லவ் ஜிகாத்.. பெண்களுக்கு விலைப்பட்டியல் வெளியிடப்பட்டதாகப் பரவும் போலி செய்தி !

பரவிய செய்தி
லவ் ஜிகாத் மூலமாக கூட்டி வரும் பெண்ணுக்கு ஜாதிக்கு தகுந்தாற்போல கட்டணம் நிர்ணயித்த இஸ்லாம். இந்த பணம் அந்த பெண்ணுக்கு அல்ல. அவளை கூட்டி வரும் ஆணுக்கு என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
இந்து பெண்ணை இஸ்லாமிய ஆண்கள் காதலிப்பதை லவ் ஜிகாத் என வலதுசாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் லவ் ஜிகாத் மூலம் மாற்று மதத்திலிருந்து அழைத்து வரப்படும் பெண்ணின் ஜாதிக்கு ஏற்ப பணம் தருவதாகவும், அப்பணம் பெண்ணை கூட்டி வரும் ஆணுக்கு வழங்கப்படுவதாகவும் பாஜகவை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது.
லவ் ஜிகாத் என்ற பெயரில் பெண்களை காதல் வலையில் சிக்க வைக்கும் இஸ்லாமிய கூட்டங்கள் ….
பெண்களை தீவிரவாதத்துக்காக விலை பேசி விக்கும் லவ் ஜிகாத் கூட்டங்கள்…… pic.twitter.com/vThuWXqIPb
— Dr.Parameswari BJP Dist President (@bjp_parameswari) May 6, 2023
மேலும் அப்பதிவுகளில் பத்திரிகையில் வந்த செய்தி ஒன்றினையும் குறிப்பிடுகின்றனர். அதில், “பிற மதங்களிலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறும் பெண்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வழங்கப்படும் என ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் இணையதளத்தில் அறிவித்ததாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
*"லவ் ஜிகாத்" மூலமாக கூட்டி வரும் பெண்ணுக்கு ஜாதிக்கு தகுந்தாற்போல கட்டணம் நிர்ணயித்த இஸ்லாம். இந்த பணம் அந்த பெண்ணுக்கு அல்ல. அவளை கூட்டி வரும் ஆணுக்கு என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.* pic.twitter.com/Zfbw67CiKW
— Thirunavukkarasu.s (@Thiruna84952891) May 7, 2023
உண்மை என்ன ?
சமூக வலைத்தளப் பதிவுகளிலுள்ள முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடியதில், இச்செய்தி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரவி வருவதை அறிய முடிந்தது.
2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்ட லவ் ஜிகாத் விலை பட்டியல் தொடர்பாக இரண்டு பேரைக் காவல் துறையினர் விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், பரவக்கூடிய துண்டுப் பிரசுரத்தில் பெரும்பாலான தொலைப்பேசி எண்கள் ‘+92′ என்ற பாகிஸ்தான் குறியீட்டு எண்ணுடன் தொடங்குகிறது. மேலும் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ என்ற இஸ்லாமிய அரசியல் அமைப்பிற்குச் சொந்தமான பெங்களூர், கோழிக்கோடு மற்றும் சென்னை அலுவலக முகவரிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கர்நாடகா தலைவர் அப்துல் வாஹித் சைட் கூறியதும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இது போன்ற ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்து, அதில் எங்களது அலுவலகத்தின் முகவரியை வழங்க நாங்கள் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும். இது லவ் ஜிகாத் எனப் பரப்பும் அதே இந்துத்துவா அமைப்பின் வேலைதான்” எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, “இந்த துண்டுப் பிரசுரம் சில வாரங்களுக்கு முன்பாக எங்களது கவனத்திற்கு வந்தது. அப்போதே காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என PFI அமைப்பைச் சேர்ந்த நசீருதீன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கேரளா மாநிலம் கோழிக்கோட்டு PFI அமைப்பைச் சேர்ந்த அப்துல் ஷகூர் கூறுகையில், இந்த துண்டுப் பிரசுரத்தைப் பரப்பிய இந்து அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. வரும் நவம்பரில் (2014) தனிப் புகாராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளோம் எனக் கூறியுள்ளார்.
தற்போது பரவக் கூடிய இத்தகவல் 2010, பிப்ரவரி 5ம் தேதி ‘சீக்கியர் மற்றும் இஸ்லாம்’ என்னும் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை கொண்டு எந்தவித ஆதாரமும் இல்லாமல் தமிழில் பெயர் தெரியாத பத்திரிகை வெளியிட்ட செய்தியினைதான் பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
இவற்றிலிருந்து லவ் ஜிகாத் மூலம் பெண்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்ற PFI அமைப்பு விலைப்பட்டியல் வெளியிட்டதாக பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், மாற்று மதப் பெண்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றினால் பணம் தருவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த துண்டுப் பிரசுரம் பரவ தொடங்கிய போதே அதனை தங்களது அமைப்பு வெளியிடவில்லை என PFI தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.