட்டுள்ளது “.
இந்திய அளவில் சிங்கத்தின் வீடியோ வைரலாகி வருவதால் இடத்திற்கு ஏற்ப பெயர்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், இச்சம்பவம் உண்மையில் நிகழ்ந்து இருந்தாலும் சென்னையில் நிகழவில்லை.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.