100 ஆண்டுகளுக்கு மேலாக எரியும் உலகின் பழமையான பல்பு | எங்கே இருக்கிறது ?

பரவிய செய்தி
சென்டெனியல் பல்பு என அழைக்கப்படும் இந்த பல்பு 1901-ம் ஆண்டில் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு தற்பொழுது வரை 1 மில்லியன் மணிக்கும் மேலாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. 1976-ம் ஆண்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் பொழுது 22 நிமிடங்கள் மட்டுமே இந்த பல்பின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
உலகின் பழமையான மற்றும் ஆச்சரியமூட்டும் தகவல்கள் எப்பொழுதும் மக்களால் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அப்படி ஒரு தகவலாக, 1901-ம் ஆண்டில் எரிய ஆரம்பித்த பல்பு ஒன்று 118 ஆண்டுகளுக்கு மேலாக எரிந்து கொண்டிருப்பதாக கூறும் ஓர் மீம் பதிவை காண நேரிட்டது.
சென்டெனியல் பல்பு எனக் கூறப்படும் உலகின் பழமையான பல்பு குறித்த தகவலின் உண்மைத் தன்மையையும், அது எங்குள்ளது என்பது குறித்த தகவலையும் அறிந்து கொள்ள யூடர்ன் தரப்பில் ஆராய்ந்து பார்த்தோம்.
2011-ம் ஆண்டு Live science இணையதளத்தில் ” Calif. Light Bulb Has Been Burning 110 Years Straight ” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் சென்டெனியல் லைட் பல்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் பகுதியில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் சென்டெனியல் லைட் பல்பு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. 1901-ம் ஆண்டு இன்ஸ்டால் செய்யப்பட்டதில் இருந்து தொடர்நது எரிந்து கொண்டே இருக்கிறது. 2010-ம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 4 வாட்ஸ் சென்டெனியல் பல்பு தீயணைப்பு இயந்திரங்களின் இரவு வெளிச்சத்தை வழங்குவதற்காகவே 24 மணி நேரமும் ஒளிர விடப்பட்டுள்ளது.
1976-ம் ஆண்டில் ஒரு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படும் பொழுது மட்டுமே செயல்பாட்டில் சில நேர இடைவெளிகள் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலையத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் பொழுது பல்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என பலத்த போலீஸ் மற்றும் தீயணைப்பு பாதுகாப்புடன் செயல்படுத்தி உள்ளனர். இத்தகைய மாற்றும் பணிக்கு 22 நிமிடங்கள் ஆகியதாக கூறப்படுகிறது.
சென்டெனியல் லைட் பல்பு தனது பழமையான வரலாறுக்காக பல கெளரவப் பட்டங்களை பெற்றிருக்கிறது. அதில், கின்னஸ் சாதனையும் அடங்கும். லிவர்மோர் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருக்கும் சென்டெனியல் லைட் பல்பு 100 ஆண்டுகளை கடந்து எரிந்து கொண்டிருப்பதால் ” உலகின் நீண்ட வருடங்கள் ஒளிரும் லைட் பல்பு ” என்ற பெருமையை கின்னஸ் சாதனையின் மூலம் பெற்றுள்ளது.
நமக்கு கிடைத்த தகவலில், கலிபோர்னியாவில் லிவர்மோர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள சென்டெனியல் லைட் பல்பு 100 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிர்ந்து கொண்டிருப்பது உண்மையே. அதற்காக சென்டெனியல் லைட் பல்பு உலக சாதனையையும் பெற்று இருக்கிறது.