பெங்களூருவில் லவ் ஜிகாத்தால் இந்துப்பெண் தாக்கப்படும் வீடியோ எனப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
பெங்களூரில் IT தொழில் நிபுணரான முகமது முஷ்டாக் என்பவரை இந்து பெண் திருமணம் செய்து கொண்டார். தனது குழந்தையின் பிறந்த நாளில் இந்து முறைப்படி தீபம் ஏற்றினார். அவர் அவளை எப்படி நடத்தினார் என்று பாருங்கள். இது ஒவ்வொரு இந்துப் பெண்ணும் பார்க்க வேண்டிய காட்சி..Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
“பெங்களூரில் IT தொழில் நிபுணரான முகமது முஷ்டாக் என்பவரை இந்துப்பெண் திருமணம் செய்து கொண்டார். லவ் ஜிகாத்தினால் இந்தப் பெண்ணிற்கு நடந்ததைப் பாருங்கள். இது ஒவ்வொரு இந்துப் பெண்ணும் பார்க்க வேண்டிய காட்சி” என்று கூறி 2:15 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் கேக், மெழுகுவர்த்தி மற்றும் பலூன்கள் வைக்கப்பட்டுள்ள மேஜையைச் சுற்றி ஒரு பெண்ணும் குழந்தையும் அமர்ந்திருக்க, ஒரு நபர் திடீரென கோபமடைந்து, அந்தப் பெண்ணை தொடர்ந்து தாக்குவதை பார்க்க முடிகிறது. மேலும் அந்த வீடியோவில் ‘இந்த சைக்கோ, பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் முகமது முஷ்டாக் ஜிகே’ என்று குறிப்பிட்டு இணைக்கப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
लव जिहाद के बाद में हिंदू लड़की का क्या होता है यह देखो🥲😡 pic.twitter.com/1XpifwKSyt
— Sintu Tiwari🇮🇳 🚩 (@Tiwari_Sintu999) November 17, 2022
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோ குறித்து தேடியதில், இந்த வீடியோ கடந்த 2022-இல் இருந்தே ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் அதிகமாக பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.
இந்த வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2015-இல் எடுக்கப்பட்டது என்பதையும், இந்தப் பெண் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையையும் அறிய முடிந்தது.
இது குறித்து, 2022 அக்டோபர் 03 அன்று swati_maliwal என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதில் இந்தப் பெண்ணைத் தாக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்நாடக முதல்வருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதமும் இந்த வீடியோவுடன் இணைக்கப்பட்டிருந்தது.
View this post on Instagram
மேலும் அவருடைய (swati_maliwal) மற்றொரு பதிவிலும் இதே வீடியோ பதிவிடப்பட்டு “#DomesticAbuse #JusticeForAisha” என்ற ஹேஷ்டாக்குகள் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த முஸ்லீம் பெண்ணின் விவாகரத்து வழக்கு தொடர்பான கட்டுரை News18 பக்கத்தில் கடந்த 2021 டிசம்பர் 28 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஒரு முஸ்லிம் மனைவி தனது கணவரின் இரண்டாவது திருமணத்தின் காரணத்திற்காக விலகி இருப்பதால், அந்த மைனர் குழந்தையை அந்தப்பெண் தன்னுடன் வைத்துக் கொள்ளலாம்.” என்று நீதிபதி ‘கிருஷ்ணா எஸ் தீட்சித்’ தீர்ப்பில் கூறியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் “முஷ்டாக் பெங்களூரைச் சேர்ந்த ஒரு மென்பொருள் நிபுணர். கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 30 அன்று தாவணகெரேவை சேர்ந்த ஆயிஷாபானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2013 ஆகஸ்ட் 1ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து Ish news ஊடகத்திலும் “குழந்தை தன் தந்தையின் செயலைப் அப்படியேப் பார்த்து தாயை அடிக்கிறது” என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
மேலும் படிக்க: இந்து எனக் கூறி லவ் ஜிகாத் செய்ய முயன்ற முஸ்லீம் இளைஞர்களுக்கு போலீஸ் தடியடி எனப் பரவும் பொய் !
இதற்கு முன்பும் லவ் ஜிகாத் என்று கூறி வலதுசாரிகள் பல தவறான செய்திகளைப் பரப்பினர். அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: லவ் ஜிகாத் எனத் தவறாகப் பரப்பப்படும் சிறுமியிடம் தவறாக நடந்துக் கொண்ட சோனு என்பவர் தாக்கப்பட்ட வீடியோ !
முடிவு:
நம் தேடலில், பெங்களூருவில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் கடந்த 2015ன் போது நடந்த குடும்ப வன்முறையை, லவ் ஜிகாத்தினால் ஒரு இந்துப்பெண்ணை ஒரு முஸ்லீம் கணவர் தாக்குவதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.