“லோ ஹிப்” பேண்ட் அணிவது ஓரினச் சேர்க்கைக்கான அழைப்பா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
இதை நாகரீகம் என்ற போர்வையில் போட்டு திரியும் எத்தனை இளைஞர்களுக்கு தெரியும். இந்த லோ ஹிப் ஜீன்சின் அர்த்தம் ? தெரிந்து கொள்ளுங்கள், அமெரிக்க சிறை கைதிகள் தங்களை ஓரினச் சேர்க்கைக்கு தயார் என்பதை காட்டவே இந்த அரைகுறையான உடையை அணிந்தனர். இதைப் பற்றி தெரிந்த பின்பு எத்தனை பேருக்கு இந்த அவமானத்தை அணிய விருப்பம் ?
மதிப்பீடு
விளக்கம்
மனித வரலாற்றில் உடை கலாச்சாரம் மாறிக் கொண்டே இருக்கக்கூடிய ஒன்று. அப்படி உருவான உடை கலாச்சாரத்தில் ” லோ ஹிப் ” பேண்ட்கள் அணிவது எங்கிருந்து தொடங்கியது, அதற்கு பின்னால் இருந்த காரணம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்று. ஆண்கள் அணியும் பேண்ட் இடுப்பு கீழே தொங்குவது போன்று அணியும் முறைக்கு லோ ஹிப்(lowhip) ஸ்டைல் எனக் கூறுகிறார்கள்.
” லோ ஹிப் ” பேண்ட்கள் அணியும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம், அமெரிக்காவில் உள்ள சிறைகளில் இருந்த கைதிகள் தாங்கள் ஓரினச் சேர்க்கைக்கு தயார் என்பதை வெளிப்படுத்த இடுப்பு கீழே பேண்ட்களை அணிந்து இருப்பது வழக்கம். அந்த முறையே ட்ரெண்ட் ஆக மாற்றி உள்ளனர் ” என உலகம் முழுவதிலும் பரவி இருக்கிறது. இன்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியே வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
லோ ஹிப் (Low hip ) பேண்ட் அல்லது ஷாக்கிங் (Sagging) பேண்ட் முறையின் தொடக்கம் வெவ்வேறாக கூறப்படுகிறது. எனினும், சிறைகளில் இருந்த கைதிகள் இடுப்புக்கு கீழே பேண்ட்கள் தொங்கும் அளவிற்கு அணிந்து இருந்தனர். ஆனால் , அதற்கான காரணங்கள் வேறு.
சிறை கைதிகளுக்கு வழங்கப்பட்ட உடைகள் ஒவ்வொருத்தருக்கும் சரியாக பொருந்தும் எனக் கூற முடியாது. சிலருக்கு உடைகள் பெரிதாக இருக்கும்பட்சத்தில் இடுப்புக்கு கீழே தொங்கிக் கொண்டு இருக்கும். ஏனெனில், சிறை கைதிகளுக்கு பேண்ட்களை இறுக்கமாக அணிய பெல்ட்கள் வழங்கப்படவில்லை. அப்படி வழங்கப்படும் பெல்ட்கள் மூலம் கைதிகள் தற்கொலைகள் அல்லது தப்பித்துச் செல்ல நேரிடும் என்பதே காரணம்.
ஆனால், அவ்வாறு இடுப்புக்கு கீழே பேண்ட் அணிய துவங்கிய பழக்கம் 1990-களில் ஹிப் ஹாப் பாடகர்கள் மூலமே இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடையத் துவங்கியது. ஆம், உடலுக்கு பொருந்தாமல் பெரிதாய் இருக்கும் உடைகளை அணிந்து இருக்கும் ஹிப் ஹாப் பாடகர்கள் மூலமே பிரபலம் அடைந்து இருக்கிறது.
2014-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி தி வாஷிங்க்டன் டிசி இணையதளத்தில் ” For some, sagging pants carry greater meaning ” என்ற தலைப்பில் ஷாக்கிங் உடையின் அர்த்தம் குறித்து வெளியிட்டு இருந்தனர். அதில்,
” ட்ரெவோர் ஸ்மித் என்பவர், ஷாக்கிங் பேண்ட்ஸ் வெறுமென ஃபேஷன் நடைமுறையே என்கிறார். இருப்பினும், மற்றவர்கள் இனரீதியான அடையாளத்தை நிலைநிறுத்துகிறது , ஓரினச் சேர்க்கையில் ஒரு ஆணிடம் இருந்து சமிக்கை செய்யும் அடிப்படையைக் கொண்டு இருக்கலாம் மற்றும் அதை அணிந்து கொண்டு நடக்கும் பொழுது ஏற்படும் அழுத்தத்தால் சுகாதார சிக்கல்களை வெளிவகுக்கும் எனக் கவலைப்படுகிறார்கள்.
ஆனால், 18 வயதான கல்லூரி மாணவர் ஸ்மித் கூறுகையில், இது எங்களுக்கான ஃபேஷன் மட்டுமே. அதன் மீது பலருக்கும் பலவிதமான கண்ணோட்டம் இருக்கிறது மற்றும் காலம் மாறுவதுடன் எப்படி செல்வது என்பது தெரியவில்லை ” எனக் கூறியதாக குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும், சிறையில் பெல்ட்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் அந்த முறை உருவாகியது என சிலர் வாதிடுகின்றனர் என்பதையும் தி வாஷிங்க்டன் டிசி செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.
ஷாக்கிங் அல்லது லோ ஹிப் பேண்ட் முறையை அணியும் நபர்களுக்கு எதிராக, அவ்வாறு உடை அணிவது ஓரினச் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கும் விதம் என நையாண்டியாக வதந்தியை பரப்பி இருக்கக்கூடும். மேலும், ஓரினச் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்க சிறை கைதிகள் இப்படி உடை அணிந்ததாக ஆதாரங்களை யாரும் சமர்பிப்பதில்லை. வெறும், கதை வழியாகவே கூறி வருகின்றனர்.
அடுத்து, இது உடலுக்கு தீங்கானது என ஒருதரப்பு மக்கள் கூறி வந்தாலும் , மறுபுறம் சில பகுதிகளில் இவ்வாறான உடை நடைமுறைக்கு தடைகளும் கூட விதிக்கப்பட்டு இருந்தன. 2005-ல் வெர்ஜினியா பகுதிகளில் உள்ளாடை தெரியும்படி ஷாக்கிங் உடை அணிவது தடை செய்யப்பட்டு, அப்படி அணிபவர்களுக்கு 50 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு கூட அந்த சட்டம் நிலைக்கவில்லை. இப்படி சில பகுதிகளில் தடைகள் விதிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன.
முடிவு :
நம்முடைய ஆய்வில் இருந்து, லோ ஹிப் அல்லது ஷாக்கிங் பேண்ட் அணிவது அமெரிக்க சிறையில் ஆண் ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பு விடுப்பதாக பரவும் செய்திகள் ஆதாரமில்லாதவை. அதற்கான தொடக்கத்திற்கு பலரும் பல கதைகள் கூறுகின்றன. அவற்றில் ஒன்று தான் இதுவும்.
ஆனால், ஷாக்கிங் பேண்ட் முறையை பிரபலப்படுத்தியது ஹிப் ஹாப் பாடகர்களே. 90-களில் பிரபலம் அடையத் துவங்கிய உடை முறை தற்பொழுதும் தொடர்ந்து வருகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.