லண்டனில் பிபிசிக்கு எதிராக போராடிய சங்கிகளை பொதுமக்கள், காவல்துறை தாக்கும் வீடியோவா ?

பரவிய செய்தி
லண்டன்ல் BBC எதிராக போராடிய சங்கிகளை.. வெளுத்து வாங்கிய பொதுமக்கள் மற்றும் லண்டன் காவல்துறை.. சங்கிகளால் உலகம் முழுக்க இந்தியாவிற்கு கெட்ட பெயர்.
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட மோடி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசால் தடை விதிக்கப்பட்டதால் நாடு முழுவதிலும் பெரும் பேசு பொருளாக மாறியது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. அதேபோல், பிபிசி ஆவணப்படத்திற்கு எதிராக பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லண்டனில் பிபிசிக்கு எதிராக போராடிய சங்கிகளை(பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள்) அங்குள்ள பொதுமக்கள் மற்றும் காவல்துறை தாக்கியதாக, இந்திய தேசியக் கொடியை ஏந்தியவர்கள் தாக்கப்படும் 25 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
லண்டன்ல் BBC எதிராக போராடிய சங்கிகளை வெளுத்து வாங்கிய பொதுமக்கள் மற்றும் லண்டன் காவல்துறை.
சங்கிகளால் உலகம் முழுக்க இந்தியாவிற்கு கெட்ட பெயர் தான் 🤦♀️ pic.twitter.com/bZkwZIPqYQ
— இரா. வெற்றிகொண்டான் (@sukuram11) February 3, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில், இந்திய தேசியக் கொடியை ஏந்தியவர்களை தாக்குவது காவல்துறையைச் சேர்ந்தவர்கள் போல் இல்லை, தாக்குபவர்கள் டர்பன் அணிந்து உள்ளனர். மேலும், அவர்கள் கையில் ” காலிஸ்தான் “ கொடியை ஏந்தி உள்ளனர்.
இந்திய தேசியக் கொடியை ஏந்தியவர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் குறித்து தேடுகையில், இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. ஜனவரி 29ம் தேதி தி ஆஸ்திரேலியா டுடே எனும் ட்விட்டர் பக்கத்தில் வைரல் செய்யப்படும் வீடியோ பதிவாகி இருக்கிறது.
Another video of #Khalistan goons running a mock in #Melbourne‘s #Federation Square
Five injured one in Hospital@DrAmitSarwal @Bha7at1_Shanka7 @Pallavi_Aus @SarahLGates1 @VictoriaPolice @rishi_suri #HinduHate @DanielAndrewsMP @TimWattsMP @JacintaAllanMP @AusHCIndia @HCICanberra pic.twitter.com/3JjCAPVCzW— The Australia Today (@TheAusToday) January 29, 2023
” ஜனவரி 29ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ” சீக்கியர்களுக்கு தனி நாடு ” கோரி வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும், காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக ” இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : பிபிசியின் மோடி ஆவணப்படத்திற்கு எதிராக பிரிட்டன் மக்கள் போராட்டம் எனப் பரவும் தவறான வீடியோ !
மேலும் படிக்க : மோடி ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாக பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாகப் பரவும் வதந்தி !
இதற்கு முன்பாக, பிபிசியின் மோடி ஆவணப்படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதுகுறித்தும் நாம் கட்டுரைகள் வெளியிட்டு உள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், லண்டனில் பிபிசிக்கு எதிராக போராடியவர்களை அங்குள்ள பொதுமக்கள் மற்றும் லண்டன் காவல்துறை தாக்கியதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும், காலிஸ்தான் ஆதரவு அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.