லயோலா சொத்துவரி பாக்கி அறிவிப்பை வைத்தே கோவில் நில குத்தகை முடிவதாக விஷம பதிவு !

பரவிய செய்தி
கோயில் நில குத்தகை இந்த ஆண்டு முடிவடைகிறது. லயோலா கல்லூரி வரி செலுத்த வேண்டிய அறிவிப்பு. புதுப்பித்தல் நிறுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் பரவலாக பகிரவும். பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்துறை
மதிப்பீடு
விளக்கம்
சென்னை லயோலா கல்லூரியின் இடம் கோவிலுக்கு சொந்தமானது, அதன் குத்தகை இந்த ஆண்டு முடிவடைகிறது என்றும், அதை புதுப்பித்தல் நிறுத்தப்பட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்துறை லயோலா கல்லூரிக்கு அளித்த நோட்டீஸ் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. வாசகர் அனுப்பிய பதிவு பற்றி தேடுகையில் ஜனவரி மாதமே இப்பதிவு பகிரப்பட்டு இருக்கிறது. தற்போது மீண்டும் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
லயோலா கல்லூரி அமைந்து இருக்கும் இடம் சென்னையில் உள்ள பிரபல சிவன் ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்றும், அந்த கல்லூரிக்கான 96 வருட குத்தகை 2021 உடன் முடிவடைகிறது என 2019-ல் இருந்தே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
விரிவாக படிக்க : லயோலா கல்லூரியின் நிலம் சிவன் கோவிலுக்கு சொந்தமானதா ?| வதந்தி பதிவு !
லயோலா கல்லூரியின் 96 வருட குத்தகை 2021 ஆண்டுடன் முடிவடைவதாக 2019-லேயே பரப்பி இருந்தனர். தற்போது 2021-ல் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்துறை அளித்த நோட்டீஸ் கொண்டு மீண்டும் வதந்தி பரப்பி இருக்கிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்துறை அளித்த நோட்டீஸ் ஆனது லயோலா கல்லூரி செலுத்த வேண்டிய சொத்து வரி பாக்கிக்காக அளிக்கப்பட்டதே, அதை வரி என மட்டுமே பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்த நோட்டீஸ் குறித்து தேடுகையில், ” சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாத லயோலா கல்லூரியை எச்சரித்து மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர் ” என 2020 ஜனவரி 30-ம் தேதி நியூஸ்18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.
“நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி நிர்வாகம் சென்னை மாநகராட்சிக்கு நான்கு அரையாண்டுகளாக 96,46,688 ரூபாய் சொத்துவரி கட்டாமல் நிலுவை வைத்துள்ளது ” என நோட்டீஸ் உடன் இடம்பெற்று இருக்கிறது. இந்த நோட்டீஸ் தொடர்பான தகவல் அன்றைய செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கோயில் நில குத்தகை இந்த ஆண்டு முடிவடைகிறது, புதுப்பித்தல் நிறுத்தப்பட வேண்டும் என பரவும் தகவல் தவறானது.
லயோலா கல்லூரி சொத்து வரி பாக்கி வைத்த காரணத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை 2020-ல் அந்த நோட்டீஸ் வழங்கி இருக்கிறது.
2020-ல் வழங்கியதை சொத்துவரி நோட்டீஸ் எனக் குறிப்பிடாமல் வெறும் வரி என்றும், சொத்துவரி நோட்டீசை காண்பித்து கோவில் நில குத்தகை புதுப்பிப்பதாக 2021-ல் தவறாக பரப்பி இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.