This article is from Sep 30, 2018

தேர்தல் ஆணையத்துடன் இணைந்த வலைத்தள நிறுவனங்கள்.. எதற்காக ?

பரவிய செய்தி

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் போது சோசியல் மீடியாவில் பரவும் வதந்திகள், அரசியல் விளம்பரங்கள், கோபமூட்டும் கருத்துக்கள் போன்றவற்றை முடக்குவதாக ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் உறுதி அளித்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

தேர்தலின் ஓட்டுப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக 48 மணி நேரத்திற்கு சோசியல் மீடியாவில் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் இடம் பெறாது. தேர்தல் நேரத்தில் அரசியல் விளம்பரங்கள் பற்றி முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கும், இதை இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளனர்.

விளக்கம்

டிஜிட்டல் இந்தியாவில் அரசியல் கட்சியினர் சமூக வலைத்தளங்களை பிரச்சாரத்திற்கும், கட்சி கொள்கைப் பரப்புரை, விளம்பரம் போன்றவற்றிற்காக பெரியளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதற்கென ஒவ்வொரு கட்சிக்கு அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அவர்களுக்கு உதவவும் சில அமைப்புகள் துணைப் புரிகின்றனர்.

தேர்தல் காலத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட  சமூக வலைத்தளங்கள் வதந்திகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி, ஆத்திரமூட்டும் பதிவுகளையே அதிகம் கொண்டிருக்கின்றன. அவற்றை நீக்கும் முயற்சியில் இம்மூன்று தளங்களும் இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து உதவ உறுதி அளித்துள்ளார்கள்.

வருகிற 2019-ல் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய மிகப்பெரிய சோசியல் மீடியா தளங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தேர்தல் காலத்தில் பரவும் வதந்திகள், கோபமூட்டும் கருத்துக்கள், போன்றவற்றை அடையாளம் காணும் அமைப்பை உருவாக்கியும், சுய தணிக்கையும் செய்ய உள்ளனர்.

“ தேர்தல் ஆணையம் மூன்று பெரும் சோசியல் மீடியா நிறுவனங்களுடன்  பரஸ்பரமாக இணைந்து தேர்தல் பிரச்சார காலத்தில் பதிவிடப்படும் அரசியல் விளம்பரங்களை கண்காணிக்க உள்ளனர். ஆரோக்கியமான பிரச்சாரங்கள் உள்ளடக்கிய ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள், வாட்ஸ் ஆஃப் தளங்களில் பதிவிடப்படும் வதந்திகள், எதிர்மறை / தனிப்பட்ட பிரச்சாரங்கள் முடக்கப்படும். இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அந்நிறுவனங்கள் தாமாக முன்வந்து செயல்படுத்துவதே தவிர தேர்தல் ஆணையத்தால் வலுக்கட்டாயமாக செயல்படுத்தப்படவில்லை ” என தேர்தல் தலைமை ஆணையர் ஓபி ரோவாட் தெரிவித்து உள்ளார்.

மூன்று நிறுவனங்களும் தேர்தல் ஆணையத்துடன் சென்ற மாதம் ஏற்படுத்திக் கொண்ட பரஸ்பர ஒப்புதலில், “ தேர்தல் வாக்கு செலுத்தும் காலத்தின் முன்பான “ அமைதி காலம் “ 48 மணி நேரத்திற்கு அரசியல் விளம்பரங்கள் பற்றி அறியவும், அந்த நேரங்களில் அரசியல் விளம்பரங்களை தளங்களில் இடம் பெறாமல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர் “

மேலும், வலைத்தளங்களில் பதிவிடப்படும் அனைத்து ஸ்பொன்சர் விளம்பரங்கள், எழுத்துக்கள், பதிவுகளை ஸ்பொன்சர் செய்தவர், எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்ற விவரங்கள் தெரிய வருவதால் பதிவுகள் பற்றி மக்களால் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார் தேர்தல் ஆணையர்.

தேர்தல் காலத்தில் பரப்புரை செய்யப்படும் வதந்திகள், எதிர்மறை கருத்துக்கள், அரசியல் விளம்பரங்கள் போன்றவற்றை முழுமையாக கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால், தேர்தல் நேரத்தில் பரவும் கட்சியினரின் வதந்திகள் முடக்கப்பட்டு, உண்மை செய்திகள் அதிகளவில் மக்களை சென்றடையும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader