This article is from Sep 30, 2018

இந்திய கல்விமுறை குறித்து லார்ட் மெக்கலே பிரிட்டிஷ் பாரளுமன்றத்தில் பேசினாரா ?

பரவிய செய்தி

நான் இந்தியா முழுவதும் வலம் வந்தேன், அங்கு ஒரு பிச்சையேடுப்பவரை கூட நான் காணவில்லை. இவர்கள் மிகுந்த உயர்வான குணம் உடையவர்கள். நாம் இவர்களின் முதுகெலும்பான ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை உடைக்காமல் நம்மால் இவர்களை ஆள முடியாது. எனது பரிந்துரை என்னவென்றால் இவர்களின் பண்டைய கல்விமுறை, பண்பாட்டை மாற்றி ஆங்கிலமே உயர்ந்தது என அவர்களை என்ன வைக்க வேண்டும் அவர்களது மொழியை விட ஆங்கிலத்தை அவர்கள் உயர்வாய் என்ன வேண்டும். அப்பொழுது தான் நம்மால் இந்தியாவை அடக்கி ஆள முடியும் – Lord Macaulay address to the British Parliment 2nd Feb 1835.

மதிப்பீடு

சுருக்கம்

மெகலே பற்றி பரவும் வதந்தியில் அதை மெய்பிக்க எங்கும் எவரிடமும் ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை

விளக்கம்

இந்தியாவில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு பன்மடங்கு அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று பட்டம் பெற்ற பலரும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்க காரணம் இன்றைய கல்வி முறையும் கூட எனலாம். நம் பழங்கால கல்வி முறையை அழித்து ஆங்கிலேயே கல்வி முறை கொண்டு வர காரணமாக இருந்தவர் லார்ட் மெகலே.

இந்தியர்களின் பண்டைய கல்வி முறையை மாற்றி ஆங்கிலத்தை உயர்ந்ததாக நினைக்க வைக்க வேண்டும் என 1835-ல் பிப்ரவரி 2-ம் தேதி லண்டன் பாராளுமன்றத்தில் உரையாற்றினார் என ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சில சமயங்களில் இந்திய அரசியல் தலைவர்கள் கூட மெகலே பற்றி அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது உண்டு. ஒரு முறை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்க்கு எதிரான போராட்ட பிரச்சாரத்தில் இம்ரான் கான் ஒருமுறை மெகலே பற்றி பேசி உள்ளார்.

 

தாமஸ் பாபிங்டன் மெகலே 1800 முதல் 1859 வரையிலான காலக்கட்டத்தில் வாழ்ந்த பிரிட்டன் அதிகாரி. இந்தியாவில் இருந்த மெகலே சட்டம் மற்றும் கல்விமுறை குறித்த வரைவு ஒன்றை கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் பெண்டின்க் ஆட்சியில் 1835 & 1836-ல் வழங்கினார். இதில், 1813 ஆம் ஆண்டு charter act-ன் படி இந்தியாவில் கல்வி துறைக்கு செலவிடப்படும் தொகையை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி விளங்கி இருந்தார்.

மேலும், புதிய ஆங்கில கல்வியை முறையை செயல்படுத்துவது அல்லது பழமையான சமஸ்கிருதம், அரேபியன் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் உயர் கல்வியை தொடர்வது போன்று எடுத்துரைக்கப்பட்டது.

மெகலேவின் கருத்து உண்மையா ?

  • மெகலே 1835 பிப்ரவரில் பிரிட்டனில் இருந்தார் என்றுக் கூறியது முற்றிலும் தவறு. அவர் 1834-1838 வரை இந்தியாவில் கவர்னர் ஜெனரல் கவுன்சிலில் சட்ட உறுப்பினராக இருந்தார்.
  • இந்திய கல்விமுறை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. கல்கத்தா கவர்னர் ஜெனரல் கவுன்சிலில் பேசப்பட்டுள்ளது.
  • மெகலே அளித்த பரிந்துரை என பரவும் படத்தில் இருப்பது போன்று இந்தியா மற்றும் இந்திய கலாச்சாரம் பற்றிய தன் கருத்தை கூறியதில்லை. மேலும், அவரின் புதிய ஆங்கில முறை கல்வியை அந்தஸ்துமிக்கவர்கள் பயில்வதற்காக மட்டுமே கொண்டு வர நினைத்தார், பழமையானவற்றில் இருந்து பிரிக்க அல்லது அழிக்க நினைக்கவில்லை.

1838 ஆம் ஆண்டு வரை தனக்கு அளிக்கப்பட்ட பணியை முடிக்காமல் பிரிட்டன் திரும்ப கூடாது என்ற கட்டளை அவருக்கு இருந்தது. 1835 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மெகலே கல்கத்தாவில் இருந்துள்ளார். Parliment.uk- வை YOUTURN தொடர்பு கொண்டு இதை பற்றி கேட்டபோது அவர்கள் இந்த கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்த லிங்கை அனுப்பினார்கள். அதில் “அது பார்லிமெண்ட் பதிவு இல்லை எனவே ஹவுஸ் ஆப் காமெனில் இதை பற்றி எந்த ஆவணமும் இல்லை. வரலாற்றாளரும் கட்டுரையாளரும் கவிஞருமான மெக்கலே MP-ஆக 1830-34, 1840-47 மற்றும் 1852-57 காலத்தில் இருந்தார். இந்திய கல்விமுறையை பற்றிய பிரபல பேச்சு பிப்ரவரி 2-ஆம் தேதி 1835-இல் அவர் MP-ஆக இல்லாத சமயத்தில் குறிப்பிடபட்டுள்ளது. அவர் 1834 தொடக்கத்திலேயே MP பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவிற்கு பயணம் செய்து அங்கிருக்கும் SUPREME COUNCIL OF INDIA -வில் உறுப்பினராக ஆனார். எனவே அது supreme council of india வில் எழுதப்பட்டிருக்கலாம். இந்த வரிகளை SEARCH ENGINE-இல் தேடும் போது பல வலைத்தள முடிவுகளும் புத்தகமும் கிடைக்கிறது. ஹவுஸ் ஆப் காமென் இதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியாது. இதை பற்றி எந்த பதிவுகளும் இல்லை. ” என்று தெரிவித்துள்ளனர்.

மெகலே பற்றி பரவும் வதந்தியில் அதை மெய்பிக்க எங்கும் எவரிடமும் ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை..!!

Please complete the required fields.
Back to top button
loader