லண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் !

பரவிய செய்தி
கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. நம்ப முடிகிறதா ?
ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை “ஆல்பர்ட்” என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது
பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது. 1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது. ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.
மதிப்பீடு
விளக்கம்
50 ஆண்டுகளுக்கு முன்பாக லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்து வந்த ” ஆல்பர்ட் ” பேருந்தின் புகைப்படங்கள் இணையத்தில் இன்றும் ஆச்சரியத்தை உள்ளாக்கி வருகிறது. மிக நீண்ட பயணம் மேற்கொள்வது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதும் இந்தியாவில் இருந்து லண்டன் நகரம் வரை பேருந்து பயணம் என்றால் ஆச்சரியத்திற்கு பஞ்சமில்லை. இது வெறும் நினைவூட்டல் மட்டுமே !
1957 ஏப்ரல் 15-ம் தேதி லண்டனில் புறப்பட்ட ஆல்பர்ட் பேருந்து பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும், பேருந்தில் ஒருவழி பயண கட்டணமாக 85 பவுண்ட்(ரூ.8000) வசூலிக்கப்பட்டதாகவும் Getty image தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பேருந்து பயணம் லண்டனில் தொடங்கி பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கெரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் நியூ டெல்லி, ஆக்ரா, அலகாபாத், பனாரஸை கடந்து கொல்கத்தாவை சென்றடையும்.
பயணிகளுக்கு தேவையான உணவு, படுக்கை, விசிறிகள், கார்பேட் தரை, ரேடியோ, இசை என சொகுசான வசதியை ஏற்படுத்தி தந்துள்ளனர். பயணத்தின் போது நியூ டெல்லி, டெக்ரான், சால்ஸ்பேர்க், காபூல், இஸ்தான்புல், வியன்னா உள்ளிட்ட நகரங்களில் ஷாப்பிங் செய்ய நாட்கள் ஒதுக்கப்பட்டன.
1972 மற்றும் 73-ம் ஆண்டிற்கான ஆல்பர்ட் பயணத்தின் திட்ட விவரங்கள் அடங்கிய புகைப்படமும் இணையத்தில் கிடைத்தது.1972-ல் லண்டன் டூ கொல்கத்தா ஒருவழி பயணத்திற்கு145 பவுண்ட் (அன்றைய மதிப்பில்,13,644 ரூபாய்) வசூலிக்கப்படுவதாக இடம்பெற்று இருக்கிறது.
அதேநேரத்தில், லண்டன் முதல் ஆஸ்திரேலியா வரைக்கும் பயணம் நீண்டு இருக்கிறது. 1968-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி சிட்னியில் தொடங்கிய ஆல்பர்ட் பயணம் 132 நாட்களுக்கு பிறகு 1969 பிப்ரவரி 17-ம் தேதி லண்டனில் பயணத்தை முடித்ததாக hooniverse எனும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிட்னி முதல் லண்டன் வரையிலான பயணம் குறித்து, ” Travellers Wanted…: 1968: Sydney to London in a double-decker bus ” எனும் தலைப்பில் வெளியான புத்தகம் ஆன்லைன் விற்பனைதளத்தில் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.