This article is from Sep 04, 2020

பொய்யான லவ் ஜிகாத் கதையுடன் பரவும் தொடர்பில்லா புகைப்படங்கள் !

பரவிய செய்தி

லவ் ஜிகாத் மாயையில் விழ வேண்டாம் என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டார்கள், கல்லூரி படிப்பு, தாய் தந்தை பாசம் எல்லாம் வீண், மோகம் தீர்ந்ததும் கை கால்களை உடைத்து சூட்கேஸில் திணித்து வீசிய பரிதாபம்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்து பெண்ணை காதலித்து மணந்த முஸ்லீம் இளைஞர் அப்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீசியதாக 4 புகைப்படங்களை இணைத்து வைரலாகும் ஓர் பதிவை பார்க்க நேரிட்டது. விஜயகுமார் என்பவரின் முகநூல் பக்கத்தில் லவ் ஜிகாத் எனக் கூறி வெளியான பதிவு ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், கொலை சம்பவம் எங்கு நிகழ்ந்தது, அது தொடர்பான விவரங்களோ, செய்தியோ இணைக்கப்படவில்லை. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

தம்பதியரின் புகைப்படத்தை தனியாக எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜூலை 28-ம் தேதி Arya Engineer எனும் ட்விட்ட பக்கத்தில் தம்பதியினரின் இரு புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன. ட்விட்டர் பதிவில் , தம்பதியினர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள கோரக்பூர் செளவ்க் பகுதியைச் சேர்ந்த லாவி ஜோஷி, முகமத் அதில் பாஷா எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த பதிவிலும் லவ் ஜிகாத் என்றே குறிப்பிட்டு இருந்தாலும், அப்பெண் இறந்து விட்டதாக குறிப்பிடவில்லை.

Twitter link | archive link 

அடுத்ததாக, பெண்ணின் உடல் இருக்கும் சூட்கேசை சுற்றி போலீசார் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஸியாபாத்தின் தசஷ்வமெத் வடிகா பகுதியில் அடையாள தெரியாத பெண்ணின் உடல் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டதாவும், பெண்ணின் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜூலை 27-ம் தேதி வெளியான இந்திய டுடே செய்தி கிடைத்தது.

ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ” போலீஸ் விசாரணையில் சூட்கேசில் இருந்த பெண்ணின் உடல் சமீபத்தில் திருமணமான வர்ஷா எனும் பெண்ணுடையது. அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரின் பெற்றோரால் வரதட்சணை கொடுமை செய்யப்பட்டதாக வர்ஷா உடைய தாய் மற்றும் சகோதரர் தகவல் அளித்தனர் என முதலில் வெளியாகியது. ஆனால், இறந்த பெண்ணின் உடல் வர்ஷா உடையது என தவறாக அடையாளக் காணப்பட்டதாகவும், இதையடுத்து வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாகவும் ” வெளியாகி இருக்கிறது.

லவ் ஜிகாத் என பரப்பப்படும் தம்பதியினர் புகைப்படத்தில் இருப்பவர்கள் வசிப்பது உத்தரகாண்ட் மாநிலம், சூட்கேசில் இறந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது உத்தரப் பிரதேச மாநிலத்தில் என வெவ்வேறாக இருக்கிறது. சூட்கேசில் உள்ள பெண் யார் என்றும், மரணம் குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவே செய்திகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், வைரல் புகைப்படத்தில் இருக்கும் தம்பதியினர் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும், அவர்களின் பெயர் லாவி ஜோஷி, முகமத் அதில் பாஷா அல்ல. அப்பெண் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கிறார்.

” 2020 ஜூன் மாதம் சுரபி சவுகான் மற்றும் எஹ்கம் ஃபரித் ஆகிய இருவரும் கலப்பு திருணம் செய்து கொண்டுள்ளனர். இத்திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை. சமூக வலைதளங்களில் அப்பெண் இறந்து விட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது, அப்பெண் நலமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதாக அவரே தெரிவித்து உள்ளார் ” என டேராடூனின் படேல் நகர் போலீஸ் பூம்லைவ் தளத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், லவ் ஜிகாத் எனக் கூறி பரப்பப்படும் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் புகைப்படம், சூட்கேசில் இறந்த பெண்ணின் உடல் இருக்கும் புகைப்படம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்பதையும், போலியான கதை வைரலாகி வருகிறது என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader