லவ் ஜிகாத் எனத் தவறாகப் பரப்பப்படும் சிறுமியிடம் தவறாக நடந்துக் கொண்ட சோனு என்பவர் தாக்கப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி
முஸ்லீம் பையன் தன்னை இந்துவாக காட்டி இந்து பெண்ணுடன் பழக ஆரம்பித்தான், அது லவ் ஜிகாத் என்பதை அந்த பெண்ணின் ஆட்கள் உணர்ந்தனர், பிறகு நடந்ததை இந்த வீடியோவில் பாருங்கள். 2024 மீண்டும் மோடி என நடுநிலைஸ் உணரவேண்டும்Twitter link
மதிப்பீடு
விளக்கம்
ஒரு இளைஞரை பொது மக்கள் பலரும் சேர்ந்து அடித்து, அவரது ஆடையை அகற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அப்பதிவில், இஸ்லாமிய ஆண் ஒருவர் தன்னை இந்துவாகக் காட்டிக் கொண்டு இந்து பெண்ணுடன் பழகி வந்ததாகவும், அதனை அப்பெண்ணின் உறவினர்கள் கண்டறிந்ததும் அவர் தாக்கப்பட்டதாகவும் இடம்பெற்று இருக்கிறது.
முஸ்லீம் பையன் தன்னை இந்துவாக காட்டி இந்து பெண்ணுடன் பழக ஆரம்பித்தான், அது லவ் ஜிகாத் என்பதை அந்த பெண்ணின் ஆட்கள் உணர்ந்தனர், பிறகு நடந்ததை இந்த வீடியோவில் பாருங்கள்.*
2024 மீண்டும் மோடி என நடுநிலைஸ் உணரவேண்டும் pic.twitter.com/HQMUWH0xOi
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) July 3, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீப்ரேம்களைக் கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், இதே வீடியோவினை 2020ம் ஆண்டு ‘அம்பாலா நகரின் ஜெயின் மார்க்கெட்டில் 5 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்ய ஜிகாதி முல்லா முயன்றது அங்குள்ள பெண்களைக் கோபப்படுத்தியது’ என டிவிட்டர் பதிவுகள் கிடைத்தன.
(TTC न्यूज़)अंबाला शहर के जैन बाजार में एक जिहादी मुल्ले ने 5 साल की लड़की से रेप करने की कोशिश की जिससे वहां की महिलाओं का गुस्सा फूट पड़ा 😡
महिलाओं ने पकड़ कर उसको नंगा करके
🤛👊🤜धून दिया ।
ऐसे घिनोने बलात्कारी के खिलाफ सख्त से सख्त कानूनी कार्रवाई होनी चाहिए
@kamrasaahab pic.twitter.com/BYCfCepvWf— Hemant Kamra (@iamHemantKamra) January 21, 2020
ஆனால், 2020, ஜனவரி 20ம் தேதி ‘மகாராஷ்டிரா டைம்ஸ்’ இணையதளத்தில், தற்போது பரவக் கூடிய வீடியோவை பதிவு செய்து வெளியிட்டு உள்ள செய்தியில், , ‘ஹரியானா மாநிலம் அம்பாலா (Ambala) எனும் பகுதியில் மைனர் சிறுமிகளிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட நபர் சிறுமிகளின் உறவினர்களால் நிர்வாணப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சோனு என்ற பவன் சிறுமிகள் பள்ளிக்குச் செல்லும் போது ஆபாசமாகப் பேசியும், சைகைகள் செய்தும் வந்த நிலையில் அச்சிறுமியின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் அந்நபரின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி அடித்துள்ளனர். பவன் என்ற அந்நபரின் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ‘ANI’ தளத்தில் வெளியான செய்தியில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்ணின் தாயார் ஒருவர் கூறுகையில, ‘அந்த நபரின் செயல்களால் குழந்தைகள் தனியாகப் பள்ளிக்குச் செல்ல பயந்து வந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை (2020, ஜனவரி 20ம் தேதி) அவர்களை நான் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். அப்போது குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்ட அந்நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையிடம் புகார் செய்தேன்” என்றுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் காவல் நிலைய SHO (station house officer) சுனிதா டக்கா, “பம்மி சவுக் பகுதியில் பவன் என்ற நபர் பள்ளி மாணவிகளைத் துன்புறுத்துவதாகவும், அவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இவற்றிலிருந்து குற்றம் செய்தவரின் பெயர் சோனு என்கிற பவன் என்பதும், அவர் இஸ்லாமியர் அல்ல என்பது தெரிய வருகிறது. இந்த வீடியோ குறித்த தவறான தகவலை வகுப்புவாத பிரிவினையை உருவாக்கும் நோக்கில் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : இஸ்லாமியர் ஒருவரின் நான்கு மனைவிகள் சந்தித்த போது ஏற்பட்ட மோதல் எனத் தவறாகப் பரவும் லெபனான் வீடியோ!
இஸ்லாமியர்கள் பற்றிப் பரப்பப்பட்ட பல போலிச் செய்திகள் குறித்த உண்மைகளை யூடர்னில் செய்தியாக வெளியிட்டுள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகி வந்த முஸ்லீம் நபரை அப்பெண்ணின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கியதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. சோனு என்ற பவன் என்பவன் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காகப் பெற்றோராலும், பொது மக்களாலும் தாக்கப்பட்டுள்ளான். மேலும் அந்நபர் இஸ்லாமியர் அல்ல என்பதும் அறிய முடிகிறது.