இந்து பெண்ணின் இறந்த உடலை எடுத்துச் செல்லும் முஸ்லீம் காதலர் எனப் பரப்பப்படும் வதந்தி!

பரவிய செய்தி
இந்த இந்து பெண் பினிதா ராஜஸ்தானை சேர்ந்தவர். பழ வியாபாரியான முகமதுவைக் காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனவள், 22 நாட்களுக்குப் பிறகு அவள் சாக்கு மூட்டையில் காணப்பட்டாள், முகமது, பினிதாவை பாலத்தின் அடியில் வீசுவதற்காகச் சுமந்து சென்றான். அவள் கால்கள் சாக்குப் பையில் இருந்து நழுவியது கூட முகம்மதுக்குத் தெரியாது. பின்னால் ஒரு கார் வந்து, இந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு போலீஸை அழைத்தது. நீங்கள் அனைவரும் உங்கள் மகளை நன்றாக கவனிக்கவும்
மதிப்பீடு
விளக்கம்
ராஜஸ்தானைச் சேர்ந்த பினிதா என்ற இந்து பெண் பழ வியாபாரியான முகமதுவைக் காதலித்து வீட்டை விட்டு சென்ற பிறகு சாக்கு மூட்டையில் பினிதாவின் இறந்த உடலை பாலத்தின் அடியில் வீசுவதற்காக முகமது எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணின் கால்கள் சாக்குப் பையில் இருந்து நழுவியதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
उसका अब्दुल सब से अलग था
एक बार ज़ूम करके देखना pic.twitter.com/RZqkqkgssO— पुष्पेन्द्र कुलश्रेष्ठ (@shripushpendra1) June 1, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படத்தினை கொண்ட கட்டுரையை கெய்ரோ 24 என்னும் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஊடகம் ஜூன் 2, 2023 அன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அதில் “எகிப்து நாட்டின் கெய்ரோவில் உள்ள மொக்கட்டம் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையின் உரிமையாளர் ஒருவர் தனது கிளைகளில் ஒன்றிலிருந்து மேனிக்வின் (Mannequin) எனப்படும் துணியை காட்சிப்படுத்தும் பொம்மையை போக்குவரத்து நிறுவனத்தின் அனுமதியுடன் மோட்டார் சைக்கிள் எடுத்து சென்றுள்ளார்.
இருப்பினும், அவரது பயணத்தின் போது அந்த பொம்மையின் கால் வெளியே வந்துள்ளது. வைரலான படத்தை தெளிவுப்படுத்த கடை உரிமையாளர் கடையின் பேஸ்புக் பக்கத்தில் அதை நிரூபித்துள்ளார்” என்று அந்த கட்டுரை விவரிக்கிறது.
மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய கடை உரிமையாளரின் ஃபேஸ்புக் பக்கமான BG Clothing பக்கத்திற்கு சென்று பார்த்ததில், இந்தப் புகைப்படம் அங்கு பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. மேலும் அரேபிய மொழியிலுள்ள பதிவை மொழி பெயர்த்து பார்த்ததில், எகிப்தின் கெய்ரோவில் உள்ள மொகத்தம் கிளைக்கு அந்த பொம்மை (Mannequin) பத்திரமாகக் கொண்டு வரப்பட்டது, நிலவைப் போல அழகாக உள்ளது இது. கடவுளுக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிந்தது.
BG Collections இன் மற்றொரு Facebook பதிவிலும், இதையே காண முடிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படத்தில் இருப்பது இறந்த பெண்ணின் உடல் அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க: லவ் ஜிகாத்.. பெண்களுக்கு விலைப்பட்டியல் வெளியிடப்பட்டதாகப் பரவும் போலி செய்தி !
மேலும் படிக்க: விஐபி பேக்ஸ் நிறுவனம் மதமாற்றத்தை ஆதரிக்கும் விளம்பரத்தை வெளியிட்டதாக வலதுசாரிகள் பரப்பும் வதந்தி !
இதற்கு முன்பும், லவ் ஜிகாத் என்று கூறி தவறாக பரப்பப்பட்ட செய்திகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: கலப்பு திருமண பத்திரிகையை லவ் ஜிகாத் எனப் பரப்பிய வலதுசாரிகள்.. பயந்து நிகழ்ச்சியை நிறுத்திய குடும்பத்தார்கள் !
முடிவு:
நம் தேடலில், ராஜஸ்தானைச் சேர்ந்த இந்து பெண்ணை கொன்று மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லும் முகமது என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானவை. அது இறந்த பெண்ணின் உடல் அல்ல, இந்தியாவும் அல்ல. எகிப்தில் துணியைக் காட்சிப்படுத்தும் பொம்மை (Mannequin) என்பதையும் அறிய முடிகிறது.