வெளிநாடுகளுக்கு பரவும் ஸ்டெர்லைட் போராட்டம் !

பரவிய செய்தி
ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அயல் நாடுகளில் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதிப்பீடு
சுருக்கம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், போராடும் மக்களுக்கு ஆதரவாக லண்டன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
விளக்கம்
தூத்துக்குடியின் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் எனும் தாமிர உருக்கு ஆலையில் இருந்து கந்தக டை ஆக்சைடு என்ற நச்சு வாயு வெளியேறி மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு, கருச்சிதைவு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுவதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தொடர் கோரிக்கைகள், போராட்டங்கள் எழுந்தன.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கமாக இரண்டாம் ஆலையை சிப்காட் பகுதியில் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். “ இருக்கிற ஆலையே மக்களுக்கு எமனாக இருக்கு, இதில் விரிவாக்கம் வேற செய்கிறீர்களா என கொதித்து எழுந்த மக்கள் மார்ச் 24-ம் தேதி மாபெரும் போராட்டத்தை துவங்கினர் ”.
ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் வணிகர்கள் முழு கடையடைப்பில் ஈடுபட்டனர். மேலும், பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும், அன்று இரவு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தோராயமாக 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது. இதன் நீட்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் ஆலையின் விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசம் கடந்து வாழும் தமிழ் மக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
லண்டனில் தமிழர்கள் போராட்டம்:
“ கேட்குதா கேட்குதா, தமிழர் குரல் கேட்குதா ” என்ற கோஷங்களுடன் தமிழரின் பாரம்பரிய பறை இசையை இசைத்துக் கொண்டே, லண்டனின் மேஃபைர் பகுதியில் உள்ள வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வாலின் வீட்டிற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர் லண்டன் வாழ் தமிழர்கள்.
தமிழகத்தின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாலும், நிறுவனத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவளித்தும் லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். அதில், #ban Sterlite #save thoothukudi என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
லண்டனில் வாழ்ந்து வரும் பெரும்பாலான தமிழர்கள் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாறி இருந்தாலும், இன்றளவும் அவர்களது இதயத்தில் தமிழ் மண் மீதான உணர்வு மாறாமல் உள்ளது. தன் தாய் மண்ணில் வாழும் மக்களின் வாழ்வை அவமதித்தும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதின் விளைவால் உருவான மாபெரும் உணர்வு எழுச்சிக்கு ஆதரவு அளிப்பதோடு, அதில் கலந்து கொள்ளவும் விரும்புவதாக லண்டன் வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய லண்டன் வாழ் தமிழர்களுக்கு அந்த நாட்டைச் சேர்ந்தஇங்கிலாந்து மக்கள் சிலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மக்களுக்கு பாதிப்பை தரும் ஆலை தடை செய்யப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் கூறியுள்ளனர். அவர்கள் பேசிய வீடியோ மேலே
குவைத் நாட்டில் ஆதரவு:
தமிழகத்தில் அதிக புற்றுநோயாளிகள் இருக்கும் பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் மாறி வருவதால், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி குவைத் வாழ் தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1996-ல் நடைபெற்ற தீவிர எதிர்ப்பு போராட்டத்தை கண்டு கொள்ளாமல் விட்ட குற்ற உணர்ச்சியால் என்னமோ தற்போது போராட தூண்டுகிறது. எனவே, அயல் தேசங்களில் உள்ள தமிழ் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.
தமிழக மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி போராடி வரும் வேளையில், லண்டன், குவைத் உள்ளிட்ட அயல் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆதரவு கரம் நீட்டுவது தூத்துக்குடி மக்கள் போராட்ட வடிவில் வேறு விடிவம் , உலகத் தமிழர் ஆதரவும் கிடைத்து வருகிறது .