தேர்தல் கருத்துக்கணிப்பை நாங்கள் வெளியிடவில்லை-லயோலா நிர்வாகம்!

பரவிய செய்தி
லயோலா கருத்துக்கணிப்பு- வாக்கு சதவீதம் திமுக கூட்டணி 49%, அதிமுக கூட்டணி 32%, மற்றவை 19% .
மதிப்பீடு
விளக்கம்
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஏப்ரல் 5-ம் தேதி சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான ” பண்பாடு மக்கள் தொடர்பகம் ” கருத்துக்கணிப்பை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டனர்.
பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பில் திமுக கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தனர். இதையடுத்து, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு என செய்தி சேனல்கள் வெளியிட்டனர்.
எனினும், சன் டிவி உள்ளிட்ட சில செய்தி சேனல்கள், இணையச் செய்திகளில், சமூக வலைதளங்களில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என வெளியிட்டு வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்து லயோலா கல்லூரி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
லயோலா நிர்வாகத்தின் அறிக்கையில் ” பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் அறிக்கைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும், கடந்த சில தேர்தல்களாக அவர்களின் நிர்வாகத்தின் சார்பில் எந்தவித கருத்துக்கணிப்புகளும் வெளியிடுவதில்லை எனவும், அதுபோன்ற கருத்துக்கணிப்புகளை வெளியிடும் துறைகள் ஏதும் தங்கள் நிர்வாகத்திடம் தற்போது இல்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என வெளிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். கட்சி ஊடகங்கள் கருத்துக்கணிப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க இவ்வாறு தவறான தகவலை வெளியிடுவது தேர்தல் சமயத்தில் நடக்க வாய்ப்புகள் உண்டு.
ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக இருப்பது இயல்பாகி போனது. ஆகையால், மக்கள் இதுபோன்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை கருத்தில் கொள்ளாமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.