லயோலா கல்லூரியின் நிலம் சிவன் கோவிலுக்கு சொந்தமானதா ?| வதந்தி பதிவு !

பரவிய செய்தி

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு செல்லும் வரை அதிகமாக பகிருங்கள்.. லயோலா கல்லூரி அமைந்து இருக்கும் இடம் சென்னையில் உள்ள பிரபல சிவன் ஆலயத்திற்கு சொந்தமான இடமாம். அந்த 96 வருட குத்தகை 2021 உடன் முடிவடைகிறது . கோவில் இடத்தை மீட்க இந்து இயக்கங்கள் தயாராகவும் ..

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் உள்ள பிரபல லயோலா கல்லூரி அமைந்து இருக்கும் 96 ஏக்கர் நிலம் சிவன் ஆலயத்திற்கு சொந்தமான இடம் எனக் கூறும் ஓர் பதிவை முகநூல், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் கண்டு இருப்பீர்கள். சிலரின் கோபத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகும் இந்த பதிவு தொடர்ந்து உலாவி வருவதை காண நேரிட்டது.

Advertisement

சமூக வலைதளங்களில் குழப்பத்தையும், வன்மத்தையும் உருவாக்கி வரும் இந்த பதிவு குறித்து ஆராய்ந்து பார்த்தோம். லயோலா கல்லூரி அமைந்து இருக்கும் இடம் தொடர்பான சர்ச்சையான பதிவுகள் தற்பொழுது துவங்கியது அல்ல, 2019 ஜனவரி மாதத்திலேயே வெளியாகத் துவங்கி உள்ளது.

” ₹50 ஆயிரம் கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் பொறம்போக்கு நிலத்தை 100 ஆண்டு குத்தகை முடிந்தும் ஆக்கிரமித்து இருக்கிறதா லயோலா கல்லூரி? அரசிடம் திரும்ப ஒப்படைப்பது எப்போது? பொது ஆர்வலர்கள் கேள்வி! ” என்ற தலைப்பில் கதிர் நியூஸ் என்ற வலதுசாரி ஆதரவு இணையதளம் ஜனவரி 21-ம் தேதி செய்தி வெளியிட்டு இருந்தது.

இதற்கு முன்பாக தான் 2019 ஜனவரியில் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான லயோலாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் அமைந்து இருந்ததாக இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பிஜேபி தரப்பில் கடும் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டன. அங்கு வைக்கப்பட்ட ஓவியங்கள் மதரீதியாக சர்ச்சையாகி இருந்தது.

Advertisement

அதன் பிறகு கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டு இருந்ததாக செய்திகளில் வெளியாகி உள்ளது . ஓவியங்களின் சர்ச்சையைத் தொடங்கிய பிறகு அதற்கு எதிராக, கதிர் நியூஸ் லயோலா கல்லூரி 100 ஏக்கர் அரசு நிலத்தை 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து ஆக்கிரமித்து உள்ளதாக செய்தியை வெளியிட்டு இருந்தது.

லயோலா கல்லூரி : 

சென்னையில் இயங்கி வரும் லயோலா கல்லூரி கிறிஸ்தவ அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. லயோலா கலோரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கையில், 1924-ம் ஆண்டில் மார்ச் 10-ம் தேதி அன்றைய மெட்ராஸ் கவர்னர் லார்ட் வில்லிங்டன் மூலம் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

கல்லூரி அமைப்பதற்காக டேங்க் பங்க் ரோடு மற்றும் ரயில்வே லைன்-க்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலத்தை 60,000 ரூபாய்க்கு விலைக் கொடுத்து வாங்கியுள்ளதாக இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளனர். 1925-ம் ஆண்டில் ஜூனில் இருந்து 75 மாணவர்களுடன் கல்லூரி இயங்க தொடங்கியது. கல்லூரி தொடங்கும் காலத்திலேயே 50 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி தொடங்கியதாக லயோலா கல்லூரி வெளிப்படையாகவே கூறுகிறது.

பரவி வரும் தகவலில், லயோலா கல்லூரி அமைந்து இருக்கும் நிலப்பரப்பு 96 ஏக்கர் எனக் கூறி உள்ளனர். ஆனால், கதிர் நியூஸில் 99 ஏக்கர், 100 ஏக்கர் என பொதுவாக ஒரு அளவைக் கூறியுள்ளனர். லயோலா கல்லூரி அமைந்து இருக்கும் மொத்த நிலப்பரப்பளவு 96 ஏக்கர் என லயோலா கலோரியின் இணையதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அரசு நிலமாக இருந்தால், சட்டரீதியான வழக்குகள் கல்லூரி நிர்வாகத்தின் மீது பாய்ந்து இருக்கும். ஆனால், அது தொடர்பாக எந்தவொரு தகவல்களும், செய்திகளும் நமக்கு கிடைக்கவில்லை.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலின் படி, லயோலா கல்லூரி அமைந்து இருக்கும் இடம் சிவன் ஆலயத்திற்கு சொந்தமானது என வதந்தியை பரப்பி உள்ளனர். இதற்கு முன்பாக அங்கு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது .

அதன் தொடர்ச்சியாக, கதிர் நியூஸ் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவான போஸ்ட் ஒன்றை தவறாக பரப்பி வருகின்றனர்.

1924-ல் லயோலா கல்லூரிக்கு 50 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அரசிடம் குத்தகைக்கு எடுத்து இருந்தால் விலைக்கு வாங்கியதாக வெளிப்படையாகக் கூறி இருக்க முடியாது அல்லவா.

கல்லூரி அமைந்து இருக்கும் இடம் அரசுக்கோ அல்லது சிவன் ஆலயத்திற்கு சொந்தமானதாக இருந்தால் தகுந்த ஆதாரங்களை அளித்து இருக்க வேண்டும். இல்லையென்றால், கல்லூரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கை தொடரலாம் . ஏன் சமூக வலைதளங்களில் கம்பு சுத்த வேண்டும் என பலரும் கிண்டல் செய்து கமெண்ட் செய்வதையும் பார்க்க முடிந்தது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button